jump to navigation

சோதனையல்லாத சோதனை Monday August 9, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

அமெரிக்காவில் கார் வைத்திருப்பவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு மற்றும் புகை சோதனை(Safety test and Emission test) செய்ய வேண்டும். இரண்டும் தனித்தனி சோதனைகள். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலப் போக்குவரத்துத் துறையால்(Department of Transportation – DoT) அங்கீகரிக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் இருக்கும்.

எந்த வாகனமாக இருந்தாலும் அதற்கு உரிமம் பெறவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த உரிமம் வாகனப் பதிவிலிருந்து(Registration) வேறுபட்டது. வாகனத்தை ரோட்டில் ஓட்ட, காலாவதியாகாத ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பதிவு எண் தகடுதான்(License plate) அந்த உரிமம். பதிவு எண் கொண்ட தகட்டை வாங்கும்போது கூடவே ஒரு ஸ்டிக்கர் கொடுப்பார்கள். நீங்கள் பதிவு செய்த மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்கு அது செல்லுபடியாகும். அடுத்த வருடம் புது ஸ்டிக்கர் வாங்கி(காசு கொடுத்துத்தான்!) ஒட்டிக் கொள்ள வேண்டும்.(பதிவு எண் மாறாது என்பதை கவனிக்க.)

இப்படி புது ஸ்டிக்கர் வாங்கும்போது சும்மா போய் வாங்கிவிட முடியாது. போன வருடம் வாகனத்தின் மீது வரி கட்டியதற்கான ரசீது, பாதுகாப்பு மற்றும் புகை சோதனைகளில் வண்டி பாஸ் செய்ததற்கான ஆவணங்கள் என்று காட்டினால்தான் வாங்க முடியும். புதுப்பிக்க நீங்கள் மறந்துவிடுவீர்கள் என்று அரசாங்கத்திற்குத் தெரியும், அதனால்தான் முன்கூட்டியே உங்களுக்கு ஓலை அனுப்பிவிடுவார்கள். அதற்கும் மசியாமல் மறந்தால், காலாவதியான ஸ்டிக்கரை வைத்து வாகனத்தை ஓட்டியதற்காக அபராதம் கட்டுவது உங்கள் தாராள குணத்தைப் பொறுத்தது.

ஒவ்வொரு நாளும் தபால் பெட்டியைத் திறந்தால், உருப்படியான கடிதங்களை விட குப்பைகள்தான் அதிகம் இருக்கும். அன்னப்பறவை போல இவற்றைப் பிரித்து எடுப்பதே பெரிய வேலை. சரி, அல்லவை நீக்கி நல்லவை பிரித்தெடுத்தாயிற்று, இனியெல்லாம் சுகமே என்கிறீர்களா? அதுதான் இல்லை. நல்ல கடிதங்களின் உள்ளும் குப்பைகள் இருக்கும். ‘உங்கள் படம் போட்ட காப்பி கோப்பை வெறும் $25 மட்டுமே, இந்தச் சலுகைக் எங்களின் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர் உங்களுக்காக மட்டுமே, முந்துங்கள்!’ என்கிற ரீதியில், உங்களுக்கு பில் அனுப்பும் அத்தனைக் கம்பெனிகளிடமிருந்தும் இப்படியான இடைச்செருகல்(inserts) காகிதங்கள் இருக்கும்.

என்னுடைய ஸ்டிக்கரைப் புதுப்பிக்க வாகனப் பதிவு அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது. பாதுகாப்பு மற்றும் புகை சோதனை செய்ய வேண்டுமே, அதற்கு நேரம் ஒதுக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே நடுவில் இருந்து ஒரு காகிதம் நழுவியது. அதில், ‘புகை சோதனைச் சாலைக்குப் போகாமலேயே பாஸ் சர்ட்டிபிகேட் வாங்குங்கள். கீழே இருக்கும் நம்பருக்கு ஃபோன் பண்ணி $24 கொடுத்துவிடுங்கள். அடுத்த 14 நாட்களில் உங்கள் கையில் சர்ட்டிபிகேட் இருக்கும்’ என்று இருந்தது.

இது என்னடா இது அரசாங்கக் கடிதங்களிலும் விளம்பரம் இருக்கிறதே, இவர்கள் எப்படி மூன்றாவது ஆளுக்கு என் தகவல்களைத் தெரிவிக்கலாம், இது சட்டவிரோதமில்லையா என்று யோசித்துக் கொண்டே காகிதத்தைத் திருப்பினால், அங்கே இருந்த முகவரி அரசாங்க அலுவலக முகவரியா ஏதாவது புகை சோதனை செய்யும் தனியார் கம்பெனியின் முகவரியா என்று தெளிவாக இல்லை. இணய முகவரியும் எதுவுமில்லை. உறுதி செய்யாமல் எந்தக் காரியமும் செய்வதில்லை என்பதால், இதைப்பற்றி முழுவதும் தெரிந்த பிறகே மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்று ஓரமாக வைத்துவிட்டேன்.

Gateway Clean Air Program என்று அந்தக் காகிதத்தில் இருந்ததால் கூகுள் வழி அந்தத் தளத்தை அடைந்து மேலதிக விவரங்களைப் பற்றிப் படித்தால், இது முழுவதும் அரசாங்க வேலையே என்று தெரிய வருகிறது. என்னுடைய தகவலை யாருக்கும் விற்கவில்லை(மில்லியன் டாலர் கேஸ் ஜஸ்ட் மிஸ்!).

பழைய ஹாலிவுட் படங்களில் வருவது போன்று ரோட்டோரமாக ஒரு வேனை நிப்பாட்டி வைத்துக் கொண்டு கார்களிலிருந்து வரும் புகையை “வேவு” பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேவு பார்க்கும்போது காரின் பதிவு எண் தகட்டையும் ஃபோட்டோ பிடித்துக் கொள்கிறார்களாம். வண்டி சோதனையில் பாஸானால் புதுப்பித்தல் ஞாபகப்படுத்தலுடன் இப்படி இடைச்செருகலை அனுப்பிவிடுகிறார்களாம். என்ன தொழில்நுட்பமோ என்ன புதுமுறையோ, ‘நீ வீட்டிலேயே இரு, ஆனால், காசு மட்டும் கொடுத்துவிடு’ என்று அன்பாக அவர்கள் சொல்லும்போது வேலை மெனக்கெட்டு நான் சோதனைச் சாலைக்குப் போகவேண்டுமா என்ன?

Advertisements

Comments

1. சுந்தரவடிவேல் - Thursday August 12, 2004

வந்த புதிதில் வாங்கிய ஸ்டிக்கரைத் தகட்டில் ஒட்டாமல் பத்திரமாக உள்ளே வைத்திருக்க, மாமா பிடித்துத் தண்டம் கட்டச் சொல்ல, நீதிமன்றம் வரை சென்று நியாயம் கண்டு வந்த அந்த இனிமையான நாட்கள்…


Sorry comments are closed for this entry

%d bloggers like this: