jump to navigation

இலங்கைப் பிரச்சினையும் என் பள்ளிப் பருவமும் Thursday April 29, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில்(6-10 வகுப்புகள்) பாடப்புத்தகத்தைத் தவிர, வேறு எதையும் படித்தால் “கதைப் புத்தகம் படிக்காதே” என்று திட்டு விழும்.

வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து, வீட்டுப்பரணில் அடுக்கியிருந்த சில புத்தகங்களைத் ‘திருட்டுத்தனமாக’ படித்ததுண்டு.

புத்தகங்கள் மேல் ஒரு அலாதி பிரியம். அது “அந்துமணி பதில்கள்” வரும் வாரமலாராக இருந்தாலும், “ராணி காமிக்ஸாக” இருந்தாலும், முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை படித்துவிடுவது வழக்கம். பல சமயங்களில் அட்டை இல்லாத புத்தகங்கள்தான் படிக்கக் கிடைக்கும். இரவல் கொடுப்பவர்கள், அட்டைப் படங்களை யாரேனும் திருடிவிடுவார்கள் என்று முன் ஜாக்கிரதையாக கிழித்து வைத்துக் கொள்வது வழக்கம்.(நான் சொந்தமாக புத்தகங்களே வாங்கியதில்லை என்று இதுவரை சொன்னதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருந்தால், நீங்கள் பயங்கர அறிவாளி.)

செய்தித்தாள்கள் படிப்பதில் முதலில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை.(இப்போது நேர் எதிர்.)

மேட்டூர் அணை திறந்துவிட்டார்களா, கல்லணை எப்போது திறப்பார்கள்? என்பது போன்ற செய்திகளுக்காகப் பார்ப்பது, மற்றும் அதிமுக்கியமான “கன்னித்தீவு” படிப்பதோடு சரி.

சில சமயங்களில், சில இடங்களில் செய்தித்தாள்களைப் படிப்பதைத் தவிர்க்கவே முடியாது.

முடிவெட்டக் காத்திருக்கும் சமயங்களில், சலூனில் இரண்டு சுவர்களிலும் இருக்கும் கண்ணாடிகளில் பிரதிபலிப்புப் பிம்பங்கள், கடை ஏதோ அரை கிலோமீட்டர் நீளத்திற்கு இருப்பது மாதிரியான பிரமையைப் பார்த்துச் சலித்தபின் தினத்தந்தியே கதி.

கண்டபடி பக்கங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தாலும் எதுவும் மண்டையில் ஏறாது. சும்மா பாவ்லா காட்டுவதற்காகவாவது புரட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம்.

பக்கத்து ஊர்த் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்று தெரிந்திருந்தும் அது பேப்பரில் “இன்றைய சினிமா” பகுதியில் இருக்கிறதா என்று பார்த்தால், படுபாவிகள் சின்ன ஊர்களில் ஓடும் படங்களைப் பற்றி ஒரு வார்த்தை போட்டிருக்க மாட்டார்கள். மாயவரம், கும்பகோணம் என்று பெரிய ஊர்கள் மட்டுமே இருக்கும்.

முடிவெட்டுபவர் ஒழுங்காக தன் வேலையைப் பார்க்காமல் பேசிக்கொண்டே இருப்பார். சில சமயம் பேச்சு சுவராசியத்தில் முடிவெட்டுவதையே நிறுத்திவிடுவார். ‘யோவ், சீக்கிரம் வெட்டி முடிய்யா, எவ்ளவு நேரம் தினத்தந்தியப் படிக்கிறது?’ என்று சொல்லத் தோன்றும்.

வெளியே சொல்ல முடியாத கடுப்பில் தினத்தந்தி இன்னொரு முறை புரட்டப்படும். முன்பு படித்த(பார்த்த) செய்திகளைத் தவிர்த்துவிட்டு வேறு செய்திகளைப் படிக்க மிகவும் பிரயத்தனப் பட்டு முயன்று கொண்டிருப்பேன்.

அந்த மாதிரி ஒரு தருணத்தில் கண்ணில் பட்ட செய்தி இன்று நிழலாடுகிறது. “இலங்கையில் இந்திய ராணுவம் குவிப்பு” என்கிற ரீதியில் வழக்கமான தினத்தந்தி தலைப்பு ஒன்று.

இந்தச் செய்தி பார்த்த சில நாட்களுக்குப் பிறகோ, அல்லது அதற்கு முன்போ, சரியாக ஞாபகமில்லை, ஒரு நாள் பள்ளிக்கூடம் லீவ்.

‘ஆஹா, செம ஜாலி. வீட்டுக்குப் போய் பொன்வண்டு பிடிக்கலாம்’ என்ற நினைப்பில் மண் விழுந்தது.

“யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது. எல்லாரும் ரோட்டுக்குப் போய், இரண்டு பக்கமும் கைகோர்த்துக் கொண்டு வரிசையாக நிற்க வேண்டும்.” என்று கட்டளை.

ஏன்? எதற்கு? என்று கேட்கும் பருவமாக இருந்தாலும், வாத்தியாரைக் கேள்வி கேட்கும் துணிச்சல் வேண்டுமே!

சத்தம் போடாமல் போய் ரோட்டுக்கு இரண்டு பக்கமும் நின்றோம். நின்றோம், நின்றோம் நின்று கொண்டே இருந்தோம். எதுவும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. ரோட்டில் பஸ்களையும் காணவில்லை. திடீரென்று என்னாச்சு, காலையில் வரும்போது பஸ்ஸில்தானே வந்தோம், பஸ் ஸ்ட்ரைக் பற்றி எதுவும் பேச்சு அடிபடவில்லையே? என்று ஒரே குழப்பம். வெயில் வேறு ஏறிக்கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிய பேரணி ஒன்று வந்தது. என்னனவோ கோஷம் போட்டார்கள். அதில் ஒன்று இன்றளவும் ஞாபகம் உள்ளது: “ஜயவர்த்தனே பொண்டாட்டி, ஊருக்கெல்லாம் வப்பாட்டி!”

‘போடுங்கம்மா ஓட்டு, ரெட்ட எலையப் பாத்து’-ன்னு கோஷம் கேட்டே பழக்கப்பட்ட எங்களுக்கு இது என்ன சமாச்சாரம் என்றே புரியவில்லை.

அந்தக் காலகட்டத்தில் தினத்தந்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்தது, அங்கே இங்கே கேள்விப்பட்டது, ஆகாசவாணிச் செய்திகளில் கேட்டது, இரவு ஒன்பது மணி ஆங்கிலச் செய்தியில் காலும் அரையுமாகப் புரிந்துகொண்டது என்று எல்லாம் சேர்ந்து கலந்து கட்டி இருந்ததெல்லாம் இலங்கை பற்றிய பத்ரியின் இந்தப் பதிவுகளைப் படித்தபிறகுதான் ஓரளவுக்குத் தெளிவாகிறது. நன்றி பத்ரி.

Advertisements

Comments

1. Badri - Thursday April 29, 2004

நான் எழுதியிருப்பவை முழு ‘வரலாறு’ அல்ல. அவை சூரியநாராயணன் என்பவர் பேசிய பேச்சிலிருந்து சுருக்கமாக நான் உள்வாங்கி எழுதியது. அதில் பல இடங்களில் சூ.நா. வின் சார்புநிலை தெரியும். என்னுடைய நோக்கம் – அவர் என்ன சொன்னார், அந்தப் பேச்சின்போது என்ன நடந்தது என்பதை எழுதுவதே.

மேலும், IPKF இலங்கை சென்றபோது என்ன் நடந்தது, விடுதலைப்புலிகள் அல்லாத மற்ற இலங்கைப் போராளிகள் நிலை என்னவானது, மற்ற தமிழ்த் தலைவர்களுக்கு என்ன நடந்தது (ஆயுதம் ஏந்தாதவர்கள்), தமிழகத்தில் போராளிகள் என்ன செய்தனர், ராஜீவ் கொலை பற்றிய முழு விவரம், தமிழகக் கட்சிகளின் நிலை மாற்றம், இலங்கைக் கட்சிகளின் மனமாற்றம், இலங்கையின் வெவ்வேறு இனக்கலவரங்கள், அங்கு ஏற்பட்ட சட்ட மாற்றங்கள், நூலக எரிப்பு, ஜெயிலுக்குள் கொலை, எப்படி போராளிகள் உருவானார்கள், 1990இலிருந்து 2000 வரையிலான யுத்தங்கள், பின்னர் தொடங்கிய அமைதிப்பேச்சுவார்த்தை என்று பல விஷயங்கள் உள்ளன.

அவற்றைப் புரிந்து கொள்வது ஒரு பக்கம். அதன்பிறகு மேற்கொண்டு என்ன செய்வது, முக்கியமாக இந்திய அரசின் நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய முக்கிய பிரச்சினை.

2. பரி - Friday April 30, 2004

பத்ரி,

நான் சொல்லிருக்கிற மாதிரி, இலங்கைப் பிரச்சினை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சிறு வயதில் நடந்தவற்றை அசைபோட்டு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறேன்; அவ்வளவே(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பை சினிமாப் பாட்டுக் கேட்க உபயோகித்ததோடு சரி). இனிதான் மேலும் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு இருக்கவே இருக்கிறார் ரமணி 🙂

3. PK Sivakumar - Monday May 3, 2004

Haha. U r going to learn from Ramani about it? God save us.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: