jump to navigation

எதுவும் தோன்றவில்லை Wednesday December 29, 2004

Posted by Pari(பரி) in பொது.
comments closed

இயற்கையின் எதிர்பாராத சீற்றத்தினால் மாண்ட உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தி, பிழைத்தவர்களின் சிதைந்த வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் உதவி செய்வதுதான் முக்கியமாகப்படுவதால், பைத்தியக்கார வியாக்கியானங்களைக் கண்டுகொள்ளாமல் போவதே சரியான செயலாக இருக்க முடியும்.ரமணி எழுதியது:

——-

5. இனியும் தொடராக, ஆனால், சிறிய அளவிலே நடுக்கத்தின் பின்விளைவு எதிரொலிக்கும்; ஆனால், அ·து பெருமளவிலே உயிர்கொல்லுமளவிலே இருக்கப்போவதில்லை. இனி அப்படியேதும் உயிர்கொல்லும் நிலையின் நிலநடுக்கமும் ஊழியலையும் வருமானால், அது கொல்லவேண்டியவர்கள் யார் யார் என்ற பட்டியலிலே அடங்கும் சிலர்:

  1. “கொட்டாஞ்சேனை ஆஞ்சநேயர் இது நடக்கமுதல்நாள் ஒற்றைக்கண் திறந்து பார்த்தார்” என்கிறவர்கள்
  2. “ஸ்ரீரங்கம் கோபுரம் உயர்ந்து போனதாலே” என்கின்றவர்கள்
  3. “அல்லாவின் அல்வாக்கூத்து, அல்லேலுயாவின் பராட்டாகொத்து” என்கிற படுபாவிகள்
  4. “ஜெயேந்திரரைப் புடிச்சதால தெய்வக்குத்தம்; வீரப்பனைச் சுட்டதால வீரமாகாளி ஆவேசம்” என்று விபரீதமாக விக்கெட்டு வீழ்த்துகின்றவர்கள்
  5. “எண் சாத்திரப்படி வந்த இழவு” என்று எதிர்காலத்துக்கும் இழவுக்குறி எடுத்துச் சொல்கின்றவர்கள் & செல்கின்றவர்கள்
  6. “நொஸ்ரடாம், காண்டம்” என்ற உசாத்துணை அகவுகின்ற கிளிகள்
  7. “திருவாதிரை நட்சத்திரத்திலே வைகை பெருகி பிட்டுக்கு மண்சுமந்த நாளிலே, இந்தக்கடல்…..” என்று அறிவியல் சாராமல் முழுக்க முழுக்க காகம் குந்தியதும்-பனம்பழம் கழண்டதும் கதை சொல்கிற ஆசாமிகள்

ஆதிரைநாளிலே தீர்த்தமாடிய காரைநகர் சிவன் கோவில் காரர்களுக்கும் மோட்சவிளக்கு; முல்லைத்தீவிலே தேவாலயத்திலே யேசு பிறந்ததைக் கொண்டாடியவர்களுக்கும் இறப்பு; நிந்தாவூரிலோ, காத்தான்குடியிலோ மதராஸிவிலே குரான் ஓதிக்கொண்டிருந்த நாற்பது சிறாருக்கும் அதே(¡)கதி; கடவுளையும் எண்கணக்கையும் இழுத்து உள்ளாற அமைதிப்படுத்திக்கொள்ளாலாம்; ஆனால், அதுவே தீர்வாகாது; கொடுத்தவன் எடுத்தான் என்பது அரூபத்தீர்வாகலாம்; நடைமுறைக்கு அடுத்த நிலைக்கு என்ன வழி என்பதைக் காணவேண்டும்.

——-

நடைமுறைக்கு ஒத்து வரும் செயல்களைப்பற்றி மட்டும் பேசினால் உருப்பட்டுவிடுவோம்.

Advertisements

பேச்சாளப் பெருமக்களே! Monday December 6, 2004

Posted by Pari(பரி) in பொது.
comments closed

மிசௌரி தமிழ்ச்சங்கத்துல வருஷா வருஷம் முத்தமிழ் விழா-ன்னு ஒண்ணு நடத்துவாங்க(வோம்). முத்தமிழ்-னா இயல், இசை, நாடகம்-னு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். பேருக்கேத்தமாதிரி எல்லாமும் இருக்கோ இல்லையோ, ஒரு கலந்துகட்டி நிகழ்ச்சியா இருக்கும்னு வச்சிக்குங்களேன். இதப் படிக்கிற நீங்க அமெரிக்காவுல இருந்தா கண்டிப்பா ஒரு கேள்வி மனசுல வந்திருக்கும். என்ன கேள்வியா? அதே தான்!

உண்டு, உண்டு. “ஓ போடு” முதல் “மம்முத ராசா” வரைக்கும் பொடிசுங்கள ஆட்டுவிக்கற வேலை இங்கெயும் உண்டு. இந்த வருஷ ஆட்டம் “அப்படிப் போடு போடு”பயப்படாதீங்க; பரத நாட்டியமும் உண்டு. பிரச்சினை என்னன்னா, இத நுணுக்கமா ரசிக்கிற மக்கள் எவ்ளோ பேர் இருக்காங்கன்னு தெரியல.

சரி, அது கெடந்துட்டுப் போவுது; விஷயத்துக்கு வரலாம். ஒரு நாள் தலைவர் கூப்பிட்டு, “ராசா, செம்மொழியப் பத்தி பேசு ராசா”-ன்னு ரொம்ப அமைதியா ஒரு குண்டு போட்டார். எனக்கு சிரிப்புத் தாங்க முடியல. அவர் விடாக்கண்டனா சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தார். இது ஏதுடா வம்பாப் போச்சுன்னு, ‘பின் விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு’-ன்னு சொல்லிட்டு வேற வழியில்லாம ஒத்துக்கிட்டு வசதியா மறந்தே போயிட்டேன்.

வாழ்க்கைல நாலு பேருக்கு முன்னாடி நின்னதே இல்ல. இதுல பேச்சு வேறயா. சுத்தம்.

ஆறாவது படிக்கிறப்போ ‘குறள் ஒப்பித்தல்’ போட்டியில தெரியாத்தனமா பேர் குடுத்து, 50 குறள்கள(5 அதிகாரம்) நெத்தி வீங்க(அட, விழுந்து விழுந்துங்க!) மனப்பாடம் செஞ்சு தூக்கத்துல எழுப்பி ‘நீட்டம்’ என்று நடுவில் வார்த்தை வரும் குறள் சொல்லுன்னு கேட்டா ஒளறி வைக்கிற அளவுக்கு பித்துப் பிடிச்சி, மொத பரிசு வாங்கினதுக்கப்புறம்(அந்தச் சான்றிதழ், அதாங்க சர்ட்டிபிகேட் இன்னும் இருக்கான்னு தெரியல), கவுண்டமணி பாணியில ‘இது ஆவுறதில்ல’-ன்னு ஒதுங்கியாச்சு.(இது முழுக்க ஒரு பத்தி/பாரா. எதாவது புரிஞ்சுதா?!)

என்னத்தப் பேச, எப்படிப் பேச? ஒரு எழவும் புரியல. சனிக்கிழமை காலைல ஹாய்யா எந்திரிச்சி ஏற்கனவே பத்ரி கிட்ட வாங்கி வச்சிருந்த அவரோட வலைப்பதிவு இடுகை சுட்டிகள், அண்ணன் கூகுள், பெரியண்ணன் மதுரைத் திட்டம்-ன்னு ஒரு ரவுண்டு வந்தா ஒரே ஒதறல் எடுக்க ஆரம்பிச்சிடிச்சி. நேரம் வேற போவுது. ஒத்திகை பாத்தா நல்லா இருக்கும். ஒத்திகையா? நல்ல கூத்து போங்க! என்னத்தப் பேசுறதுன்னே தெரியல, இதுல ஒத்திகையாவது மண்ணாவது!

பேப்பர்ல எதோ கிறுக்கி எடுத்துக்கிட்டு ஓடிட்டேன். இன்னும் என்னத்தப் பேசப்போறேன், எப்படிப் பேசப்போறேன்னு தெரியல.(இந்த மாதிரி குருட்டு தைரியம் எப்பவும் கூட இருக்கும்.) ஒரு வழியா மேடைக்கு முன்னாடி போய், சுமாரா 200 பேருக்கும் மேல இருக்கற கூட்டத்தப் பாத்து எதோ ஒளறிட்டு, கொஞ்சம் செண்டிமெண்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன்!

இதுல பெரிய பிரச்சினை என்னன்னா, எப்டி ஆரம்பிக்கிறதுன்னு சுத்தமா ஐடியாவே இல்ல!

‘பெருமதிப்பிற்குரிய இவர்களே, அவர்களே, உவர்களே’ – இது எனக்கு ஒத்து வராத சமாச்சாரம்!

(உக்கும்.. உனக்கு எந்த ‘சம்பிரதாயம்’தான் ஒத்து வந்திருக்கு-ன்னு யாரோ முணுமுணுக்கறாங்க)

முன்னாடி போய் நின்னதும் சத்தியமா இப்டித்தான் ஆரம்பிச்சேன்.

“வேலியில போற ஓணான மடியில எடுத்து விட்ட கதை தெரியுமா? அந்த மாதிரி நம்ம தலைவர் என்னெ இன்னிக்கு இங்கெ நிப்பாட்டி வச்சிருக்கார். ஐயோ பாவம் நீங்க. ராத்திரி முழுக்க பேசி பிளேடு போடப் போறேன்.”

எனக்குக் குடுத்திருந்த நேரம் 10 நிமிஷம்தான். பேசி முடிச்சிட்டு வந்து “டைம் கீப்பர்” கிட்ட எவ்ளோ நேரம் பேசினேன்னு கேட்டா, 19 நிமிஷம்னு சொன்னார்!

(விட்டிருந்தா ரொம்ப நேரம் அறுத்திருப்பேன். பாவம் மக்கள் தூங்கிடுவாங்கன்னு விட்டுட்டேன் :P)

ஓ, பேச்சாளப் பெருமக்களே, உங்கள் அவஸ்தை இப்போது புரிகிறது!

இனிமே இது ஆவுறதில்ல.

ஒரு செய்தி; ஒரு படம் Wednesday December 1, 2004

Posted by Pari(பரி) in பொது.
comments closed

பெங்களூர் பிஷப் காட்டன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் தயாரித்த ராக்கெட் ஏவப்பட இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளாகத் தயாரித்த இந்த ராக்கெட் 10 அடி உயரம், மூன்று இன்ச் விட்டம், 7 கிலோ எடை கொண்டது(என்ன கொடுமை இது? முழுதாக மெட்ரிக் அளவில் சொன்னால் என்ன?). ஏவப்பட்டால் 3.2கிமீ முதல் 3.8கிமீ வரை பாயும். இதற்கு எடுத்துக் கொள்ளும் மொத்த நேரம் 12 நிமிடங்கள். முழுச் செய்தி.

தொடர்புடைய ஆங்கிலப் படம்: October Sky (IMDB Blockbuster)