jump to navigation

கலிங்கத்துப் பரணி Monday October 11, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

மதுரைத்திட்டத்தில்(Project Madurai /) கிடைக்கும் பழம் இலக்கியங்களிலிருந்து அதிகம் பேசப்படாத/அறியப்படாதவற்றை எடுத்துப் படிப்பதில் கொஞ்ச காலமாக ஆர்வம் – நேரம் கிடைக்கும் வரையில். ‘கலிங்கத்துப்பரணி’யை எடுத்து OTL உதவியால் புரிந்து கொள்ளும் முயற்சியைப் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை. இது வெறும் வாசிப்பனுபவம் மட்டுமே; பொழிப்புரை அல்ல!

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. முதலாம் குலோத்துங்க சோழன், கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.

கருணாகரன் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி.

கலிங்கப் போர் முடிந்து சோழ வீரர்கள் ஏராளமான செல்வங்களுடன் நாடு திரும்புகிறார்கள். வந்து வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் மனைவியர் கதவைத் திறக்க மறுக்கின்றனர். ‘ஏன் இந்தத் தாமதம், ஒரு போர் முடிக்க இத்தனை நாட்களா?’ என்று கோபம் கொண்டு கதவைத் திறக்க மறுக்கிறார்களாம்! வீரர்கள், தங்கள் போர்ப் பராக்கிரமத்தைச் சொல்லி பெருமிதம் கொள்ள நினைத்து வந்த வேளையில் இந்தக் கதவடைப்புப் போராட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கதவைத் திறக்க வீரர்கள் பாடுவதாய் அமைந்ததுதான் “கடை திறப்பு” என்ற முதல் அத்தியாயம்.

கலிங்கத்துப் பரணி இப்படித்தான் தொடங்குகிறது. செயங்கொண்டார் கதை சொல்லும் விதமே வித்தியாசமானது. வெறும் போரையும் களத்தையும் மட்டுமே பாடவில்லை. நடுவிலே பேய்கள், அவற்றின் தலைவியாக காளி, காளியின் கோயில் என்று கதையைப் பின்னியிருக்கிறார். வெறும் பாடல்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழுக்கதையையும் புரிந்து கொள்வது என் சிற்றறிவுக்கு எட்டாத காரியமாகையால் சில சுவையான இடங்களையும் பாடல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

போர் பற்றிப் பாடியதால் ஒரே ரத்தக்களறியாக இருக்கும். காப்பியங்களில் நடந்த போர்களைப் பற்றித்தான் அதிகம்பேர் பேசுகிறார்கள். செயங்கொண்டரின் போர் விவரணை, அவற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல. செயங்கொண்டர் நடுவிலே பேய்களை உலவவிட்டதால் பயந்து ஓடிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கட்டுரையில் சில ரத்தத்திட்டுகள் தெளிக்கும்; பேய்கள் உலாவும். பயந்த சுபாவமுள்ளவர்கள் கொஞ்சம் திடமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன்.

-00-

சோழ வீரர்கள் போர் முடிந்து வந்து கதவைத் தட்டுகிறார்கள். கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரிடம் பாடும் சில பாடல்களைப் பார்க்கலாம்.(குறிப்பு: பாடலின் அசல் வடிவத்தையும், எனக்குப் புரிந்த வரையில் சீர் பிரித்தும் தருகிறேன்.)

நடந்துவரும் அழகு

—————–

அளக பாரமிசை யசைய மேகலைகள் அவிழ வாபரண மிவையெலாம்

இளக மாமுலைக ளிணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ (பாடல்-53)

சீர் பிரித்து:

அளகபாரம் இசை அசைய மேகலைகள் அவிழ ஆபாரணம் இவை எ(ல்)லாம்

இளக மாமுலைகள் இணையறாமல் வரும் இயனலீர் கடைகள் திறமினோ

(அளகபாரம்: mass of a woman’s hair)

விரிந்த கூந்தல் இசைக்கு நடனமாடுவது போல் அசைய, கணவர்தம்மைப் பிரிந்ததனால் இளைத்த இடையில் அணிந்திருக்கும் மேகலை அவிழ, மற்ற ஆபரணங்களும் கழண்டு விழ கொங்கைகள் இரண்டும் இணையாமல் நடந்து வரும் பெண்களே கதவைத் திறங்கள்!

இதை எப்படிக் கற்பனை செய்திருப்பார்? கதவிடுக்கின் வழியாகக் கண்ணை இடுக்கி உள்ளே நடந்து வரும் பெண்ணைப் பார்த்தாரா?!

அடுத்து தரப்போகும் பாடல் இன்னும் ஒரு படி அதிகம் போவதால் சீர் பிரித்துத் தருவதோடு விட்டுவிடுகிறேன். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை

முன்செல்வ மில்லாத வர்பெற்ற பொருள்போல்

கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே

கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின். (பாடல்-47)

சீர் பிரித்து:

முலைமீது கொழுநர் கை நகம் மேவு குறியை

முன் செல்வமில்லாதவர் பெற்ற பொருள்போல்

கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே

கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திறமின்

(கொழுநர் – ஆடவர்; மேவு – விரும்பு; கலை – துணி)

இப்படி இன்னும் பல பாடல்களை பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடியது வியப்பாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை அரச சபையில் ஆண்கள் மட்டுமே இருந்திருக்கலாம், அதனால் பாடியிருக்கலாம்.

நகக்குறி இட்டவராக இருந்தாலும் சரி, யாரும் இல்லாத இடத்திற்குப் போனவராக இருந்தாலும் சரி, வாருங்கள் மேற்கொண்டு கலிங்கத்துப் பரணி படிக்கலாம்.

மேலே படித்தது இனிமையாக இருந்தால் அதற்கு நேர் எதிராக வறண்ட பூமியைப் பற்றியப் பாடல்கள் காட்டைப் பற்றிப் பாடும் பகுதியில் உள்ளன. காட்டில் மரம், செடி கொடிகள் எப்படி இருக்கின்றன என்று பாருங்கள்.

வற்றல் வாகைவ றந்த கூகைம டிந்த தேறுபொ டிந்தவேல்

முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே. (பாடல்-78)

சீர் பிரித்து:

வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல்

முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே

(வேல் – வேம்பு; முளிந்த – எரிந்த)

சில வார்த்தைகளுக்குப் பொருள் இன்னதென அறுதியாக விளங்காததால் தெரிந்த வரை:

வற்றிய வாகை மரம், பொடிந்த வேப்ப மரம், எரிந்த மூங்கில், முரிந்த புன்னை மரம் நிரைந்ததாகக் காட்சியளிக்கிறது அந்தக் காடு.

பாலை நிலத்தில் அதிகாலையில் லேசாகப் பனி இருப்பது இயல்பு. அந்தப் பனி நீர் எப்படி வந்தது தெரியுமா?

வறண்ட அந்த வனத்தைப் பார்த்து கரிய மேகத்துக்கும் நிலாவுக்கும் பயம் வந்துவிட்டது. முதலில் இந்த இடத்தை விட்டு சீக்கிரம் ஓடிவிட வேண்டும் என்று ஓடியதால் அவற்றுக்கு வேர்த்துவிட்டது. அவை சிந்திய வியர்வைத்துளிகள்தான் அந்தப் பனி நீர்!

காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும் வெண்மதியுங் கடக்க வப்பால்

ஓடியிளைத் துடல்வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியு மையோ.(பாடல்-86)

சீர் பிரித்து:

காடு இதனைக் கடத்தும் எனக் கருமுகிலும் வெண்மதியும் கடக்க அப்பால்

ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியும் ஐயோ

(கடத்தும்=கடக்கும்)

எதைப் பற்றிப் பாடினாலும் வர்ணனைகளில் அசத்துகிறார்க் செயங்கொண்டர்.

ஒரு இருண்ட அறைக்குள் தனியே இருக்கிறீர்கள். திடீரென உங்கள் கண்முன் ஒரு தலை தோன்றுகிறது. சதைப்பிடிப்பே இல்லாமல் ஒட்டிய கன்னத்துடன் தீப்பொறி மாதிரி ஜுவாலையுடன் இரண்டு கண்கள் விழிக்கின்றன. அது வேறொன்றுமில்லை பேய்தான் பயப்படத் தேவையில்லை. பாடலைப் பாருங்கள்.

உள்ள டுங்கியி ரண்டுமொன் றாகவே ஒட்டி யொட்டுவி டாதகொ டிற்றின

கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகிற் குன்று தோன்றுவ போலவி ழிப்பன.(பாடல் –

138)

சீர் பிரித்து:

உள்ளடுங்கி இரண்டும் ஒன்றாக ஒட்டி ஒட்டிவிடாத கொடிற்றன

கொள்ளி கொண்டு இரண்டே முழையுள் புகிற் குன்று தோன்றுவ போல விழிப்பன

(கொடிறு – கன்னம்; முழை – குகை)

பேய்களிலும் பல விதப் பேய்களைப் பற்றிச் சொல்கிறார். நொண்டி, குருடு, ஊமை, செவிடு, குட்டை, கூன் பேய்கள். அவை எப்படி அப்படி ஆயின என்றும் சொல்கிறார் – நகைச்சுவையாக. ஊமைப் பேயைப் பற்றிய இந்தப் பாடலைப் பாருங்கள்.

வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா மதுரை வெங்களத் தேமது ரிக்கவட்

டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபுக் குள்வி ழுந்தற ஊமைகள் ஆனவும்.

சீர் பிரித்து:

வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெங்களத்தே மதுரிக் கவட்டு

உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்குள் விழுந்து அற ஊமைகள் ஆனவும்

(வெங்களம் – போர்க்களம்; பொன்னி – காவிரி)

மதுரைப் போரில் வென்ற சோழ மன்னனை வாழ்த்திய விழாவில்(இந்த இடம் சரியாகப் புரியவில்லை) கூழ் குடிக்கும் போது, அவசர அவசரமாக சூடாகக் குடித்ததால் நாக்கு சுருண்டு ஊமையாயின. சூடு தெரியாமல் காப்பியைக் குடித்து நாக்கைச் சுட்டுக் கொண்ட அனுபவம் ஞாபகம் வருகிறது.

-00-

சரி, சரி கதைக்கு வரலாம். அனந்தவன்மனுக்கும் குலோத்துங்கனுக்கும் என்ன பகை, ஏன் போர் வர வேண்டும்? முதலில் குலோத்துங்கன் மூதாதையர்களைப் பற்றி ஒரு பாட்டம் பாடிவிட்டு, குலோத்துங்கன் பிறந்தது, வளர்ந்தது, வாள் பயிற்சி பெற்றது, யானை, குதிரை ஏற்றம் கற்றது, இளவரசனானது, போருக்குப் போனது எல்லாம் பாடுகிறார்.

எல்லாம் முடிந்த பிறகு சண்டை போட ஆள் இல்லாததால் வேட்டையாட நினைத்து ஊரைவிட்டுக் கிளம்புகிறான். எங்கு? காஞ்சிக்கு. சோழ ஆட்சிக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்கள் கப்பம் செலுத்த அங்கு வருகின்றனர். எல்லாரும் வரிசையாக நின்று கப்பம் கட்டுகின்றனர். ஆனால், கலிங்க நாட்டு அனந்தவன்மன் மட்டும் வரவில்லை. அவனிடமிருந்து ஓலை மட்டுமே வருகிறது. ‘வா, நீயா நானா என்று பார்க்கலாம்’ என்று அழைக்கிறான் அந்த ஓலையில்.

காடும், மலையும், கடலும் சூழ்ந்த கலிங்க நாட்டை வெல்வது அவ்வளவு சுலபமில்லை என்பது அவன் எண்ணம்.

கானரணு மலையரணுங் கடலரணுஞ் சூழ்கிடந்த கலிங்கர் பூமி

தானரண முடைத்தென்று கருதாது வருவதுமத் தண்டு போலும். (பாடல் – 377)

சீர் பிரித்து:

கான் அரணும் மலை அரணும் கடல் அரணும் சூழ்கிடந்த கலிங்கர் பூமி

தான் அரணம் உடைத்தென்று கருதாது வருவதும் அத்தண்டு போலும்

(அரண் – காவல்)

குலோத்துங்கன் சும்மா விடுவானா, ‘எனக்கே சவாலா? சின்னப் பயலா இருந்தாலும் உன்னை ரெண்டுல ஒண்ணு பாக்காம விட மாட்டேன். உன் நாட்டுல மலை இருந்தா பெரிய இதுவா? யானையைக் கொண்டு மலையை இடிப்பேன்’ என்கிறான்

எளிய னென்றிடினும் வலிய குன்றரணம் இடிய நம்படைஞர் கடிதுசென்

றளிய லம்புமத மலைகள் கொண்டணைமின் அவனை யுங்கொணர்மி னெனலுமே.

சீர் பிரித்து:

எளியன் என்றிடினும் வலிய குன்று அரணம் இடிய நம்படைஞ்சர் கடிது சென்று

அளியலம்பு மத மலைகள் கொண்டு அணைமின் அவனையும் கொணர்மின் எனலுமே

(பாடல் – 340)

(கடிது – விரைந்து)

ஒரு வழியாகப் போர் ஆரம்பிக்கிறது. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று அந்தக் காலத்துக்கே உரிய அனைத்து வகைப் படைகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு பக்க வீரர்களும் செத்து மடிகின்றனர். குருதி ஆறு ஓடுகிறது. இறந்த யானைகளின் உடல்கள் இரு கரைகளாக இருக்க குருதி ஆறு ஓடுகிறதாம்.

குருதியின் நதிவெளி பரக்கவே குடையின நுரையென மிதக்கவே

கரிதுணி படுமுட லடுக்கியே கரையென விருபுடை கிடக்கவே. (பாடல் – 410)

பெரிய பெரிய கதவுகள் கொண்ட கோயில்களில், கதவின் கீழ்ப்பாகத்தில் ஒரு சிறிய கதவு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்குப் பெயர் ‘பூழை’. மதில் சுவர்களிலும் இந்த மாதிரி பூழை இருந்திருக்கிறது போல.

காலாட் படை வீரர்கள் ஒரு கையில் வாள் அல்லது வேலும் மறு கையில் கேடயமும் வைத்திருப்பார்கள். வீரர்கள் எரிந்த வேல், கேடயத்தைத் துளைக்கிறது. அந்தத் துளையானது, மதில் சுவரில் இருக்கும் பூழை போல இருக்கிறதாம்!

இட்ட வட்ட ணங்கண் மேலெ றிந்த வேல்தி றந்தவாய்

வட்ட மிட்ட நீண்ம திற்கு வைத்த பூழை யொக்குமே.(பாடல் – 426)

சீர் பிரித்து:

இட்ட வட்டணங்கண் மேல்எறிந்த வேல் திறந்தவாய்

வட்டமிட்ட நீண்மதிற்கு வைத்த பூழை யொக்குமே

சாகும் வரையிலும் தன்னால் முடிந்த அளவு எத்தனை எதிரி உயிரை மாய்க்க முடியுமோ அத்தனை செய்வார்கள் வீரர்கள். ஒரு கையை இழந்தாலும் இன்னொரு கையால் வாள் வீசிய கதையைப் படித்திருப்பீர்கள்.

இருதொடையற் றிருக்கு மறவர்கள் எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட

ஒருதொடையைச் சுழற்றி யெறிவர்கள் ஒருதொடையிட் டுவைப்ப ரெறியவே (பாடல் –

438)

சீர் பிரித்து:

இரு தொடை அற்றிருக்கும் மறவர்கள் எதிர் பொருகைக் களிற்றின் வலி கெட

ஒரு தொடையைச் சுழற்றி எறிவர்கள் ஒரு தொடை இட்டு வைப்பர் எறியவே

இடுப்பு வரை இரண்டு கால்களையும் இழந்தவர்கள், பக்கத்தில் கிடக்கும் தன் கால்களில் ஒன்றை எடுத்து யானை மீது வீசி எறிந்து அதைச் சாய்க்கப் பார்க்கிறார்களாம், இன்னொரு தொடையை அடுத்த யானைக்கு விட்டு வைக்கிறார்களாம். ரொம்பத்தான் தைரியம்!

கலிங்கப்படை தோற்கடிக்கப் பட்டுவிட்டது. கருணாகரன் தலைமையில் குலோத்துங்கன் கலிங்க நாட்டைக் கைப்பற்றுகிறான். போர் முடிந்தது. ஆனால், நடந்து முடிந்த போர்க்களம் எப்படி இருக்கிறது? களம் பாடியதிலிருந்து சில பாடல்களைப் பார்த்துவிட்டு நிறைவு செய்யலாம்.

விருந்தினரும் வறியவரு நெருங்கி யுண்ண

மேன்மேலு முகம்மலரு மேலோர் போலப்

பருந்தினமுங் கழுகினமுந் தாமே யுண்ணப்

பதுமமுக மலர்ந்தாரைப் பார்மின் பார்மின். (பாடல் – 477)

இதற்கு விளக்கம் தேவையா என்ன? இறந்த வீரர்களின் உடல்களை பருந்தும் கழுகும் தின்கின்றன. அந்த நிலையிலும் வீரர்களின் முகம் தாமரை போல மலர்ந்திருக்கிறது.

போர்க்களத்தில் உயிரிழந்த கணவனைக் காண பெண்கள் வருகின்றனர். அவர்களின் நிலையைப் பாருங்கள்

தரைமகள்தன் கொழுநன்ற னுடலந் தன்னைத்

தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்

டரமகளி ரவ்வுயிரைப் புணரா முன்னம்

ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின். (பாடல் – 483)

சீர் பிரித்து:

தரைமகள் தன் கொழுநன் உடலந்தன்னைத்

தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்டு

அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்

ஆவியொடுக்க விடுவாளைக் காண்மின் காண்மின்

இறந்த தன் தலைவனின் உடலை பூமி மேல் படாமல் தன் மேல் சாய்த்துக் கொண்டு, போன விண்ணுலகுக்குப் போன அவனை, அங்கே உள்ள பெண்கள் சேர்வதற்கு முன், தன் ஆவியைப் போக்கிக் கொண்டுத் தானும் மேலே செல்கிறாள்.

பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே

போர்முகத்தி லெவர்வரினும் புறங்கொ டாத

பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று

பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின். (பாடல் – 484)

தலைவனைத் தேடியலைந்த பெண்ணொருத்தி, அவன் தலையை மட்டும் எங்கோ கண்டெடுக்கிறாள். உடலின் மற்ற பாகங்கள் எங்கே என்று பைரவியைக் கேட்கிறாள்.

போரின் கோரத்தை இந்த அளவுக்கு நுட்பமாக பாடிய விதம் பிரமிக்க வைக்கிறது. ஒரு நல்ல உரையுடன் கலிங்கத்துப் பரணியைப் படித்தால் நன்றாக இருக்கும். நடுவில் பேய்களை ஏன் நடமாட விட்டார், இந்தக் காலத்தில் பேசப்படும் ‘மாந்திரீக யதார்த்த'(magical realism) வகையில் இது சேருமா என்று யாரேனும் ஆய்வு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

செயங்கொண்டாருக்கு கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் உண்டாம். மிகப் பொருத்தமான பட்டம்.

(செப்டம்பர் 4, 2004)


நன்றி: மரத்தடி

குறிப்பு: அவசரகதியில் கிறுக்கியது இது. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இவ்வளவு கொடுமையாக இல்லாமல் சொல்லும்படியாகவாவது இருந்திருக்கும். “பதம் பிரித்து” என்பதைக்கூட “சீர் பிரித்து” என்று உளறி வைத்திருக்கிறேன்.

Comments

1. காசி - Monday October 11, 2004

விளக்கம் நல்லா இருக்கு. தொடரட்டும். எனக்கு எல்லாமே புதுசு.

சாண்டில்யன் எழுதிய ‘கடல்புறா’வின் ஆரம்பமே இந்த கலிங்கத்துப் போர் தான் வரும். கற்பனையை அள்ளிவீசியிருப்பார். உண்மையில் செயங்கொண்டார் மட்டும் உள்ளதை அப்படியே உரைக்கிறார் என்று சொல்ல முடியுமா?

2. கணேசு - Tuesday October 12, 2004

நல்லாருக்குண்ணே தொடர்ச்சியா எழுதுங்க..

3. bb - Tuesday October 12, 2004

செயங்கொண்டார் மட்டும் உள்ளதை அப்படியே உரைக்கிறார் என்று சொல்ல முடியுமா?

jeyangkoNdaar “embedded poet”A war-ai cover paNNiyiruppaarO? :))

Pari, a good intro to the work.

எல்லாரும் வரிசையாக நின்று கப்பம் கட்டுகின்றனர். ஆனால், கலிங்க நாட்டு அனந்தவன்மன் மட்டும் வரவில்லை.

If he was expected to pay kappam, doesn’t that mean that kalingam was conquered earlier too?

பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.

idhellaam practicalA nadakkumaa, illai as usual exaggerationA?

4. பரி - Tuesday October 12, 2004

காசி,

அந்தக்காலத்துல கவிதைன்னாலே உயற்வு நவிற்சிதானே?

bb,

Believe it or not, I had a line about ’embedded journalists’ in Iraq war, but removed it just before posting 🙂

கப்பம் கட்டுவது பற்றி எதுவும் தெரியவில்லை.(வரலாறு தெரிஞ்சாத்தான் இதுக்கெல்லாம் விடை கிடைக்கும். நான் அதுல பெரிய முட்டை.)

1000 யானைய ஒருத்தனே கொல்றது நடக்கிற காரியமா? 🙂

OTL-ல அதான் அர்த்தம் போட்டிருக்கு. அப்படியே எடுத்துப் போட்டுட்டேன்.

5. காசி - Tuesday October 12, 2004

//அந்தக்காலத்துல கவிதைன்னாலே உயற்வு நவிற்சிதானே? //

இந்தக் காலத்துல?

6. பரி - Wednesday October 13, 2004

காசி,

என்னெ வம்புல மாட்டி வுடுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? 🙂

கவிதையும் நானும், நகமும் சதையும் போல-ன்னு தெரியாதா 😛

7. காசி - Monday October 18, 2004

சரி, கவித கெடக்குது கழுத.

ஸ்டைல்ஷீட்டில் font-size:x-small; வரும் இடத்தில் font-size: 8pt; ன்னு போட்டா பார்க்க, படிக்க எழுத்து அழகா இருக்கும்.


Sorry comments are closed for this entry