jump to navigation

ஒரு நாள் பொழுது – கிறுக்கல் குறிப்பு Friday August 20, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

வார நாட்களில், ‘இன்னும் ஐந்து நிமிஷம்’ என்று சிணுங்கிக்கொண்டு வரும் தூக்கம் வார இறுதியில் காணாமல் போவது ஆச்சரியம். பாதி மரத்துப்போன கண்களோடு இருந்தாலும் பரவாயில்லை இன்னும் கொஞ்சநேரம் தூங்கலாம். ஆனால், யாரோ முகத்தில் தண்ணீர்த் தெளித்தது மாதிரி சட்டென்று விழிப்பு வரும். வார இறுதிக்கென்றே இருக்கும் வேலைகள் கண் முன்னாடி வரிசையில் நிற்கும். டிவிடி ப்ளேயரினுள் -6 மாதங்களுக்கு முன்னர்- போட்ட எம்பி3 சிடியை, எத்தனையாவது முறை பாடுகிறது என்ற கணக்கெல்லாம் மறந்து போய் ஓடவிட்டு, வீட்டின் எல்லா மூலைகளிலும் இசையோசை இழையவிட்டு வேலைகள் நடக்கும்.

உள்ளே முடிகின்ற வேலைகள் சில, வெளியே சென்று செய்ய வேண்டியவை சில, உள்ளே செய்ததின் மிச்ச சொச்சத்தை வெளியே செய்ய வேண்டியவை சில என்று வேலைகள் பலவிதம். இப்படியான ஒரு சனிக்கிழமையில் ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு எப்போதும் போல நேரம் தாழ்ந்த மதிய சாப்பாடு முடித்து ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தால் தகிக்கும் வெயில்.

நீச்சல் குளம் பக்கம் போய் நாளாகிறதே, இந்த வெயிலுக்கு அதுதான் சரியென்று மூளையரசாங்கத்தின் ‘அறிவுரைத் துறை’யின் ஆணையின் பேரில் பொடி நடையாய்ப் போனால் ஈ, காக்கா கூட இல்லை. ஒரு பக்கம் ஏமாற்றம் ஒரு பக்கம் சந்தோஷம். நாகரிகத்துக்காக ஒதுங்கி ஒடுங்கி கவனமாக நீந்தும்போது தண்ணீர் அடுத்தவர் மேல் அதிகம் தெளித்துவிட்டல் “ஸாரி” சொல்லத் தேவையில்லாமல், 6 அடி முதல் 9 அடி வரையிலான -நீச்சலுக்கான ஆழத்தில்- நாக்குத் தொங்கிப் போகும் அளவுக்கு இஷ்டத்துக்கு நீச்சல்.

குளத்தின் அடியைத் தொட ஆசை. ‘பல்டி அடிக்கக்கூடாது'(No diving) பலகையின் எச்சரிக்கையை மீற ஓரத்தில் குறுகுறுத்தாலும், நாகரிகம் தடுத்துவிட்டது. முடிந்த வரை முழுகிப் பார்த்தாலும் ஆர்க்கிமிடீஸ் கோட்பாட்டின்படி, எடைக்கு சம அளவுள்ள தண்ணீர் மேலெழும்பியதுதான் மிச்சம். தரையைத் தொடுவதற்காக எடையைக் கூட்டி குண்டாக வேண்டுமா? ‘சீ… சீ… இந்தத் தரை வேண்டாம்’ என்று நரிக்கதைப் பேசிவிட்டு இன்னும் இரண்டு சுற்று நீந்தியதில் குற்றாலத்தில் கும்மாங்குத்து வாங்கி ஸ்பெஷல் மசாஜ் செய்துகொண்ட உணர்வு.

அந்திசாய்ந்து கொண்டிருந்தது. இன்னும் இருந்த பொழுதை இதமாகக் கழிக்க, ஏரிக்கரை சிறந்த இடம். குழந்தைகள் மணலில் குழி தோண்டி விளையாடும் இடத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளி, அவர்கள் பார்க்காதவாறு ஏரி நீருக்கருகில் மடித்துச் சுருட்டிய நாற்காலியை விரித்து உட்கார்ந்து, உட்காரப் போடப்பட்டிருக்கும் மர பெஞ்சில் காலை நீட்டி, கொண்டுவந்த நோட்டுப் புத்தகம், பேனாவை ஓரத்தில் வைத்துவிட்டு இதமாக வருடும் தென்றலை ஒரு நீண்ட மூச்சு இழுத்துவிட்டு கண்களைச் சுழற்றி காட்சிகள் காணல்.

நடைபாதையில் வாண்டுகள் குட்டி சைக்கிள் பயிற்சி – தலையில் ஹெல்மட் கட்டாயம். பெரும்பாலும் பெருத்த உருவங்கள் நடையாய் நடந்து துரும்பேனும் உடல் குறைக்க பெரும் பிரயத்தனம். சிலர் பேச்சுத்துணையுடன். சிலர் செல்பேசித் துணையுடன். ஆங்கிலம் தெலுங்கோடு அதிசயமாய் ஒரு கன்னடக் குரல். தவறியும் தமிழைக் காணோம் – எல்லாருக்கும் ‘லை·பாய்’ ஆரோக்கியம் போல.

குழிதோண்டும் விளையாட்டு சலித்துவிட்டதோ என்னவோ இப்போது குழந்தைகளை அங்கேக் காணவில்லை. முழங்கையைத் தொடையில் ஊன்றி, உள்ளங்கையிரண்டும் கன்னங்கள் தாங்க, சலனமற்றத் தூண்டிலை அசையாமல் பார்க்கும் ஒருவர் சற்று தூரத்தில். என்னென்ன நினைவோட்டங்களோ அவர் நெஞ்சில்.

நோட்டுப் புத்தகத்தில் இன்னது என்றில்லாமல் ஏதேதோ ஏறின. வரையறையெல்லாம் வைத்தால் வெற்றுக் காகிதமே மிஞ்சும்.

செடியைக் கூட அசைக்க முடியா காற்று பரந்தவெளி நீரைச் சலனப்படுத்திக் கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முகடுகளும் அகடுகளுமாய் துளித்துளியாய் அலைகள். அக்கரையில் தொடங்கியோ பாதியில் தொடங்கியோ இக்கரையில் இடைவிடாமல் கரை சேர்ந்தன. லேசாக இருட்ட ஆரம்பித்தது. நடைபாதைப் பயிற்சியாளர்கள் தொலைந்திருந்தார்கள். ஏரி நீர் கருத்திருந்தது; மரங்களினூடாக புகுந்த வெளிச்சத் துளியினால் ஒரு மஞ்சள் திட்டு மட்டும். தூண்டில் காரர் எடுத்துச் சுருட்டினார்.

தேய்பிறை போலும்; வானில் ஒரு களங்கமுமில்லை. சலவை செய்த திரைச்சீலையெனும் வானத்தில் நட்சத்திரப் புள்ளிகள் கூட இல்லை. அதெப்படி முடியும்? எங்காவது ஒரு மீனாவது இருக்க வேண்டும். கண்கள் இடுக்கிக் கழுத்தைச் சுழற்றித் தேடியதில் இரு சுற்றுகள் முடிந்து மூன்றாவது தொடங்கி சற்றேத் தொடர்கையில், கழுத்து தன்னிச்சையாக எதிர்த் திசையில் வந்து மேற்கே மினுக்கிய மீன் அகப்பட்டது. ஒன்றுதானா? மேலும் தேடியதில் பலனில்லை.

‘அஸ்தமன அரைமணிக்கப்புறம் பூங்கா மூடப்படும்’ – வாசலில் இருந்த அறிவிப்பு ஞாபகம் வந்தது. மெல்லக் கிளம்பி, மெல்லிய இசை அலைவரிசை வைத்து, சன்னல்கள் இறக்கி, மெதுவாய்க் காரோட்டிய போது, ஏரியின் ஈரக்காற்று காது மடல்களில் உரசி ‘இது கோடையில்லை’ என்றது.

Advertisements

Comments

1. சுந்தரவடிவேல் - Saturday August 21, 2004

அழகான பதிவு!


Sorry comments are closed for this entry

%d bloggers like this: