jump to navigation

சும்மனாச்சுக்கும்… Monday September 27, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

நீங்கள் தினமும் உபயோகிக்கும் மின் சாதனங்களில்(கணிணி, செல்பேசி, தொலைக்காட்சி, ரேடியோ, தொலைபேசி, வாட்ச்) ஒன்றை இனி ஒரு வருடத்திற்கு உபயோகிக்க கூடாது என்றால் எதை விட்டுவிடுவீர்கள்? ஏன்? ரேடியோ:

“காலையில் எழுந்தேன், ‘ஆய்’ போனேன், பல் தேய்த்தேன், அடித்துப் பிடித்து வெளியில் ஓடி 1970-ஆம் ஆண்டு பிக்கப் ட்ரக்கை ஓட்டிக் கொண்டு கேர்ள்ஃபிரண்டைப் பார்க்கப் போனேன், அதற்குள் அவள் வேறொருவனுடன் ஓடிவிட்டாள். நான் பெரிய தப்புப் பண்ணிவிட்டேன், ‘ஆய்’ போன நேரத்தை மிச்சம் பிடித்திருக்க வேண்டும். ‘கண்ணே திரும்ப வந்துவிடு, இனி நான் ஆய் போகமாட்டேன்’” போன்ற அற்புத வரிகள் கொண்ட அமெரிக்க நாட்டுப்புற பாடல்களைக் கேட்க ரேடியோ வேண்டும்.

தொலைபேசி:

டிஎஸ்எல்(DSL) இணைப்பிற்காக மட்டுமே இருக்கும் வீட்டு தொலைபேசியை ஏற்கனவே மானசீகமாக விவாகரத்து செய்தாகிவிட்டது. ஆனாலும், ஒன்பது மணிக்கு முன்பு செல்பேசிக்கு அழைக்கும் ‘செல்பேசி நாகரிகம்’ தெரியாதவர்களை, உடனே, ‘வீட்டு நம்பருக்கு பண்றியா/பண்றீங்களா?’ என்று அவசர அவசரமாக சொல்லிவிட்டு, செல்பேசி நிமிடங்களை மிச்சம் பிடிக்க வீட்டுத் தொலைபேசி தேவை.

செல்பேசி:

“இதோ இன்னும் 10 மைல்தான், வந்துவிடுவேன்”

“இன்னும் 3 மைல்தான் இருக்கு, 5 நிமிஷத்துல அங்கெ இருப்பேன்”

செல்பேசி கம்பெனி வழங்கும் ‘அட்சய பாத்திர’ வார இறுதி நிமிடங்கள், ராக்கெட் ஏவும் துல்லியத்தோடு வார இறுதிகளில் வரவை அறிவிக்கவும், நண்பர் வீட்டு வாசலில் போய் நின்றுகொண்டு, கதவைத் தட்டினால் கதவுக்கு வலிக்குமே என்றும், அழைப்பு மணியை அடித்தால் நண்பர், ‘செல்பேசிதான் சிணுங்குகிறது என்று அதைத்தானே தேடி ஓடுவார்’, என்றும் நினைத்துக் கொண்டு -இன்னொரு முறை- செல்பேசியைத் தட்டி “ஹலோ, எவ்வளவு நேரமா வெளியில நிக்கிறது? வந்து கதவத் திறங்க” என்று அதட்ட செல்பேசி அவசியம் வேண்டும்.

தொலைக்காட்சி:

(1 சாதாரண version)

எந்தச் சானலைத் திருப்பினாலும் நிரந்தரமாக இருக்கும் புஷ் vs கெர்ரி போட்டியின் கருத்துக் கணிப்பு வரைபடத்தை(Poll graphics), குறுக்கு, நெடுக்கு கோடுகளாக, பீட்ஸாவை ஒழுங்கில்லாமல் வெட்டியது மாதிரி, ஈசிஜி மானிட்டரில் தெரியும் நெளி நெளி கோடுகள் மாதிரி என்று பல வடிவங்களில், பல வண்ணங்களில் பார்ப்பது, 10 வினாடிகளுக்குள் முடிந்துவிடும் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தைப் பார்ப்பதை விட சுவராசியமானது. அதனால் தொலைக்காட்சி வேண்டும்.

(2 கொஞ்சம் ரசமான, ஆனால், (என் அளவுகோலின்படி) ஆபாசமில்லாத version)

ஒலிம்பிக்ஸ் 100மீட்டர் ஓட்டப்பந்தயம் பார்க்க கிளர்ச்சியாக(exciting) இருந்தாலும், முதுமையில் உச்சத்தை(orgasm) அடைவது போல (பத்து வினாடிகளுக்குள்) சீக்கிரம் முடிந்துவிடும். முதல் கட்டத் தேர்தலில்(Primaries) ஆரம்பித்து, அடுத்த அதிபர் யாரென்று முடிவு தெரியும் வரை, -கிட்டத்தட்ட ஒரு வருடம் நடக்கும்- அமெரிக்கத் தேர்தல், இளமையில், தொட்டு, தழுவி, சரசமாடி, உச்சத்தை அடைவது போல சுவராசியமானது(இது வெறும் கல்வி ஞானம் என்பதை அறிக! மேலும், ‘கல்வி’யில் நடு எழுத்து மேல் புள்ளி உண்டு! – ‘ல்’).

யார் மேலே, யார் கீழே என்று எந்தச் சானலைத் திருப்பினாலும் படம் போட்டுக்(Poll graphics) காட்டும் தொலைக்காட்சி, இந்தத் தேர்தல் வருஷத்தில்(election year) அவசியம் வேண்டும்

கணினி:

‘இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்’ என்பதற்கு இலக்கணமாய் முணுக், முணுக்கென்று தொட்டதுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு சண்டை போடும், குழுக்கள், வலைப்பதிவுகள், வலைசஞ்சிகைகள், வலைமன்றங்கள், நடுவிலே சம்பந்தமில்லாமல் ஆஜராகி, மொத்துப்படும் ‘கருத்து கந்தசாமி’களிடமிருந்து தப்பிக்க வேண்டும்.

1. காக்கா கருப்பு

பால் வெளுப்பு

நான் ஒரு துடுப்பு2. கரியிருட்டின் கடைகோடியில்

பல்லியின் விழி தெறித்த

வெளிச்சப் பொட்டில்

துள்ளி விழநினைத்து

தொலைத்தேன் என் சுய(தம்பட்ட)த்தை

முன்னது போன்ற ‘கருப்பு & வெள்ளை'(black & white) கவிதைகளையும், பின்னது போன்ற உட்கருத்தும், ஊறுகாயும் வைத்த கவிதைகளையும் படிக்காமல் தப்பிக்க வேண்டும்.

கணினியைக் கொடுத்து, கூடவே இணைய இணைப்பை -நான் கேட்காமலேயே- கொடுத்துவிட்டு, ‘நாளைக்குள் இதை முடிக்கவேண்டும்’ என்று வேலையையும் (இதையும் நான் கேட்காமலேயே) கொடுக்கும் மேலாளரின் ‘அட்டூழிய’த்திலிருந்து தப்பிக்க வேண்டும்.

ஆமாம், நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்க வேண்டும். அதனால், கணினியை விட்டுவிடுவேன்.

(கிசுகிசுப்பான குரலில் படிக்கவும்)

என் ஒரு வருட சம்பளத்தை தமிழோவியம் என் வங்கிக் கணக்குக்கு அனுப்பியதை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்! அது ரகசியம்.

(படித்துவிட்டு சிரிப்பு வரவில்லையென்றால், அங்கங்கே ஸ்மைலி போட்டோ , பக்கத்திலிருப்பவரை கிச்சு கிச்சு மூட்டச் சொல்லியோ, பின்னணியில், டிவியில் வருவது போல ‘ஹா ஹா ஹா’ சத்தத்தை ஒலிக்கவிட்டோ , மீண்டும் படித்துப் பாருங்கள். ஒருவேளை சிரிப்பு வந்தாலும் வரலாம்.)

தமிழோவியம் நகைச்சுவைப் பகுதிக்காக போன வாரம் கிறுக்கியது.

Advertisements

Comments

1. -Silandhi- Ramani - Monday September 27, 2004

நம்ம வலைப்பதிவர்களை எல்லாம் இப்பிடி சந்தியில வெச்சி வாரு வாருன்னு வாரிட்டீயளே!! உங்க நகைச்சுவை உணர்வுக்கும், கலவி ஞானத்துக்கும் 🙂 ஒரு ‘ஓ’.

2. பரி - Tuesday September 28, 2004

பெஞ்ச தேய்க்கிறவரே 🙂

நான் எங்கெ வாரினேன்? உண்மையத்தானே சொன்னேன் 🙂

அதான் வலைப்பூ(‘வள்வள்’பூ?)வுல பாக்கறீங்களே 😛

3. காசி - Tuesday September 28, 2004

இன்னொரு தமிழோவியம் எழுத்தாளரே, வாழ்த்துக்கள்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: