jump to navigation

கலாசார தேடல் Monday September 13, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஒரு வழியாக நானும் ஜோதியில் ஐக்கியம் ஆகப்போகிறேன். என்ன ஜோதியா? நல்ல கேள்வி கேட்டீர்கள் போங்கள்! கலாசாரம், கலாசாரம் என்று சொல்கிறார்களே, அதுவும் இந்திய கலாசாரம் வண்ணமயமானது என்று எங்கு பார்த்தாலும் பேசிக் கொள்கிறார்களே, அப்படி என்னதான் இருக்கிறது இந்திய கலாசாரத்தில் என்று அறிந்து கொள்ள கடுகளவு ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது.

நம்பிக்கை, மூட நம்பிக்கை, ‘ஏன், எதற்கு?’ என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே துறந்தவனுக்கு இந்த வயதில் ஏன் இந்த வீண்வம்பு என்று தெரியவில்லை. ‘உன் நம்பிக்கை உன்னோடு, என் நம்பிக்கையின்மை என்னோடு’ என்று இருந்து கொண்டிருந்தவனுக்கு, இதைக் கண்டுபிடிக்க நெருங்கின நண்பர்களுக்கே பல ஆண்டுகள் பிடிக்குமளவுக்கு கேள்விகளுக்கு முறுவலை மட்டுமே பதிலாகக் கொண்டிருந்தவனுக்கு திடீரென இந்த ‘கலாசார தேடல்’ பித்து பிடிக்க இரண்டு காரணங்கள்: ஒன்று, தமிழ் இணைய அறிமுகம்; இரண்டு, பொதுவில் சொல்ல இயலாத சொந்த விஷயம்.

சரி, தேடலை எங்கிருந்து ஆரம்பிப்பது? ‘வாய்மொழிந்த வார்த்தை’கள் மேல் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. எதையும் ஆதாரப்பூர்வமாக அணுகியே பழகிவிட்டது. புத்தகங்கள், ‘அதிகாரப்பூர்வ’ இணையத்தளங்கள், மதுரைத் திட்டத்தில் கிடைக்கும் பழைய இலக்கியங்கள்(அங்கே பாதிக்கு மேல் பக்தி இலக்கியங்கள்தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?) – இவைதான் மேய்ச்சல் நிலங்கள்.

சொல்ல மறந்துவிட்டேனே, தேடலின் முதல் பகுதி ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்பதுதான்.

Barnes & Noble, Borders என்ற இரண்டு கடைகளிலும் Eastern Religions என்ற பகுதியில் இந்து மதம் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் இழுத்துப் போட்டுக்கொண்டு படிப்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைப் பழக்கமாகிவிட்டது. படிக்க எடுத்த அனைத்து புத்தகங்களிலும் ‘இந்து மதம்’ என்று ஒரு தனிப்பட்ட மதம் எதுவும் கிடையாது என்றுதான் ஆரம்பிக்கிறது! திரைப்படங்களில் ‘நிமிர்ந்து உட்காரச் செய்யும் காட்சி’ என்று சொல்வார்களே, அதே மாதிரி, ஆரம்பமே அசத்தலாக இருந்தது!

வேத காலத்தில் ஆரம்பித்து இன்றைய காலம் வரையிலான கதையைப் பல புத்தகங்களில் படித்துத் திகட்டி விட்டது. எல்லாவற்றையும் கோர்வையாக சொல்லக் கூடிய நிலை இப்போது இல்லை. ஆனால், இரண்டு எண்ணங்கள் மேலோங்கி நிற்கின்றன.

1. வர்ணாசிரம தர்மம் (கூடவே கொஞ்சம் மனு தர்மம்): வர்ணாசிரமம் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: கண்களை அகலத் திறந்து பாருங்கள். அது முடியாதெனில் இப்போது போலவே தயவுசெய்து உங்கள் கூட்டுக்குள்ளேயே இருந்து கொள்ளுங்கள்.

மேலே வெள்ளை, கீழே கருப்பு என்ற வர்ணாசிரம வண்ணங்களுக்குள் இருக்கும் அக்கிரமத்தைக் கருப்பு வெள்ளையாக, -இல்லை, இல்லை- வெள்ளை கருப்பாகப்(சொல்லும்போது கூட வெள்ளைதான் முதலில் வரவேண்டும்!) பார்க்க முடியாது உங்களால்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மரபு பின், அது எழுதப்பட்ட இயல்பால் தானாகத் திரிந்து நிற்கிறது – திரிக்கப்பட வேண்டிய வேலை அதிகம் இல்லாமலேயே. அது இன்று இமாலயமென உயர்ந்து நிற்கிறது.

அதைத் தூக்கி எறிந்துவிடச் சொல்கிற தைரியம் இருந்தால், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் தலையை உருட்டுவதை விட்டுவிட்டு இந்து மதக் காவலர்களிடம்(அசல், போலி என யாராயிருந்தாலும்) போய்ச் சொல்லுங்கள். அவர்கள் ஊர்ப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் உரக்கச் சொல்லச்சொல்லுங்கள். புனிதப் பக்கங்களிலிருந்து இந்தக் கொடுமையை நீக்கச் சொல்லிக் குரல் கொடுங்கள்.

ஓ, வேண்டாம் நில்லுங்கள்! அது உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட காரியமாக இருக்கலாம். முதல் படியாக, படித்துப் பல பட்டம் பெற்றும் வாழ்வியல் படிப்பில் அரிச்சுவடியில் இருக்கும் சக ‘கற்றுத் தேர்ந்தவர்களின்’ கண்களைத் திறக்கப் பாருங்கள்.

2. இன்றைய இந்து மதம்: இதிகாசங்களும், புராணங்களும் மட்டுமே இன்றைய இந்து மதத்தின் ஆதார சுருதி. சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கடைப்பிடிப்பது முக்கியமாகிப் போன நிலையாகிவிட்டது.

‘பகவத் கீதை’ மகாபாரதத்தில் ஒரு இடைச்செருகல் என்ற கோணம் ஆய்வு செய்யப்பட்டதா என்பதெல்லாம் காலத்திற்கும் கேள்விக்கும் அப்பாற்பட்ட விஷயம். ISKON உபயத்தில் இன்று அது இந்துக்களின் புனித நூலாக உருவெடுத்துவிட்டது.

மற்ற இந்திய மொழிகளில் எனக்கு சுத்தமாகப் பரிச்சயம் கிடையாது. புத்தகங்களில் கிடைக்கும் மேற்கோள்களைக் கொண்டும் மதுரைத் திட்ட நூல்களைக் கொண்டும் பார்த்தால், தமிழ் அளவுக்கு வேறெங்கும் பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார்களா என்பது சந்தேகமே. மற்ற மதத்தினரை நிந்தனை செய்யும்(மற்ற மதம் என்றால் வெளிநாட்டு மதம் இல்லை. வைணவ, சைவ, சமண, புத்த மதங்கள்.) பாடல்களை இன்றளவும் மனமுருகிப் பாடிக் களிக்கிறார்கள் என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது.

ஏன், நல்லதே இல்லையா, அதைப்பற்றிப் பேசக் கூடாதா? என்று கேட்கலாம். இருக்கிறது. அவற்றைப் பற்றிப் பேச நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

என் தேடல் தொடரும். ஆனால், பதிவு தொடருமா என்பது அப்போதைய உளநிலையைப் பொறுத்ததே…

குறிப்பு: மேம்போக்காக மட்டுமே சொல்லியிருக்கிறேனே தவிர, சொன்ன அனைத்துக்கும் மேற்கோள் காட்ட முடியும். குருட்டாம்போக்காகச் சொல்லிவிட்டுப் போகவில்லை, அது என் வழக்கமுமில்லை என்பதையும் அறிக.

Advertisements

Comments

1. மூக்கன் - Monday September 13, 2004

தேடுங்கள் பரி. சந்தோஷம்.

இது தவறு . இது சரி என்று சொல்வது இருக்கட்டும். இப்படி இருந்தது. இப்படி மாறி இருக்கிறது என்று சொல்வதையே பொறுக்க முடியாதவர்களால், இந்த உண்மையை கண்ணைத் திறந்து பார்க்க முடியும் என்று நினைக்கிறீர்கள்…??

“பெருமைக்கும் ஏனைத்தம் சிறுமைக்கும் அவர்தம் கருமமே கட்டளைக் கல்…”

2. பாரி - Tuesday September 14, 2004

அன்பின் பரி:

நான் உங்கள் பதிவை கண்டு நெகிழ்ந்தேன். ஒவ்வொருவரும் தன் தேடல்களால்தான் உண்மைகளை உணர வேண்டும்.

இப்பதிவிற்கு நன்றிகள்!!

3. Thangamani - Tuesday September 14, 2004

நல்லது பரி. நன்றிகள். பாரி (பாலாஜி) சொன்னதுபோல வேறெதற்காக இல்லாவிட்டாலும் ஒருவன் தனது சுயவிடுதலையை கண்டுகொள்ளும் முயற்சியில் இதையெல்லாம் கண்டுகொள்ளவும், உதறிச் செல்லவும் வேண்டும்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: