jump to navigation

கத பொஸ்தகம் படிக்குது புள்ள! Wednesday June 15, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

‘இதெல்லாம் உருப்புடுமா? பாட பொஸ்தகம் படிக்காம கத பொஸ்தகம் படிக்குது புள்ள.’ இது தான் பெரும்பாலான கிராமங்களில் “இலக்கிய”த்திற்கு வரவேற்பு. இது போதாதா நான் பொஸ்தகம் வாசிச்ச் அழகச் சொல்ல? என்னையெல்லாம் எதுக்கு நவன் கூப்பிட்டார்ன்னு தெரியல 😦
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே(அதாங்க சின்ன வயசுல), வீட்டுப் பரண்மேல் தூங்கிக் கொண்டிருந்த புத்தகங்களைத் “திருடி” படித்தவை எல்லாம் இப்போது நினைவில் இல்லை.

பாரதி வாழ்க்கை பற்றிய புத்தகம்
சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு
அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு
இன்னும் என்னென்னவோ சில புத்தகங்கள்.(இதுக்கெல்லாம் வெவரம் கேட்டா தொலைச்சிப்புடுவேன்!)

“விவரம் தெரிஞ்ச”துக்கப்புறம் படிக்க ஆரம்பிச்சதுன்னு சொன்னா, “கையில எது கெடச்சாலும்.” ஒரு சோகமான விஷயம் என்னென்னா, மிக்ஸர் பொட்டலம் போட்ட தினத்தந்தி, வீட்டுக்கு சாமான் வாங்குறப்போ கெடைக்கிற பேப்பர், பஜ்ஜி சுத்தின பேப்பர் – இப்டித்தான் கைல கெடைக்கும்.

பக்கத்து ஊர்ல இருக்கற லைப்ரரிக்குப் போனா -தப்பித் தவறி- அது தெறந்திருந்தா, மூடுற வரைக்கும், இன்னதுன்னு இல்லாம் எதையாவது எடுத்துப் படிக்கிறது ஒரு சுகம்.

ஓசில படிக்க ஆரம்பிச்சி, எப்பவாவது காசு குடுத்து வாங்கின “பாக்கெட்” நாவல் எல்லாம் நாலஞ்சி இங்கிலீஷ் வார்த்தை/வாக்கியம்(தமிழ் வழி ஆங்கில ஆசான்!) தெரிஞ்சிக்கத்தான் பிரயோசனமாச்சு. இந்த பாக்கெட் நாவலெல்லாம் “குப்பை, குப்பையைத் தவிர வேறெதுவுமில்லை”-ன்னு ரொம்ப சீக்கிரமே புரிஞ்சிப் போச்சு. ஆனா பாருங்க அப்பவெல்லாம் இந்த புத்தங்கள்தான் கடை வாசல்ல தொங்கும்.

Lifco Dictionary படிச்சிருக்கீங்களா? அட, நெசமாத்தான் கேக்கறேன்! Words often misspelled, idioms and phrases, proverbs, abbreviations, inventions – இப்டி நல்ல விஷயங்கள், யாரும் சொல்லிக்குடுக்காத விஷயங்கள் இருக்கும். வார்த்தைக்கு அர்த்தம் பாக்க பொரட்டுனதவிட, இந்தப் பகுதிகளப் படிக்கிறதுக்குப் பொரட்டுனதுதான் அதிகமா இருக்கும்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் – புதுமைப்பித்தன் பதிப்பகம்
புதுமைப்பித்தன் பல்வேறு பெயர்களில் பல இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. புதுமைப்பித்தனால் எழுதப்பட்டது என்று “நம்பப்படும்” சில கதைகளும் அடக்கம். (அந்தக் காலத்திலும் “தேவா”க்கள் இருந்திருக்கிறார்கள் போல.)

ஜெயகந்தன் சிறுகதைகள்(2 தொகுதிகள்) – கவிதா பதிப்பகம்
ஒரு குளிர்காலத்தில் துணையாய் இருந்தவை

சில நேரங்களில் சில மனிதர்கள்
படித்து முடித்துவிட்டு, சில மாதங்கள் சென்று எதேச்சையாக படத்தையும் பார்த்த அனுபவம் வித்தியாசமானது.

அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம்
மொழிபெயர்ப்பு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். அங்கங்கே இடைசெருகப்பட்டிருந்த கலாமின் ‘கவிதை’களைத் தாண்டிவிட்டேன். ஒரே மூச்சில் படித்து முடித்தது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

பொன்னியின் செல்வன்
நான் (பழைய) தஞ்சாவூர் மாவட்டக்காரன். இது போதாதா.

சிவகாமியின் சபதம்
மீண்டும் தொடமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறேன்.

தொல்காப்பியப்பூங்கா – மு. கருணாநிதி
மதுரைத் திட்டம் பற்றித் தெரியும் முன் வாங்கியது. அங்கங்கே இருக்கும் நகைச்சுவைக்காக, போனால் போகிறதென்று விட்டுவிடலாம்.

கிறுக்கல்கள் – ரா. பார்த்திபன்
புதுமை. வித்தியாசம். ஏகப்பட்ட உழைப்பு.

John Grisham – Legal Thriller expert
The Brethren
Street Lawyer
The Summons
A Painted House (Not a legal thriller.)
The Partner
Runaway Jury
(List may not be complete, as I don’t remember them all.)

Shall we tell the President? – Jeffrey Archer
–Just forget it. Not worth the time.

To Cut a long story short – Jeffrey Archer
–Collection of short stories. Some really short.

ஆங்கிலத்தில் ஒழுங்காக எழுத வேண்டும் என்று The Elements of Style வாங்கிப் படித்ததனால் தூண்டப்பட்டு வாங்கியது மொழி நடைக் கையேடு (நூல் அறிமுகம் 1, 2, 3)

Malgudi days
Short stories by RK Narayan. Could not go beyond 10 or so stories. Jut too plain.

9/11 Commission Report – The first chapter is a real life thriller.

மதுரைத் திட்டம் – கண்ணை மூடிக்கொண்டு சொடுக்கி எது கிடைக்கிறதோ அதைப் படிப்பது. கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், சித்தர் பாடல்கள், ஏரெழுபது, விவேக சிந்தாமணி, திருக்குற்றாலக் குறவஞ்சி, பாரதிதாசன் கவிதைகள், தேவைக்கேற்ப திவ்விய பிரபந்தம், தேவாரம், திருமந்திரம்….. இப்படியாகப் போகும். (OTL தமிழ் அகராதி உதவியுடன்.)

பாரதி, கைக்கு அடக்கமா சின்னதா பிளாஸ்டிக் உரையுடன்(ஆமா, இப்டித்தான் விளம்பரம் பண்ணுவாங்க) துணைக்கு இருக்கான்.

போங்கப்பா இந்த மாதிரி எழுத போரடிக்குது.

Advertisements

போன மச்சான் போயே போனான்! Wednesday June 8, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

மறந்தவங்க எல்லாரும் கொஞ்சம் கொசுவர்த்திக் கொளுத்தி… சரி, சரி சொல்ல வந்தது புரிஞ்சுதுல்ல, அதான் வேணும். நாந்தேன்; உசுரோடத்தான் இருக்கேன்.

புதுசு கண்ணா புதுசு (அடச்சே! இந்தக் கருமாந்திரத்த நானும் உபயோகிக்கணுமா? ஆனாலும், ஒரு ‘வரலாற்றில் எதையும் மறைக்கக்கூடாது, மறக்கக்கூடாது என்பதால், இந்தக் காலகட்டத்தில் இது நிகழ்ந்தது என்று பதிவு செய்யும் வண்ணம்…… போச்! போச்! எல்லாரும் அதுக்குள்ளாற தூங்கிட்டாங்க!) ரேஞ்சுக்கு வாழ்க்கையில எல்லாம் புதுசு புதுசா நடக்க ஆரம்பிச்சிருக்கா, அதான் போன மச்சான் திரும்பி வரல.புது இடம், புது வேலை, புதுப் பொண்டாட்டி – எல்லாமே புதுசு. வாழ்க்கைல ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.

இதுக்கு முன்னாடி பதிவுல வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி. ரஜினி ராம்கி மற்றும் க்ருபாவுக்கு ஒரு கிலோ(சும்மா தோராயமாத்தான்) கூடுதல் நன்றி(வரவேற்புல கலந்துகிட்டாங்கப்பா).

‘எனது இந்தியப் பயண அனுபவங்கள்’-னு ஒரு காவியம் எழுதலாம்தான், ஆனா எங்கெ நான் அத எழுதப்போயி, கோடானு கோடி மக்கள் வந்து படிச்சி, சர்வர்(server) படுத்துக்குமோன்னு பயந்துகிட்டே எழுதாம விட்டுடப் போறேன்(இவனுங்க ரவுசு தாங்கலப்பா – பொதுஜனம்).

கெடைக்கிற கேப்புல(gap) தமிழ் வலையுலகம் பக்கம் தல வச்சா ஒரே ரத்த ஆறா ஓடுது. இவங்க பண்ற ரவுசு தாங்கலப்பா. எங்கூரு பக்கம் ஒரு சொலவடை சொல்வாங்க. “ஆந்தையப் பழிச்சிதாம் மோந்தை.” இப்போ எதுக்கு இதச் சொல்றேன்னு கேக்கறீங்களா? சிறு பத்திரிகை(ஹை, இலக்கியம் பேசியாச்சே!) உலகத்துல குழு குழுவா சண்டை போட்டுக்கிறாங்கன்னு சொல்லிக்கிட்டு, அத விட கேவலமா இங்கெ அடிச்சிக்கிறாங்க(வந்துட்டாண்டா புதுசா எதையோ கண்டுபுடிச்சிட்டா மாதிரி!).

நல்லபடியா சண்ட போடுங்க. எனக்குப் பொழுதாச்சு; நான் வக்கீலுக்குப் படிக்கப் போறேன். எதுக்கா? அட, கேப்புல கெடா வெட்டி நல்லா காசு பாக்கலாம்ல அதுக்குத்தான்!