jump to navigation

நமக்கு விசேஷங்க! Monday March 7, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

இணையத்துல எல்லாரும் நல்லாருக்கீங்களா? நமக்கு கொஞ்ச நாளா(எவ்வளவு கொஞ்சம்?!) சில பல வேலைகள். சரி, ஊருக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா, அங்கெ போயும் கால்ல சக்கரத்தக் கட்டிக்கிற மாதிரி வேலைக்கு ஏற்பாடு செஞ்சுப்புட்டேன். பாருங்க, இதுக்குப் பேரு ஓய்வா? செய்றத செஞ்சிப்புட்டு வியாக்கியானம் பேசாதடான்னு நீங்க சொல்றது என் காதுல விழலை.

அப்டி என்னத்த செஞ்சிப்புட்டேன். எல்லாரும் வாழ்க்கைல செய்றது தானே. என்னமோ போங்க. ஒண்ணும் புரியல, ஆனா என்னென்னவோ நடக்குது.

சரி சரி விஷயத்துக்கு வர்றேன். கீழ இருக்குறத சொடுக்குங்க. உங்களுக்கே வெவகாரம் புரியும் 🙂

Design © kirukkalgal.com

அப்போ நான் ஃபிளைட் புடிக்கப் போகணும், வரட்டுங்களா?

உங்க வாழ்த்துக்கெல்லாம் நன்றி!

Advertisements

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு… Saturday March 5, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

தமிழ்மணம் இன்று கனிசமான வாசகர்களைக் கொண்டுள்ளது. நல்லதோ கெட்டதோ வம்போ தும்போ எதுவாக இருந்தாலும் தமிழ் இணைய உலகில் ஒரு மைல்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது. காசி என்ற தனிமனிதரின் ஆர்வமும் உழைப்பும் இதற்கு முழுமுதற் காரணம் என்பதை எல்லோரும் அறிவார்கள்(என்று நம்புகிறேன்).

தமிழ்மணத்தை அளித்ததற்கு வலைப்பதிவர்கள் மற்றும் அதன் வாசகர்கள் செய்யக்கூடிய ஒரு காரியம் நன்றி சொல்வதுதானே? ஆமாம், அதான் எக்கச்சக்க முறை சொல்லியாகவிட்டதே! என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். அதையே கொஞ்சம் சம்பிரதாய முறையில் சொல்லலாம்.

“நன்கொடை தாரீர்” என்று அவர் கேட்டிருக்கும் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது. அடிப்படையில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நம்மிடையே குறைவு என்பதே ஒரு தொழில்நுட்பனாக நான் கண்ட அவதானிப்பு.

காசி வலைப்பதிவு ஆரம்பித்த முதல்பதிவில் சொல்லியிருந்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது(வலைப்பதிவு உலகில் அது ஒரு கனாக்காலம்!).“இந்த டிஎம்ஸ் இருக்காரே, அவர் மாதிர் நம்மளால பாட முடியாது அதனால பாடுறதையே மறந்துடலாம். ஆனா, இந்த எஸ்பிபி இருக்காரே கொஞ்சம் ஆசை காட்டுவார். அவர் பாடுற மாதிரி பாடிப்பாக்கலாம்னு கொஞ்சம் ஆசை வரும். அந்த மாதிரி எல்லாரும் பண்றாங்களே, நாமளும் செஞ்சு பாக்கலாம்னு…” – இப்படி ஆரம்பித்தவர்தான்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். கொஞ்ச நாளாகவே நான் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம். வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக காசிக்குப் பரிசு தருவது.(‘நன்கொடை தாரீர்’-க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தேவையில்லாமல் சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது).

அவருக்குத் தெரியாமல் இதைச் செய்யவேண்டும் என்று நம்பகமான மூவரிடம் தனிச்சுற்றில் போன வாரம் எப்படிச் செய்யலாம் என்று யோசனை கேட்டிருந்தேன். ஆனால் அதில் சிக்கல்கள் இருப்பது பிறகு தெரிய வந்தது. அதனால், செய்வதை பொதுவிலேயே கேட்டுச் செய்யலாம் என்று முடிவெடுத்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.

என்னுடைய பரிந்துரை: Amazon பற்றுச்சீட்டு (gift certificate: வார்த்தை உதவி நன்றி: சிங்கப்பூர் ஒலி வானொலி).

இதை முன்னெடுத்து நடத்த அமெரிக்காவில் உள்ள ஒருவர் வேண்டும். நானே செய்வேன், ஆனால், நாளை மறுதினம் ஒருமாத விடுப்பில் இந்தியா செல்கிறேன். போய்விட்டு வந்து செய்யலாம் என்றால், அதற்குள் வசந்த காலம் ஆரம்பித்துவிடும். வீட்டுக்குள் அடைந்து கிடந்த அமெரிக்கவாசிகள் ஹாயாக ஒரு டவுசர் மாட்டிக்கொண்டு வெளியில் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ்மணம் எல்லாம் அப்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி ஆகிவிடும். (சென்ற கோடையில் வலைப்பதிவுகள் காற்று வாங்கியது, அதைப்பற்றிப் பேச்சு அடிபட்டது ஞாபகம் இருக்கிறதா?)

அமெரிக்க வாழ் வலைப்பதிவர்களே வாசகர்களே, யாராவது முன் வந்து இதைச் செய்ய முடியுமா? (யாரும் முன்வரவில்லையென்றால் திரும்பி வந்து நானே செய்வேன்).

இது தவிர தொலை நோக்கில தமிழ்மணம் தளத்தை பராமரிப்பு செலவுக்கும் வழி செய்ய வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி பிறகு.

பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தோ உங்கள் வலைப்பதிவில் பதிந்தோ இதில் உள்ள Logistics பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.