jump to navigation

திரும்பிப் பார்க்கிறேன் Thursday May 27, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

கிராமம் என்றதும் பெரும்பாலானவர்களுக்கு மனதில் தோன்றுவது சினிமாவில் மிகைப்படுத்திக் காட்டப்படும் “ஆலமரத்தடிப் பஞ்சாயத்தும், பித்தளை சொம்பும்”தான். காலேஜில் படிக்கும்போதும் சரி, வேலை பார்க்க ஆரம்பித்த புதிதிலும் சரி, ஊருக்குப் போகிறேன் என்று சொன்னால் நண்பர்கள் ஒரு வசனத்தை தயாராக வைத்திருப்பார்கள். “என்னடா, ஊர்ல போய் எறங்கினதுமே கழுத்துல மாலையப் போட்டு, டப்பாங்குத்து ஆடி, தலைமேல தூக்கிட்டுப் போவாங்களா?”

கிராமம் என்றாலே அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்த பெருமை தமிழ் சினிமாவைச் சேரும். உண்மையில் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. எதிரில் வரும் *அத்தனை* பேரும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்; நலம் விசாரிப்பார்கள்; அவ்வளவே.

கிராமத்து வாழ்க்கை பெரும்பாலும் அலுப்பானதுதான். நகரத்து வாழ்க்கையில் எப்படி சாவி கொடுத்த பொம்மை போல் உழல்கிறோமோ அதே மாதிரியான உழலுதலும் அங்கே உண்டு. என்ன ஒரு வித்தியாசம், இந்த உழலுதல் ஒரு சுழற்சியில் வரும். காலையில் எழுந்து அரக்கப் பரக்க ஆஃபீஸ் போவது, சோர்வுடன் திரும்ப வருவது போன்ற ஒரே மாதிரி உழற்சி கிடையாது.

தண்ணீர் வந்து பாய்ந்து, வயலை சேறு படுத்தி நடுவது முதல் அறுவடை செய்து முடித்து, அதற்குப் பிறகு பயறு உளுந்தோ, பருத்தியோ பயிரிடுவது வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான வேலைகள். இடையில் வீட்டு வேலைகள், வீட்டுக் கொல்லைப் புறத்து வேலைகள், வேலி கட்டுதல், ஆடு, மாடுகள் பார்த்தல், நெல் அவித்தல், அவித்த நெல்லை காக்காய் ஓட்டிக்கொண்டே காயவைத்தல் போன்ற மாளாத வேலைகளும் உண்டு.

மட்டை முடைதல், கயிறு திரித்தல், பிரி முறுக்குதல், அலக்கு கட்டுதல், அலக்கினால் முள் அறுத்தல், அறுத்த முள்ளைக் கொண்டு வேலி கட்டுதல், பாலை கிழித்தல், வளைந்திருக்கும் மூங்கிலை தணலில் வாட்டி நேராக்குதல், புல் அறுத்தல் என்று எத்தனையோ வேலைகள் உண்டு. இதையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது; பழகினால் மட்டுமே முடியும். எல்லா வேலைகளையும் எல்லாராலும் நன்றாகவும் செய்ய முடியாது. ஒவ்வொரு வேலைக்கும் “கைராசியான ஆள்” என்று ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.

இவற்றை பற்றியப் பதிவு எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஓவ்வொன்றைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் என்ற ஆவல் உண்டு. அதே சமயத்தில் எப்படி எழுதலாம் என்ற குழப்பமும் இருக்கிறது(எதற்கு இதெல்லாம்? என்று கேட்பவர்களுக்கு: ஆத்ம திருப்திக்காகவும், அதன் விளைவாய் நடக்கும் ஆவணப்படுத்துதலுக்கும்.)

வெறுமனே வார்த்தைகளால் வர்ணித்தால் அதன் தாக்கம் சரியாக இருக்குமா என்பது சந்தேகம். உதாரணமாக மட்டை முடைதலை(தென்னங்கீற்று செய்தல்) விவரிக்கத் தொடங்கினால் “ஓலையை காம்பிலிருந்து ஒரு இஞ்ச் விட்டு மடித்து, ஓலையை விரித்து, ஒரு ஓலை தாண்டி இருக்கும் ஓலைக்கடியில் விட வேண்டும்; இப்படியே தொடர வேண்டும்” என்று சொன்னால் ஒரு மண்ணும் புரியாது. படங்கள் காட்டி விளக்கினால் இந்த வேலை கொஞ்சம் எளிதாகும்.

நம் வாழ்நாளில் வாழ்க்கை முறைகள் மாறிக் கொண்டே வருகின்றன. இப்போது வாழும் முறையைப் பற்றிப் புலம்பவோ, சிலாகிக்கவோ செய்வோமோயொழிய இதன் நுணுக்கங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டோம். நாளை இது மாறி, புது முறை வந்ததும் “ஓ! அந்த இனிமையான நாட்கள்” என்றோ, “அந்தக் கொடுமையை வாழ்நாளில் இனி அனுபவிக்கக் கூடாது” என்றோ நினைத்துப் பார்ப்போம்.

இந்தத் “திரும்பிப் பார்த்த”லுக்கு வாழ்க்கை முறைப் பதிவு உதவியாக இருக்கும் தானே?

Advertisements

Comments

1. NONO - Thursday May 27, 2004

நீங்கள் என்னுவது செரியே! எமது வாழ்கை முறையை பதிவு செய்வுது முக்கியம், முடிந்தால் படங்களுடன் விபரியுங்கள், இல்யையேல் எழுதுங்கள்! விளங்கிக் கொள்ள முயச்சிக்கிறோம்!!!

2. kvr - Friday May 28, 2004

பரி, எழுத ஆரம்பிங்க. நானும் ஒரு கை போடுறேன். ஆட்டைய அசத்தலாம்.

3. sundaravadivel - Friday May 28, 2004

ஆஹா, நல்லதொரு யோசனை. எனக்கும் நெல்லவிக்கிறது, மிஷினுக்குப் போயி அரைக்கிறது, தவுடு அள்ளுறது, வெறகு ஒடக்கிறது…எல்லாம் சொல்ல ஆசை. எழுதத் தொடங்குனா வந்துடும். ஆமா, பொதுவுல கேக்கலாமா, நீங்க எந்த ஊரு?

4. Badri - Saturday May 29, 2004

அடுத்த முறை கிராமத்துக்குப் போகும்போது கையில் டிஜிட்டல் புகைப்படக் கருவிகளுடன் செல்லவும். தனிப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வரவும். பின்னர் தனிப்படங்களை வைத்து, கோவையாக, ஒரு தமிழக கிராமத்தின் கதையை எடுத்து வைக்கவும்.

இன்னும் சில மாதங்களில் பல கிராமங்களில் நேரடி பிராட்பேண்ட் இணைய இணைப்பு வரும். அப்பொழுது அங்கிருந்தே யாராவது தொடராக வலைப்பதியலாம்.

5. பரி - Saturday May 29, 2004

நன்றி NONO(ஆஹா என்ன பேர்! 🙂 )

Badri: அதைத்தான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் ஒரு அளவே இல்லாம கனவு காண்றீங்க(பிராட்பேண்ட்) 🙂

kvr, sundar: செய்வோம். கொஞ்சம் படம் காட்டினா நல்லா இருக்கும்னு பாத்தேன். படம் காட்டத் தேவையில்லாததப் பத்தி எழுத ஆரம்பிச்சிடலாம்.

6. பாலமுருகன் - Wednesday June 2, 2004

பரி, பத்ரி அளவே இல்லாம கனவு காணலே.. கிராமங்களில் broadband நாம் நினைப்பதை விட விரைவில் சாத்தியமாகும். ஒன்னு தெரியுமா. கிராமத்தில் வசிக்கும் எங்க அப்பா செல்போன் வாங்கின பிறகுதான் எங்க வீட்டுக்கு landline தொலைபேசி கிடைத்தது.

நான்கு ஆண்டு முன்பு வரை எங்களூரில் தொலைபேசிக்கு முன் பணம் கட்டிவிட்டு சுமார் 100 பேர் 5 ஆண்டுகள் காத்திருந்தனர். இப்போது கிராமத்து தெருக்களில் செல்போன் சகஜம்.

7. குசும்பன் - Wednesday June 2, 2004

ஆஹா…கிளம்பிடாய்ங்கடா…கிளம்பிடாய்ங்கடா…யெளுதுங்க பாசு…

கோக்கோட நான் ரெடி…குசும்பு பண்ணத்தான்…


Sorry comments are closed for this entry

%d bloggers like this: