jump to navigation

தகராறு புடிச்ச தமிழ் Tuesday August 24, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

சுந்தரவடிவேல், தன் மகன் மாசிலனுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த போது தமிழ் மெய்யெழுத்து வரிசையில் ஒரு ஒழுங்கு இருப்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லியிருந்தார். சென்ற ஆண்டு ரா.கா.கியில் முத்து நிலவன் இதுபற்றி ஒரு விளக்கம் கொடுத்தார். அந்த மடலை சேமித்து வைத்திருந்தேன். அதிலிருந்து தேவையானதை மட்டும் இங்கு இடுகிறேன்.

தமிழ் எழுத்துக்களில், மெய்யெழுத்துக்களின் அமைப்பு முறையில் ஏன் இப்போதுள்ள அடுக்குமுறை ஏற்கப்பட்டது?

அதாவது,

க்ச்ட்த்ப்ற் – வல்லினம்,

ங்ஞ்ண்ந்ம்ன் – மெல்லினம்,

ய்ர்ல்வ்ழ்ள் – இடையினம் என,

இன்றைய குழந்தைகளுக்கு இன மெய்யெழுத்துக்களைச் சொல்லித்தருவதுபோலவே,

க் ச் ட் த் ப் ற் ங் ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் – என அடுக்காமல்,

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் – எனும் வரிசையில்

மெய்யெழுத்துக்களை அடுக்கியிருக்கக் காரணம் என்ன?

இதுதான், நமது முன்னோர்களின் மொழி நுட்பம்! சொல்லில் எந்த எழுத்துக்குப் பிறகு எந்த எழுத்து வரும்

என்பது பற்றிய அடிப்படை!

க்ச்ட்த்ப்ற் எனும் ஆறு வல்லின எழுத்துகளுக்கும், முறையே

ங்ஞ்ண்ந்ம்ன் எனும் ஆறு மெல்லின எழுத்துக்களும் இன எழுத்துக்கள்.

இன எழுத்து என்பது ஒன்றை ஒன்று சார்ந்து காத்து நிற்பது !

அதாவது, தமிழின் சொல் அமைப்பில், எங்காயினும் ஒரு மெல்லின மெய்யெழுத்து, சொல்லின் இடையே வந்தால், அதன் -இனமாக வரையறுக்கப் பட்டிருக்கும்- வல்லின உயிர்மெய் எழுத்துத்தான் அதற்கடுத்து வந்து நிற்கும்.

தங்கம் – ங் அடுத்து க, (எந்தச் சொல்லிலும் ங் எழுத்தை அடுத்து க வருக்கத்தைச் சேர்ந்த எழுத்தன்றி

வேறெழுத்து வராது, அதனால் தான் க் எழுத்தை அடுத்து தமிழின் மெய்யெழுத்து அடுக்கில் ங் நிற்கிறது.)

மஞ்சள் – ஞ் அடுத்து ச, (மேற் சொன்னவாறே, ஞ் என்றொரு எழுத்தைக் கொண்ட தமிழ்ச்சொல் வந்தால் அதை

அடுத்து ச வருக்கத்தைச் சேர்ந்த எதேனும் ஓர் எழுத்தே வந்து நிற்கும். அதனால் தான் ச் எனும் எழுத்தை அடுத்து ஞ் எழுத்து நிற்கிறது.)

இவ்வாறே,

மண்டபம் – ண் அடுத்து ட வருக்கமே வரும் ஆதலால், மெய்யெழுத்து அடுக்கில் ட் வை அடுத்து ண் எழுத்தும்,

பந்து – த் அடுத்து ந வருக்கமே வரும் ஆதலால், மெய்யெழுத்து அடுக்கில் த் எழுத்தை அடுத்து ந் எழுத்தும்,

பம்பரம் – ப் அடுத்து ம வருக்கமே வரும் ஆதலால், மெய்யெழுத்து அடுக்கில் ப் எழுத்தை அடுத்து ம் எழுத்தும்,

மன்றம், ன் அடுத்து ற வருக்ககமே வரும் ஆதலால், மெய்யெழுத்து அடுக்கில் ற் எழுத்தை அடுத்து ன் எழுத்தும்,

மாற்ற முடியாதவாறு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் இன்னொரு தெளிவும் கிடைக்கும்.

இந்தச்சொல்லின் இடையே (‘ஒத்தச்சுழி) ன் போடுவதா? , (ரெட்டைச்சுழி) ண் போடுவதா எனும்

குழப்பம் பெரும்பாலும் தீரும்.

அடுத்து உள்ள எழுத்து ட எனில் ண் தான் வரும்! ற எனில் ன் தான் வரும்! அதனால் ண் என்பதை ‘டண்ணகர

ஒற்று’ எனவும், ன் என்பதை ‘றன்னகர ஒற்று’ எனவும் இலக்கண நூலார் சொல்வர். உச்சரிப்பு முறையாலும்

இவற்றுக்கு வேறு பெயர்கள் உண்டு.

என்னத்த சொன்னாலும் “பெரிய ற , சின்ன ர ” என்பவரைத் திருத்தமுடியாது போங்க!

இதனால்தான், புலவர் கீரன், சின்னத்தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகராறுன்னா பெரிய ற

போடு’ன்னார்!

மேற்கண்ட விளக்கத்தில் விதிவிலக்குகளும் உண்டு. பிறமொழிச்சொற்கள், இப்போது பிறமொழிகளிலிருந்து எழுதும்போது, அந்த மொழியின் உச்சரிப்புக்கு இணையான உச்சரிப்புக்குத் தகுந்த மாதிரி எழுதுவது என்று சில காரணங்ளினாலும் விதிவிலக்கான வார்த்தைகள் உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த வகையில்தான் வரும். விளையாட்டாய், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதிலுள்ள வார்த்தைகளைக் கவனியுங்களேன்.

பள்ளிக்கூடத்தில் இலக்கணம் என்றால் பெரும்பானோரைப் போல எனக்கும் பாகற்காய்தான். இலக்கணம் பாகற்காயாய் ஆனதற்கு என்ன காரணம் என்று அவரே கேட்காமலேயே ஒரு பதிலையும் சொல்லியிருந்தார். அது:

“எனது 23 ஆண்டுக்கால தமிழாசிரியப் பணியில் எவ்வளவோ மனக்குமுறல்கள் உண்டு!

‘தமிழ்தானே’ எனும் அலட்சியத்தால், தமிழர்களே தமிழைப் புறக்கணிப்பது ஒருபக்கம் என்றால்,

எவை இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்குத் தேவையோ அவற்றைத் தராமல், எவை அவ்வளவாகத் தேவையில்லையோ அவற்றையே இலக்கணமாகச் சொல்லித்தரும் தமிழ் – இலக்கணப் பாடங்கள்!

எனது கல்வியாண்டுத் தொடக்க வகுப்பிலேயே இவற்றைப் பற்றிச் சொல்லிவிடுவதே எனது வழக்கம்.”

பாடப்புத்தகத்தில் மட்டுமில்லை, இணையத்திலும் நிறைய கூத்து இந்த மாதிரி நடக்கிறது.

தமிழ் படிப்பதென்றால் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்ற அளவுக்கு அலறுகிறார்கள்.(பெயர் தான் மிரட்டலாக இருக்கிறதே தவிர, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்பது வேறு விஷயம்.)

மிரட்டாமல், எளிமையாக இலக்கணத்தை அழகாக சொல்லித்தரலாம். தொல்காப்பியத்தையும் நன்னூலையும் அதிலுள்ள பாடல்களை அப்படியே மேற்கோள் காட்டுவதை விட எளிய வழியில் சொல்லித்தர முடியும். விஷயம் தெரிந்தவர்களால் மட்டுமே இது சாத்தியம். யாராவது மனது வைத்தால் சரி.

Advertisements

Comments

1. மூக்கன் - Tuesday August 24, 2004

என்னய்யா..குதிரை அழகரே…எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனக்குச் சொல்லித்தர முடியுமா..?? பேரக் கேக்கவே கதி கலங்குது. ஒரு ஒரு வார்த்தையும் ஒண்ணுமே புரியாம, இலத்தீன் மொழியில எழுதின மாதிரி இருக்குதே…:-)

கொஞ்சம் தயவு பண்ணினா, அடுத்த ஜன்மத்துல எனக்குக் கிடைச்சா மாதிரி தமிழாசிரியர்கள் உனக்கும் கிடைக்கும்.

அப்போ, கம்பன் கவிமணி மாலை ராமபத்திரனிடமும், அரங்கராசனிடமும், விருத்தாம்பாளிடமும் தமிழ் படித்துவிட்டு வேறு யாராவது “ உங்க பையனை தமிழ் க்ளாஸ் அனுப்பலியா ” எனக் கேட்டால் உமக்கும் அப்படித்தான் கோபம் வரும்.

என்னய்யா…83 கிலோல எதுத்தாப்பல இருக்கற ஆள் கண்ணுக்குத் தெரீலயான்னு கேட்டேன்ல ஒரு கேள்வி.

கலிங்கத்துப்பரணி படிச்சுபிட்டு உடம்பு சும்மா ஜிவு ஜிவு ந்னு இருக்கா…? :

2. KVR - Tuesday August 24, 2004

மூக்கரே, எண்சீர் கழிநெடிலடி என்ன அதுக்கு மேல கூட கத்துக்கலாம், எல்லாம் மனசு தான் காரணம்.

பரி, அப்பப்போ இப்படி கொஞ்சம் தொல்காப்பிய டிப்ஸ் கொடுங்க. முடிஞ்சா சந்திப்பிழை (மலையாளத்திலே படிச்சிடாதிங்க) பத்தியும் எழுதுங்க.

3. சுந்தரவடிவேல் - Tuesday August 24, 2004

எனக்குத் தோன்றும் விதி விலக்கு:

“இங்ஙனம் தாத்தா மும்முரமாக மஞ்ஞையின் பின்னே அந்நாளில் ஓட்டமெடுத்தார்” முன் (அல்லது) பின் அந்த ஒற்றைச் சார்ந்த எழுத்துக்கள் வருவது…

முத்து நிலவனுக்கும் உங்களுக்கும் ஒரு நன்றி!

4. பரி - Tuesday August 24, 2004

..83 கிலோல எதுத்தாப்பல இருக்கற ஆள்…

>>

இந்த 83 கிலோல “தெளிச்ச”தால வந்த எடை 40 கிலோ இருக்குமே?! 🙂

5. -/peyarili. - Tuesday August 24, 2004

விதி…….. விலக்கு 😉

/ண்-ட/

க/பு/திண்ணியம், திண்மை, ப/க/எண்கள், பண்பாடு, மாண்பு

காண்வெளி, காண்காட்சி, காண்நிலை

(இவை அடிப்படையிலே இரு சொற்கள் சேர்ந்துவருவதாலே விலக்காகலாமோ?)

/ன்-ற்/

மு/அ/வன்பு, இ/துன்பம், க/அன்னம், பன்னீர், பன்(+)னாடை, வன்(+)செவி(யோ நின்(+)செவிதான்?), வான்(+)வெளி, குன்மம்

/ம்-ப்/

செம்மை, தும்மல், எம்மட்டு, நம்+நாடு

6. பாலாஜி-பாரி - Tuesday August 24, 2004

இப்படி ஒரு கேள்விய கேட்டதால எனக்கு சில விசயங்கள் தெரிஞ்சுது. தேவநேயப் பாவணரோட ஒரு புத்தகத்த குடையும் போது தோணின சில கேள்விகளுக்கு பதில் கிடைச்சது. நன்றிகள் மக்களே

7. காசி - Wednesday August 25, 2004

ஆர்வமிருக்கிறவர்கள் (மட்டும்) இன்னொரு முறை இதைப் பார்க்கலாம்:

http://kasi.thamizmanam.com


Sorry comments are closed for this entry

%d bloggers like this: