jump to navigation

என்னமோ போங்க… Tuesday November 30, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

சிற்றின்பம், பேரின்பம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இருப்பது அரிது என்று நினைக்கிறேன். புலனடக்கம், இச்சையடக்கம், இன்னும் என்னென்னவோ அடக்கம் என்று அடக்க ஒடுக்க பாரம்பரியம் மிக்கது இந்த உலகம். உலகின் ஒவ்வொரு பாகத்திலும் இந்த அடக்கத்தின் அளவுகோல் வேறுபடுகிறது.

‘மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்’ என்று எழுதிய கண்ணதாசன், அவர் சார்ந்த மதம் போதித்த அடக்கமில்லாமல் வாழ்ந்தார் என்று வரலாறு கூறுகிறது. யோசித்துப் பார்த்தால், பிரபலமான மதங்கள் அனைத்தும் பெண்ணை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. மதத் தலைவர்கள் அனைவரும் சந்நியாசம் பூண்ட, ஆசையைத் துறந்த ஆண்கள்தான். எது எதற்கோ சம உரிமை கேட்கும் பெண்கள், மதத்திலும் சம உரிமைக் கேட்கிறார்களா என்று தெரியவில்லை. (கொசுறு: ஒரு நாள் டிவியில் சானலை மேய்ந்து கொண்டிருந்த போது, ஒரு பெண் பாதிரியார் ஆகியிருக்கிறார் என்று ஆச்சரியமாகப் பேசப்பட்டது. மேற்படி தகவல்கள் தெரியாது.)பேரின்பத்தை அடைவதற்கு முன் சிற்றின்ப இச்சை தலை தூக்கினால் எதோ ஒரு வழியில் கமுக்கமாக தீர்த்துக் கொள்வது என்பது எழுதப்படாத விதி போலும். ஆனால், இரண்டு இன்பங்களையுமே சேர்த்தே அடைதல் என்பது முடியாதா என்று பேச நான் ஒன்றும் போதனை செய்பவன் அல்ல. ஒரு மாற்றுப் பார்வைக் காரன்; அவ்வளவே. எப்போதோ எழுதி வைத்ததையெல்லாம் இம்மி பிசகாமல் பின்பற்ற வேண்டும் என்பதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. எதையுமே காலத்துக்கேற்றவாறு மறுபரிசீலனை செய்து திருத்தி எழுதியே ஆகவேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

மதுரைத் திட்டத்தில் மூழ்கிக் கொண்டிருந்த வேளையில் செயங்கொண்டாரின் காரானை விழுப்பரையன் மடல் என்ற நூல் கண்ணில் பட்டது. அங்கே கிடைக்கும் மற்ற பழைய இலக்கியங்களில் இது முற்றிலும் மாறுபட்டது. அதில் கண்ட மாற்றுப் பார்வையைச் சொல்லவே இந்தப்பதிவு.(குதர்க்கவாதிகள் பார்வைக்கு: நான் அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றியே படிக்கிறேன்.)

இதில் செயங்கொண்டாரின் வார்த்தைப் பிரயோகங்கள், மிதவாத மதவாதிகளுக்குக் கூட அதிர்ச்சியளிக்கக் கூடியது என்ற எச்சரிக்கையை முன் வைக்கிறேன்.

இனி அதிலிருந்து சில வரிகள்:

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தாம் அடங்காப்

பேதையில் பேதையார் இல் என்று பேசுகின்ற

மூதுரையைக் கேட்டேயும் மூர்க்கராய் ஓர்ப்பின்றி

மாதர் திறம் பழிக்கும் வன் நெஞ்சக் கள்வரே

….

ஆதி அகத்தியனும் அங்கே வசிட்டனும்தாம்

காதலராய்ப் பண்டு கலசத்தே வந்த கதை

வேதாகமம் அன்றோ?

….மீன் நாற்றம்

காதம் ஒரு நான்கும் கந்திக்க நிந்திக்கும்

சாதியிலே உள்ளாளைத் தாகித்த மோகத்தால்

பாதையிலே பாய்ந்து பராசரனார் தாம் புணர்ந்து

போதுவதன்முன் சனித்த புத்திரனார் அல்லவோ

வேத வியாதனார்? மேற்குலத்தோர் கீழ்க்குலமாம்

பேதம் கருதினரோ?

….புண்ணிய பாவங்கட்கு

ஏதுவெனத் தோன்றுவது இவ்வுடலே; இவ்வுடலுக்கு

ஆதியுமாய்த் தோன்றுகின்றது அவ்வுயிரே; அவ்வுயிர்க்குச்

சேதனமும், மற்று அவ் சேதனமே இவ்வுடலென்று

ஏதம் அறத் தெளியீர்;

….

ஏதேனும் ஒன்றைப் பண்டு எங்கேனும் கேட்டலுமே

ஆதாரமான அனுமானம் கொண்டன்றிப்

போதான்(போகாத) ஊர் காணப் பொருள்காண்பான் போல் கண்டீர்

வேதாகமத்தின் விகற்பத்தால் என்று இயம்பல்

சாதாரணமாம் தடிப்பிணக்கே; நும்முளே

வாதாய் வசையாய் வழக்காட்டாய் மார்க்கங்கள்

ஓதாது ஓதி உளதென்றது இல்லை என்பீர்

ஏது ஆதி? ஏது அந்தம்? என்று உரைப்பதே கெடுவீர்

போதாது இனி உங்கள் மெய்கிடக்க; மெய்கேளீர்!

சாதல் எவர்க்கும் தவிராது;

….செய்தவத்தால்

யாதும் பயனில்லை; எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும்

ஆதல் அழிதல் இயல்பன்றோ? யார் தடுப்பார்?

—-

இன்னும் நிறைய இருக்கிறது இதில். புராணப் பாத்திரங்களின் கதை எனக்குத் தெரியாததால் பல இடங்களில் புரியவில்லை. ஏகப்பட்ட கடுப்பில் பாடியிருப்பாரோ என்னவோ, வார்த்தை ஜாலங்கள் அசர வைக்கின்றன.

ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் இன்பம். சும்மா சந்நியாசம் போகிறேன் என்பதெல்லாம் பம்மாத்து வேலை என்கிறார். என்னமோ போங்க, இன்னும் பிரம்மச்சரியத்தையே தாண்டாத எனக்கு என்னத்தத் தெரியுது… ஹூம்….

Advertisements

Comments

1. J. Rajni Ramki - Wednesday December 1, 2004

//பிரம்மச்சரியத்தையே தாண்டாத எனக்கு //

ஐய….கொயந்தை.. வா சேர்ந்து பிஸ்கெட்டு துன்னலாம்!


Sorry comments are closed for this entry

%d bloggers like this: