jump to navigation

போன மச்சான் போயே போனான்! Wednesday June 8, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

மறந்தவங்க எல்லாரும் கொஞ்சம் கொசுவர்த்திக் கொளுத்தி… சரி, சரி சொல்ல வந்தது புரிஞ்சுதுல்ல, அதான் வேணும். நாந்தேன்; உசுரோடத்தான் இருக்கேன்.

புதுசு கண்ணா புதுசு (அடச்சே! இந்தக் கருமாந்திரத்த நானும் உபயோகிக்கணுமா? ஆனாலும், ஒரு ‘வரலாற்றில் எதையும் மறைக்கக்கூடாது, மறக்கக்கூடாது என்பதால், இந்தக் காலகட்டத்தில் இது நிகழ்ந்தது என்று பதிவு செய்யும் வண்ணம்…… போச்! போச்! எல்லாரும் அதுக்குள்ளாற தூங்கிட்டாங்க!) ரேஞ்சுக்கு வாழ்க்கையில எல்லாம் புதுசு புதுசா நடக்க ஆரம்பிச்சிருக்கா, அதான் போன மச்சான் திரும்பி வரல.புது இடம், புது வேலை, புதுப் பொண்டாட்டி – எல்லாமே புதுசு. வாழ்க்கைல ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.

இதுக்கு முன்னாடி பதிவுல வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி. ரஜினி ராம்கி மற்றும் க்ருபாவுக்கு ஒரு கிலோ(சும்மா தோராயமாத்தான்) கூடுதல் நன்றி(வரவேற்புல கலந்துகிட்டாங்கப்பா).

‘எனது இந்தியப் பயண அனுபவங்கள்’-னு ஒரு காவியம் எழுதலாம்தான், ஆனா எங்கெ நான் அத எழுதப்போயி, கோடானு கோடி மக்கள் வந்து படிச்சி, சர்வர்(server) படுத்துக்குமோன்னு பயந்துகிட்டே எழுதாம விட்டுடப் போறேன்(இவனுங்க ரவுசு தாங்கலப்பா – பொதுஜனம்).

கெடைக்கிற கேப்புல(gap) தமிழ் வலையுலகம் பக்கம் தல வச்சா ஒரே ரத்த ஆறா ஓடுது. இவங்க பண்ற ரவுசு தாங்கலப்பா. எங்கூரு பக்கம் ஒரு சொலவடை சொல்வாங்க. “ஆந்தையப் பழிச்சிதாம் மோந்தை.” இப்போ எதுக்கு இதச் சொல்றேன்னு கேக்கறீங்களா? சிறு பத்திரிகை(ஹை, இலக்கியம் பேசியாச்சே!) உலகத்துல குழு குழுவா சண்டை போட்டுக்கிறாங்கன்னு சொல்லிக்கிட்டு, அத விட கேவலமா இங்கெ அடிச்சிக்கிறாங்க(வந்துட்டாண்டா புதுசா எதையோ கண்டுபுடிச்சிட்டா மாதிரி!).

நல்லபடியா சண்ட போடுங்க. எனக்குப் பொழுதாச்சு; நான் வக்கீலுக்குப் படிக்கப் போறேன். எதுக்கா? அட, கேப்புல கெடா வெட்டி நல்லா காசு பாக்கலாம்ல அதுக்குத்தான்!

Advertisements

நமக்கு விசேஷங்க! Monday March 7, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

இணையத்துல எல்லாரும் நல்லாருக்கீங்களா? நமக்கு கொஞ்ச நாளா(எவ்வளவு கொஞ்சம்?!) சில பல வேலைகள். சரி, ஊருக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா, அங்கெ போயும் கால்ல சக்கரத்தக் கட்டிக்கிற மாதிரி வேலைக்கு ஏற்பாடு செஞ்சுப்புட்டேன். பாருங்க, இதுக்குப் பேரு ஓய்வா? செய்றத செஞ்சிப்புட்டு வியாக்கியானம் பேசாதடான்னு நீங்க சொல்றது என் காதுல விழலை.

அப்டி என்னத்த செஞ்சிப்புட்டேன். எல்லாரும் வாழ்க்கைல செய்றது தானே. என்னமோ போங்க. ஒண்ணும் புரியல, ஆனா என்னென்னவோ நடக்குது.

சரி சரி விஷயத்துக்கு வர்றேன். கீழ இருக்குறத சொடுக்குங்க. உங்களுக்கே வெவகாரம் புரியும் 🙂

Design © kirukkalgal.com

அப்போ நான் ஃபிளைட் புடிக்கப் போகணும், வரட்டுங்களா?

உங்க வாழ்த்துக்கெல்லாம் நன்றி!

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு… Saturday March 5, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

தமிழ்மணம் இன்று கனிசமான வாசகர்களைக் கொண்டுள்ளது. நல்லதோ கெட்டதோ வம்போ தும்போ எதுவாக இருந்தாலும் தமிழ் இணைய உலகில் ஒரு மைல்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது. காசி என்ற தனிமனிதரின் ஆர்வமும் உழைப்பும் இதற்கு முழுமுதற் காரணம் என்பதை எல்லோரும் அறிவார்கள்(என்று நம்புகிறேன்).

தமிழ்மணத்தை அளித்ததற்கு வலைப்பதிவர்கள் மற்றும் அதன் வாசகர்கள் செய்யக்கூடிய ஒரு காரியம் நன்றி சொல்வதுதானே? ஆமாம், அதான் எக்கச்சக்க முறை சொல்லியாகவிட்டதே! என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். அதையே கொஞ்சம் சம்பிரதாய முறையில் சொல்லலாம்.

“நன்கொடை தாரீர்” என்று அவர் கேட்டிருக்கும் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது. அடிப்படையில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நம்மிடையே குறைவு என்பதே ஒரு தொழில்நுட்பனாக நான் கண்ட அவதானிப்பு.

காசி வலைப்பதிவு ஆரம்பித்த முதல்பதிவில் சொல்லியிருந்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது(வலைப்பதிவு உலகில் அது ஒரு கனாக்காலம்!).“இந்த டிஎம்ஸ் இருக்காரே, அவர் மாதிர் நம்மளால பாட முடியாது அதனால பாடுறதையே மறந்துடலாம். ஆனா, இந்த எஸ்பிபி இருக்காரே கொஞ்சம் ஆசை காட்டுவார். அவர் பாடுற மாதிரி பாடிப்பாக்கலாம்னு கொஞ்சம் ஆசை வரும். அந்த மாதிரி எல்லாரும் பண்றாங்களே, நாமளும் செஞ்சு பாக்கலாம்னு…” – இப்படி ஆரம்பித்தவர்தான்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். கொஞ்ச நாளாகவே நான் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம். வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக காசிக்குப் பரிசு தருவது.(‘நன்கொடை தாரீர்’-க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தேவையில்லாமல் சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது).

அவருக்குத் தெரியாமல் இதைச் செய்யவேண்டும் என்று நம்பகமான மூவரிடம் தனிச்சுற்றில் போன வாரம் எப்படிச் செய்யலாம் என்று யோசனை கேட்டிருந்தேன். ஆனால் அதில் சிக்கல்கள் இருப்பது பிறகு தெரிய வந்தது. அதனால், செய்வதை பொதுவிலேயே கேட்டுச் செய்யலாம் என்று முடிவெடுத்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.

என்னுடைய பரிந்துரை: Amazon பற்றுச்சீட்டு (gift certificate: வார்த்தை உதவி நன்றி: சிங்கப்பூர் ஒலி வானொலி).

இதை முன்னெடுத்து நடத்த அமெரிக்காவில் உள்ள ஒருவர் வேண்டும். நானே செய்வேன், ஆனால், நாளை மறுதினம் ஒருமாத விடுப்பில் இந்தியா செல்கிறேன். போய்விட்டு வந்து செய்யலாம் என்றால், அதற்குள் வசந்த காலம் ஆரம்பித்துவிடும். வீட்டுக்குள் அடைந்து கிடந்த அமெரிக்கவாசிகள் ஹாயாக ஒரு டவுசர் மாட்டிக்கொண்டு வெளியில் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ்மணம் எல்லாம் அப்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி ஆகிவிடும். (சென்ற கோடையில் வலைப்பதிவுகள் காற்று வாங்கியது, அதைப்பற்றிப் பேச்சு அடிபட்டது ஞாபகம் இருக்கிறதா?)

அமெரிக்க வாழ் வலைப்பதிவர்களே வாசகர்களே, யாராவது முன் வந்து இதைச் செய்ய முடியுமா? (யாரும் முன்வரவில்லையென்றால் திரும்பி வந்து நானே செய்வேன்).

இது தவிர தொலை நோக்கில தமிழ்மணம் தளத்தை பராமரிப்பு செலவுக்கும் வழி செய்ய வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி பிறகு.

பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தோ உங்கள் வலைப்பதிவில் பதிந்தோ இதில் உள்ள Logistics பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.

தொடரும் எரிதங்களின் தொல்லை Friday January 28, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

எரிதங்களின் தாக்குதல் மிகவும் அதிகமாகிவிட்டது. இதைச் சரி செய்ய இப்போது நேரமில்லாத காரணத்தால் மறுமொழிகள் இடுவதை ஒட்டுமொத்தமாக முடக்கி வைத்துள்ளேன். WordPress-ஐ நிறுவியிருக்கிறேன், ஆனால் இங்கிருந்து அங்கே எல்லாவற்றையும் கொண்டுபோகும் PHPயில் பிரச்சினை. ஒரு நாள் அதோடு போராடி அப்படியே நிற்கிறது. ஒரு நாள் உட்கார்ந்து இன்னும் சில வேலைகளையும் முடிக்க வேண்டும். என்னத்தப் பண்ண போங்க…

விசாரணையும் விதண்டாவாதமும் Thursday January 13, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

Law & Order என்று ஒரு டிவி மிகவும் பிரபலமான தொடர் NBCயில் வரும். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனைக் கதைப் பிண்ணுவதே இதன் வெற்றியின் ரகசியம்(1990லிருந்து வருகிறது இந்தத் தொடர்). Ripped from headlines என்றுதான் விளம்பரமே கொடுப்பார்கள். நியூ யார்க் நகரத்தில் நடக்கும் சம்பவங்களே இடம்பெருவதால் அது என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. இதன் வெற்றியைத் தொடர்ந்து Law & Order: Special Victims Unit, Law & Order: Criminal Intent என்று மேலும் இரண்டு தொடர்கள் NBCயில் வருகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் Law & Order: Criminal Intent தொடரை சில சமயம் பார்ப்பதுண்டு. இதில் முக்கிய அம்சமே குற்றம் சாற்றப்பட்டவரை விசாரிப்பதுதான். ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவதுபோல வெளியிலிருந்து உள்ளே பார்த்தால் தெரியும் ஆனால், உள்ளே இருந்து வெளியில் பார்த்தால் தெரியாத அறைக்குள்தான் விசாரணை நடக்கும். இது காவல் நிலைய விசாரணை. இது தவிர வீட்டில் விசாரணை, வெளியில் விசாரணை என்று பல வழிகளிலும் விசாரணை நடக்கும்.

இப்பொழுது அது பற்றி என்ன இப்படி நீட்டி முழக்க வேண்டியிருக்கிறது என்று கேட்பது புரிகிறது. இந்த விசாரணையின் முக்கிய அம்சமே, குற்றம் சாற்றப்பட்டவரின் மனதிடத்தைச் சோதித்துப் பார்ப்பதுதான். எல்லாருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் mind game விளையாடுவது. அவர் தடுமாறிய வேளையில் உளறிக் கொட்டினால்(உண்மையாகவே தவறு செய்தவர் கண்டிப்பாக உளறுவார்) பிடித்துப் போடவே இந்த விளையாட்டு. விசாரணை செய்பவர்களுக்கு(Investigators) இந்த விளையாட்டு சர்வ சாதாரணம். அதுதான் அவர்கள் தொழிலே!

உண்மை உலகத்தில் நடக்கும் விசாரணைக்கும் மேலே குறிப்பிட்ட டிவி விசாரணைக்கும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா மட்டுமல்ல, உலகெங்கும் விசாரணையாளர்கள் இந்த விளையாட்டை விளையாடித்தான் குற்றம் சாற்றப்பட்டவர்களை விசாரிப்பார்கள் என்று நினைக்கிறேன். என்ன, நாட்டுக்கு நாடு மனித உரிமை மதிப்பிற்கேற்றவாறு இதன் அளவுகோல் மாறும்.

சரி, இன்னும் மேட்டருக்கு வரலியே?!

எதோ சங்கராச்சாரியாராம், அவரப் புடிச்சி உள்ளெ போட்டுட்டாங்களாம், ஊரெல்லாம் ஒரே பேச்சா இருக்கு. திருட்டு விசிடி தொல்லை சினிமா உலகத்தோட நிக்காம இந்த விஷயத்திலும் பூந்து வெளையாடிருக்கு. சன் டிவியில் சங்கராச்சாரியார விசாரிக்கிற காட்சியப் போட்டுக் காட்டினாங்களாம். அதுல கொஞ்சம் கேள்வி-பதில்(அதாவது விசாரணை) இருக்காம். நாமக்கல் ராஜாவும் அகரதூரிகை அருணும் எழுதிருக்காங்க. அருண் சொல்றார் “கேள்வியெல்லாம் சிண்டு முடியற மாதிரி” இருக்காம்.

விசாரனை பண்றதுன்னா, அவருக்கு பாதபூஜை பண்ணிட்டு, “ஸ்வாமி, நீங்கள் சங்கர்ராமனை கொலை செய்ய ஆட்களை ஏவினீர்களா? உங்கள் அருள்வாக்குக்காகக் காத்திருக்கிறோம். நீங்கள் பூஜை புணஸ்காரங்களை முடித்துவிட்டு சாவகாசமாக சொன்னால் போதும். நாங்கள் மோட்சம் பெறுவோம்.” இப்படில்ல பண்ணனும்? அத வுட்டுப்புட்டு, சிண்டு முடியற மாதிரி கேள்வி கேட்டா ஞாயமா? அதுதான் விசாரணைக்கு அழகா? அதுக்குத்தான் அவங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிப்புட்டு வந்திருக்காங்களா? ஙொப்புறான சத்தியமா எனக்குப் புரியலைங்க.

சங்கராச்சாரியார் எக்கேடு கெட்டா எனக்கென்ன, வாழ்ந்தா எனக்கென்ன. அது பத்தி எனக்குக் கவலையில்லை. உணர்ச்சி மேலிட்டு எழுதினா ஒரு சாதாரண விஷயத்தக் கூட சாதாரணமா பாக்கறது எவ்வளவு கஷ்டம்னு சுட்டிக்காட்டத்தான் இத போடுறேன். அதுவும் நேத்துலேர்ந்து ரொம்ப யோசிச்சதுக்கப்புறமா.

நடக்குறது விசாரணை, அதுல 1008 நொட்டாரம் சொன்னா வேற எப்டித்தான் உண்மை வெளியில வரும்னு புரியல போங்க. காதலன் படத்துல காட்டுற மாதிரி எறும்பு சாக்கு உள்ளாற அம்மணமா கட்டிப்போட்டு விசாரிச்சாங்களா, இல்லே குப்புறப் படுக்கப்போட்டு அங்கெ நாலு போடு போட்டாங்களா, வெறுமனே கேள்வி கேட்டதுக்கே இந்தப் பாடா.(தெரியுமப்பா, கோயில்ல இல்லாம வேற எங்கயாவது வச்சித் தீத்துக் கட்டினா தேவலையா-ங்றதுதான் கேள்வின்னு. அட, அத நெசமாத்தான் கேக்கறாங்களா, அதுவும் வீடியோ பதிவு நடக்குதுன்னு தெரிஞ்சும்?)

டிஷ் ஆண்டெனாவுல சானல் 610-ல சன் டிவி வரும்னு நினைக்கிறேன்(எங்கிட்ட அந்தக் கருமாந்திரம் இல்லை). அப்படியே NBC எந்தச் சானல்ல வருதுன்னு பாத்து Law & Order ஒரு ரவுண்டு பாத்துப்புட்டா தேவலை.

கஷ்ட காலம். இந்த கருமம் புடிச்ச விஷயத்துல நானும் ஒரு பதிவு போட வேண்டியதாப் போச்சு.

புத்தகப்பட்டியல் – 2(பா. ராகவன்) Saturday January 8, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

பட்டியல் – 1

பா.ராகவன் பட்டியல்

1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. விஷ்ணுபுரம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.

புத்தகப் பட்டியல் – 1(எஸ். ராமகிருஷ்ணன்) Saturday January 8, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

சென்னையில புத்தகக் கண்காட்சி நடக்குதுன்னு ஒருத்தர் வயித்தெரிச்சலக் கொட்டிக்கிட்டு இருக்கார்.

புத்தகம் வாங்குறது கொஞ்சம் பேஜாரான வேலை. எத வாங்கறதுன்னு தெரியாது. அதுவும் என்னெ மாதிரி கால்வேக்காடுகளுக்குக் கேக்கவே வேணாம்.

ஒரு காலத்துல தமிழ் வலைப்பதிவுகள்ல ‘பட்டியல்’ போடுற சீசன் ஓடிக்கிட்டு இருந்தப்போ ரெண்டு பேர் போட்ட புத்தகப் பட்டியல சுட்டு வச்சிருந்தேன். இந்த நேரத்துல அத பொதுவுல வச்சா(பொதுச்சேவை?!), மழைக்கு ஒதுங்குற மாதிரி இந்தப் பக்கம் ஒதுங்கின உங்களுக்கு உதவியா இருக்கலாம்ங்ற நம்பிக்கைல எஸ்.ராமகிருஷ்ணன், பாரா ரெண்டு பேரும் போட்ட பட்டியல இங்க போடுறேன்.

எல்லாரும் வாங்கிப் படிச்சி இலக்கியவாதி ஆகறீங்களோ இல்லையோ இடர்க்கியவாதி(உபயம்: -/பெயரிலி) ஆகாம இருந்தா சரி.

எஸ். ராமகிருஷ்ணன் பட்டியல்

1) அபிதாம சிந்தாமணி. 1910 தொகுப்பு சிங்கார வேலு முதலியார். தமிழ்இலக்கிய கலைக்களஞ்சியம்.

2) திருக் குற்றாலக்குறவஞ்சி. சைவசிந்தாதப் பதிப்பகம்.

3) திருப்பாவை. ஆண்டாள். .

4) தனிப்பாடல் திரட்டு. சைவசித்தாந்த பதிப்பகம்.

5) சித்தர்பாடல்கள். பூம்புகார் பதிப்பகம்.

6) கம்பராமாயணம். .

7) சிலப்பதிகாரம். .

8) மணிமேகலை.

9) தேவாரம். திருவாவடுதுறை பதிப்பு.

10) அகநானு¡று புறநானு¡று கழக வெளியீடு.

11) என் சரித்திரம. உ.வே. சாமிநாதைய்யர்.

12) இந்திய தத்துவ ஞானம். லட்சுமணன்.

13) பாரதியார் கவிதைகள்.

14) சோழர்வரலாறு. நீலகண்ட சாஸ்திரி.

15) மகாபாரதம். ஸ்ரீனிவாசச்சாரியார் கும்பகோணம் பதிப்பு.

16) நாலாயிர திவ்யபிரபந்தம்.மூலமும் உரையும்.

17) பெளத்தமும் தமிழும். மயிலை சீனி வெங்கடசாமி..

18) குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்..

19) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு..

20) தாசிகளின் மோசவலை. மூவலு¡ர் ராமமிருதத்தம்மாள்.

21) தமிழ்நாடு. பயணக்கட்டுரைகள் தொகுப்பு. ஏ.கே. செட்டியார் .

22) தமிழ்சினிமாவின் கதை. அறந்தை நாராயணன்.

23) காஞ்சனை புதுமைபித்தன் சிறுகதைகள்..

24) அன்பளிப்பு. கு.அழகர்சாமி சிறுகதைகள்.

25) அழியாசுடர். மெளனி சிறுகதைகள்.

26) நட்சத்திரக் குழந்தைகள். பி. எஸ் ராமையா. சிறுகதைகள்.

27) பதினெட்டாம் பெருக்கு. பிச்சமூர்த்தி சிறுகதைகள்.

28) சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுதொகுதி.

29) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுதி.

30) வாழ்வில் ஒரு முறை. அசோகமித்ரன் சிறுகதைகள்.

31) அபிதா லா.ச.ரா நாவல்.

32) குறத்தி முடுக்கு. ஜி. நாகராஜன்..

33) வாசவேஸ்வரம் கிருத்திகா நாவல்.

34) சாலைத்தெரு கதைகள். ஆ.மாதவன் சிறுகதைகள்.

35) பொன்னியின் செல்வன். நாவல் கல்கி..

36) அம்மாவந்தாள். நாவல் தி.ஜானகிராமன்.

37) புயலிலே ஒரு தோணி. நாவல் ப.சிங்காரம்.

38) பிறகு. பூமணி நாவல்.

39) நித்யகன்னி. எம்.வி. வெங்கட்ராம்.

40) பசித்த மானுடம். கரிச்சான் குஞ்சு..

41) தலைமுறைகள். நீலபத்மநாபன்.

42) நீர்மை. ந.முத்துசாமி சிறுகதைகள்.

43) விடியுமா. குபரா.சிறுகதைகள்.

44) எட்டயபுரம். கலாப்ரியா கவிதைகள்.

45) ஆகாசம் நீலநிறம். விக்ரமாதித்யன் கவிதைகள்.

46) காகிதத்தில் ஒரு கோடு ஆத்மநாம் கவிதைகள்.

47) எஸ்தர். வண்ணநிலவன். சிறுகதைகள்.

48) தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். வண்ணதாசன். சிறுகதைகள்.

49) சிறகுகள் முறியும். அம்பை. சிறுகதைகள்.

50) முதலில் இரவு வரும். ஆதவன். சிறுகதைகள்.

51) கதவு. கி. ராஜநாராயணன். சிறுகதைகள்.

52) அத்துவானவேளை. தேவதச்சன். .

53) மின்னற்பொழுதே து¡ரம். தேவதேவன். கவிதைகள்.

54) இடைவெளி. சம்பத். நாவல்.

55) இரண்டு சிகரங்களுக்கு கீழ். ஆனந்த். குறுநாவல்.

56) நாய்கள். நகுலன். நாவல்.

57) பொய்த்தேவு. க.நா.சு. நாவல்.

58) புத்தம் வீடு. ஹெப்சிபா ஜேசுதாசன் நாவல்.

59) தமிழக நாட்டுப்புறபாடல்கள். தொகுப்பு .நா.வானமாமலை..

60) மு. ராகவையங்கர் ஆராய்ச்சி தொகுதிகள்..

61) பண்பாட்டு அசைவுகள். கட்டுரை தொ.பரமசிவன்.

62) கண்ணாடியுள்ளிருந்து. கவிதை தருமு அருப் ஜீவராம் பிரேமிள்.

63) பிரதாப முதலியார் சரித்திரம். நாவல்.

64) பரமார்த்த குரு கதைகள்..

65) அபிராமி அந்தாதி..

66) சாயாவனம். சா. கந்தசாமி நாவல்.

67) ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள். பிரபஞ்சன் சிறுகதைகள்.

68) விஞ்ஞானச்சிறுகதைகள். சுஜாதா. சிறுகதைகள்.

69) மானுடவாழ்வு தரும் ஆனந்தம். கோபிகிருஷ்ணன்.

70) கொல்லனின் ஆறுபெண்மக்கள் . கோணங்கி. சிறுகதைகள்.

71) வெயிலோடு போயி. சா. தமிழ்செல்வன் சிறுகதைகள்.

72) காற்றின் பாடல். சமயவேல் கவிதைகள்.

73) மீனுக்குள் கடல் பாதசாரி. கவிதைகதை..

74) கோடைகால குறிப்புகள். சுகுமாரன் கவிதைகள்.

75) சிற்பச்செந்நு¡ல்..

76) இரவுகள் உடையும். பா. ஜெயப்பிரகாசம். சிறுகதைகள்.

77) எக்ஸிஸ்டென்சியலிசம். எஸ்வி.ராஜதுரை. கட்டுரை.

78) இளங்கோவடிகள் யார்? தொ-மு.சி. ரகுநாதன். கட்டுரை.

79) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் .ஜெயகாந்தன். நாவல்.

80) ரப்பர் நாவல் ஜெயமோகன்.

81) வேர்கள் தொலைவில் இருக்கின்றன. பாவண்ணன். சிறுகதைகள்.

82) எண்பெருங்குன்றம் .முனைவர் வேதாசலம் சமணக்கட்டுரைகள்.

83) திருஅருட்பா. ராமலிங்க வள்ளலார்.

84) தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு. தமிழ்பல்கலைகழகவெளியீடு.

85) தமிழக வரலாறு. தமிழக அரசு வெளியீடு.இரண்டு தொகுதிகள்.

86) பெரியார் சிந்தனைகள். வே. ஆனைமுத்து தொகுப்பு.

87) மங்கலஇசை மன்னர்கள். பாலசுப்ரமணியம் தஞ்சை..

88) தென்னிந்திய கோவில் சாசனங்கள். தி.ந. சுப்ரமணியம்.

89) கண்மணி கமலாவுக்கு புதுமைபித்தன் கடிதங்கள்..

90) சுயம்புலிங்கம் கதைகள்..

91) சங்ககால சிறப்புபெயர்கள் மொ.அ. துரைஅரங்கசாமி.

92) கள்ளர் சரித்திரம். ந. மு. வேங்கடசாமி நாட்டார்.

93) தமிழகஊரும்பேரும். ரா.பி. சேதுப்பிள்ளை.

94) கூத்தநு¡ல்.

95) வ.உ.சி. கட்டுரைகள். மொத்த தொகுப்பு.

96) தென்குமரியின் கதை. அ.கா.பெருமாள் கட்டுரை.

97) குருஷேத்திரம் தொகுப்புநு¡ல் நகுலன்.

98) வாடிவாசல். நாவல் சி.சு. செல்லப்பா.

99) குமரிநிலநீட்சி. சு.கி.ஜெயகரன். கட்டுரை.

100) கருணாமிர்தசாகரம். இசைநு¡ல் ஆபிரகாம் பண்டிதர .

பா. ராகவன் பட்டியல்

எதுவும் தோன்றவில்லை Wednesday December 29, 2004

Posted by Pari(பரி) in பொது.
comments closed

இயற்கையின் எதிர்பாராத சீற்றத்தினால் மாண்ட உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தி, பிழைத்தவர்களின் சிதைந்த வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் உதவி செய்வதுதான் முக்கியமாகப்படுவதால், பைத்தியக்கார வியாக்கியானங்களைக் கண்டுகொள்ளாமல் போவதே சரியான செயலாக இருக்க முடியும்.ரமணி எழுதியது:

——-

5. இனியும் தொடராக, ஆனால், சிறிய அளவிலே நடுக்கத்தின் பின்விளைவு எதிரொலிக்கும்; ஆனால், அ·து பெருமளவிலே உயிர்கொல்லுமளவிலே இருக்கப்போவதில்லை. இனி அப்படியேதும் உயிர்கொல்லும் நிலையின் நிலநடுக்கமும் ஊழியலையும் வருமானால், அது கொல்லவேண்டியவர்கள் யார் யார் என்ற பட்டியலிலே அடங்கும் சிலர்:

  1. “கொட்டாஞ்சேனை ஆஞ்சநேயர் இது நடக்கமுதல்நாள் ஒற்றைக்கண் திறந்து பார்த்தார்” என்கிறவர்கள்
  2. “ஸ்ரீரங்கம் கோபுரம் உயர்ந்து போனதாலே” என்கின்றவர்கள்
  3. “அல்லாவின் அல்வாக்கூத்து, அல்லேலுயாவின் பராட்டாகொத்து” என்கிற படுபாவிகள்
  4. “ஜெயேந்திரரைப் புடிச்சதால தெய்வக்குத்தம்; வீரப்பனைச் சுட்டதால வீரமாகாளி ஆவேசம்” என்று விபரீதமாக விக்கெட்டு வீழ்த்துகின்றவர்கள்
  5. “எண் சாத்திரப்படி வந்த இழவு” என்று எதிர்காலத்துக்கும் இழவுக்குறி எடுத்துச் சொல்கின்றவர்கள் & செல்கின்றவர்கள்
  6. “நொஸ்ரடாம், காண்டம்” என்ற உசாத்துணை அகவுகின்ற கிளிகள்
  7. “திருவாதிரை நட்சத்திரத்திலே வைகை பெருகி பிட்டுக்கு மண்சுமந்த நாளிலே, இந்தக்கடல்…..” என்று அறிவியல் சாராமல் முழுக்க முழுக்க காகம் குந்தியதும்-பனம்பழம் கழண்டதும் கதை சொல்கிற ஆசாமிகள்

ஆதிரைநாளிலே தீர்த்தமாடிய காரைநகர் சிவன் கோவில் காரர்களுக்கும் மோட்சவிளக்கு; முல்லைத்தீவிலே தேவாலயத்திலே யேசு பிறந்ததைக் கொண்டாடியவர்களுக்கும் இறப்பு; நிந்தாவூரிலோ, காத்தான்குடியிலோ மதராஸிவிலே குரான் ஓதிக்கொண்டிருந்த நாற்பது சிறாருக்கும் அதே(¡)கதி; கடவுளையும் எண்கணக்கையும் இழுத்து உள்ளாற அமைதிப்படுத்திக்கொள்ளாலாம்; ஆனால், அதுவே தீர்வாகாது; கொடுத்தவன் எடுத்தான் என்பது அரூபத்தீர்வாகலாம்; நடைமுறைக்கு அடுத்த நிலைக்கு என்ன வழி என்பதைக் காணவேண்டும்.

——-

நடைமுறைக்கு ஒத்து வரும் செயல்களைப்பற்றி மட்டும் பேசினால் உருப்பட்டுவிடுவோம்.

பேச்சாளப் பெருமக்களே! Monday December 6, 2004

Posted by Pari(பரி) in பொது.
comments closed

மிசௌரி தமிழ்ச்சங்கத்துல வருஷா வருஷம் முத்தமிழ் விழா-ன்னு ஒண்ணு நடத்துவாங்க(வோம்). முத்தமிழ்-னா இயல், இசை, நாடகம்-னு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். பேருக்கேத்தமாதிரி எல்லாமும் இருக்கோ இல்லையோ, ஒரு கலந்துகட்டி நிகழ்ச்சியா இருக்கும்னு வச்சிக்குங்களேன். இதப் படிக்கிற நீங்க அமெரிக்காவுல இருந்தா கண்டிப்பா ஒரு கேள்வி மனசுல வந்திருக்கும். என்ன கேள்வியா? அதே தான்!

உண்டு, உண்டு. “ஓ போடு” முதல் “மம்முத ராசா” வரைக்கும் பொடிசுங்கள ஆட்டுவிக்கற வேலை இங்கெயும் உண்டு. இந்த வருஷ ஆட்டம் “அப்படிப் போடு போடு”பயப்படாதீங்க; பரத நாட்டியமும் உண்டு. பிரச்சினை என்னன்னா, இத நுணுக்கமா ரசிக்கிற மக்கள் எவ்ளோ பேர் இருக்காங்கன்னு தெரியல.

சரி, அது கெடந்துட்டுப் போவுது; விஷயத்துக்கு வரலாம். ஒரு நாள் தலைவர் கூப்பிட்டு, “ராசா, செம்மொழியப் பத்தி பேசு ராசா”-ன்னு ரொம்ப அமைதியா ஒரு குண்டு போட்டார். எனக்கு சிரிப்புத் தாங்க முடியல. அவர் விடாக்கண்டனா சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தார். இது ஏதுடா வம்பாப் போச்சுன்னு, ‘பின் விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு’-ன்னு சொல்லிட்டு வேற வழியில்லாம ஒத்துக்கிட்டு வசதியா மறந்தே போயிட்டேன்.

வாழ்க்கைல நாலு பேருக்கு முன்னாடி நின்னதே இல்ல. இதுல பேச்சு வேறயா. சுத்தம்.

ஆறாவது படிக்கிறப்போ ‘குறள் ஒப்பித்தல்’ போட்டியில தெரியாத்தனமா பேர் குடுத்து, 50 குறள்கள(5 அதிகாரம்) நெத்தி வீங்க(அட, விழுந்து விழுந்துங்க!) மனப்பாடம் செஞ்சு தூக்கத்துல எழுப்பி ‘நீட்டம்’ என்று நடுவில் வார்த்தை வரும் குறள் சொல்லுன்னு கேட்டா ஒளறி வைக்கிற அளவுக்கு பித்துப் பிடிச்சி, மொத பரிசு வாங்கினதுக்கப்புறம்(அந்தச் சான்றிதழ், அதாங்க சர்ட்டிபிகேட் இன்னும் இருக்கான்னு தெரியல), கவுண்டமணி பாணியில ‘இது ஆவுறதில்ல’-ன்னு ஒதுங்கியாச்சு.(இது முழுக்க ஒரு பத்தி/பாரா. எதாவது புரிஞ்சுதா?!)

என்னத்தப் பேச, எப்படிப் பேச? ஒரு எழவும் புரியல. சனிக்கிழமை காலைல ஹாய்யா எந்திரிச்சி ஏற்கனவே பத்ரி கிட்ட வாங்கி வச்சிருந்த அவரோட வலைப்பதிவு இடுகை சுட்டிகள், அண்ணன் கூகுள், பெரியண்ணன் மதுரைத் திட்டம்-ன்னு ஒரு ரவுண்டு வந்தா ஒரே ஒதறல் எடுக்க ஆரம்பிச்சிடிச்சி. நேரம் வேற போவுது. ஒத்திகை பாத்தா நல்லா இருக்கும். ஒத்திகையா? நல்ல கூத்து போங்க! என்னத்தப் பேசுறதுன்னே தெரியல, இதுல ஒத்திகையாவது மண்ணாவது!

பேப்பர்ல எதோ கிறுக்கி எடுத்துக்கிட்டு ஓடிட்டேன். இன்னும் என்னத்தப் பேசப்போறேன், எப்படிப் பேசப்போறேன்னு தெரியல.(இந்த மாதிரி குருட்டு தைரியம் எப்பவும் கூட இருக்கும்.) ஒரு வழியா மேடைக்கு முன்னாடி போய், சுமாரா 200 பேருக்கும் மேல இருக்கற கூட்டத்தப் பாத்து எதோ ஒளறிட்டு, கொஞ்சம் செண்டிமெண்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன்!

இதுல பெரிய பிரச்சினை என்னன்னா, எப்டி ஆரம்பிக்கிறதுன்னு சுத்தமா ஐடியாவே இல்ல!

‘பெருமதிப்பிற்குரிய இவர்களே, அவர்களே, உவர்களே’ – இது எனக்கு ஒத்து வராத சமாச்சாரம்!

(உக்கும்.. உனக்கு எந்த ‘சம்பிரதாயம்’தான் ஒத்து வந்திருக்கு-ன்னு யாரோ முணுமுணுக்கறாங்க)

முன்னாடி போய் நின்னதும் சத்தியமா இப்டித்தான் ஆரம்பிச்சேன்.

“வேலியில போற ஓணான மடியில எடுத்து விட்ட கதை தெரியுமா? அந்த மாதிரி நம்ம தலைவர் என்னெ இன்னிக்கு இங்கெ நிப்பாட்டி வச்சிருக்கார். ஐயோ பாவம் நீங்க. ராத்திரி முழுக்க பேசி பிளேடு போடப் போறேன்.”

எனக்குக் குடுத்திருந்த நேரம் 10 நிமிஷம்தான். பேசி முடிச்சிட்டு வந்து “டைம் கீப்பர்” கிட்ட எவ்ளோ நேரம் பேசினேன்னு கேட்டா, 19 நிமிஷம்னு சொன்னார்!

(விட்டிருந்தா ரொம்ப நேரம் அறுத்திருப்பேன். பாவம் மக்கள் தூங்கிடுவாங்கன்னு விட்டுட்டேன் :P)

ஓ, பேச்சாளப் பெருமக்களே, உங்கள் அவஸ்தை இப்போது புரிகிறது!

இனிமே இது ஆவுறதில்ல.

ஒரு செய்தி; ஒரு படம் Wednesday December 1, 2004

Posted by Pari(பரி) in பொது.
comments closed

பெங்களூர் பிஷப் காட்டன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் தயாரித்த ராக்கெட் ஏவப்பட இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளாகத் தயாரித்த இந்த ராக்கெட் 10 அடி உயரம், மூன்று இன்ச் விட்டம், 7 கிலோ எடை கொண்டது(என்ன கொடுமை இது? முழுதாக மெட்ரிக் அளவில் சொன்னால் என்ன?). ஏவப்பட்டால் 3.2கிமீ முதல் 3.8கிமீ வரை பாயும். இதற்கு எடுத்துக் கொள்ளும் மொத்த நேரம் 12 நிமிடங்கள். முழுச் செய்தி.

தொடர்புடைய ஆங்கிலப் படம்: October Sky (IMDB Blockbuster)