jump to navigation

ஞாபகம் வரலியே ஞாபகம் வரலியே Tuesday April 27, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

நவீன உலகில் வாழும் மனிதனின் அன்றாட வாழ்க்கை, கணினி போல புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. “இந்த வேலையை இந்த நேரத்தில் செய்து முடி” என்ற கட்டளை மூளையில் ஆழப்பதிந்துள்ளது. இது தவிர organized living எனப்படும் ஒழுங்கமைவு(?) வாழ்க்கை முறை, பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் வைத்து, தேவை ஏற்படும்போது எந்தப் பொருள் எங்கு இருக்கும் என்ற தகவலும் மூளையில் பதிந்துவிடுகிறது.

-00-

போன ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் பக்கத்துல இருக்க பலசரக்குக் கடைக்கு(grocery store) காலாற நடந்து போனேன். பக்கத்துல இருக்குன்னா எதோ பத்தடில இருக்குன்னு அர்த்தமில்ல; சுமாரா அரை மைல் தூரத்துல இருக்கு.

லேசா சில்லுன்னு காத்தடிச்சிச்சா, சரி பொடிநடையா நடந்து போய் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வரலாம்னு கெளம்பிட்டேன்.

இந்த ஊர்ல(நாட்டுல) ரோட்டோரமா நடந்தா, அதுவும் தனியா நடந்தா ஒரு மாதிரியா இருக்கும். சர், புர்ருன்னு கார் போய்க்கிட்டு இருக்கும். கார்ல போறவங்கள்லாம், “ஐயோ பாவம்! ஒரு ஏழை கார் இல்லாம நடந்து போறான்”-னு நெனைப்பாங்களோன்னு தோணும்.

சில பேர்வழிகள் நம்ம பக்கத்துல வர்றப்போ, ரோட்டப் பாத்து கார் ஓட்டாம, நடந்து போற நம்மள எதோ மிருகக்காட்சி சாலைல பாத்த ஒரு ஜந்து மாதிரி பாத்துட்டு போவாங்க.

இவனுங்கள நாம எதுக்கு கண்டுக்கணும்-னு செல்பேசியில நண்பனப் புடிச்சி, நாட்டுல நடக்க வேண்டியதப் பத்தி சீரியஸா (வெட்டிக்கதை) பேசிக்கிட்டே நடந்து கடைக்குள்ளாற போயாச்சு. எதெது எங்கெங்க இருக்கும்னுதான் தெரியுமே. ஒரு தள்ளுவண்டியில தேவையானத அள்ளிப் போட்டுக்கிட்டே பேசிக்கிட்டே போனப்போ குறுக்க வந்து இடிக்க வந்த இன்னொரு வண்டிய மயிரிழைல தாண்டி, அவர் சொன்ன “ஸாரி”-க்கு ஒரு சைகை காட்டிட்டு பில் போட வந்தாச்சு.

ஃபோன்ல பேச ஆரம்பிச்சப்போ நாந்தான் அவன் கழுத்தறுத்தேன்னு நெனச்சா போகப்போக எனக்கு ஒரே கழுத்தறுப்பாப் போச்சு. கழட்டி விட இதுதான் சரியான சமயம்.

“சரிடா, நான் பில் போடப் போறேன். அப்புறம் பேசறேன்.” – அப்பாடா கொஞ்சம் நிம்மதி.

பில் போட்டு பிளாஸ்டிக் அட்டையத் தேய்ச்சி ரெண்டு கைலயும் பையத்தூக்கிக்கிட்டு வெளியே வரும்போதுதான் அது நடந்துச்சி.

வலது கைல இருந்த பை, இடது கைக்கு தானா மாறிச்சி – என்னெ ஒரு வார்த்தை கேக்கணுமே? ஊஹூம்!

வலது கை பேண்ட் பாக்கெட்டுக்குள்ள எதையோ தேடுச்சி. வழக்கமா ரெண்டு சாவி இருக்குற பாக்கெட்டுல ஒரு சாவிதானே இருக்கு. அந்த ஒரு சாவியும் வீட்டு சாவி. அப்போ கார் சாவி எங்கெ போச்சு?

மூளைக்குள்ளாற ஒரு அதிர்ச்சி அலை. கால் ரெண்டும் வேகவேகமா வெளியில நடந்து வந்துச்சி. பார்க்கிங் லாட்-ல கார் எங்கெ இருக்குன்னு கண்ணு மும்முரமா தேடிச்சி.

இதெல்லாம் ஒரு 30-45 நொடிக்குள்ள நடந்த சமாச்சாரம்.

அதிர்ச்சி அலைலேர்ந்து மீண்ட மூளை ஒரு வெடிச்சிரிப்பு சிரிச்சதும் எனக்கு செம கோவம். ‘மனுசன் இங்க காரத் தேடிக்கிட்டு இருக்கேன் ஒனெக்கென்ன இளிப்பு வேண்டிக் கெடக்கு’-னு கேட்டா இப்டி பதில் சொல்லுச்சி.

‘டேய் மடையா, நீ வரும்போது நடந்து வந்த. இப்போ காரத் தேடுனா எங்கேர்ந்து கெடைக்கும்?’

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

நடந்து வந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.

Advertisements

Comments

1. karthikeyan - Tuesday April 27, 2004

ஓ!! நீங்களும் நம்ம கேஸ் தானா?? உங்களுக்கு பரவாயில்லை 35 – 45 நொடியில போயிடிச்சு. நான் ஒரு 10 நிமிஷமாவது தேடிட்டு, திரும்ப ஒரு தடவை நிதானமா யோசிச்சா தான் ஹிஹின்னு பல்லை இளிக்கும் இந்த பாழாபோன ஞாபகமறதி.

2. S Krupa Shankar - Tuesday April 27, 2004

ush ush ush.!!!

அரை மைல் தாண்டி இருக்கற கடைக்குப் போனதாலதான் இவ்வளவு ப்ரச்சனையும். 😉

ஏதாவது பக்கத்துலயே இருக்கற கடைக்குப் போய் சட்டுபுட்டுன்னு முடிக்கக்கூடாதா மேட்டரை…மளிகைக்கடைல.

எனக்கு இங்க நேரு கடை, செட்டியார் கடை, ரத்னா ஸ்டோர்ஸ் போதும். ஸ்பென்ஸர்ஸ்-க்கு எல்லாம் போனதெ இல்லை. சுபிக்ஷா, த்ருப்தி எல்லாம் எப்பவாவது மட்டும்.

க்ருபா

3. ரவியா - Wednesday April 28, 2004

பரி, நான் தலைக்கீழ் ! ஒரு தடவை காரில் கடைக்கு போய் விட்டு நடந்து வீடு திரும்பிவிட்டேன்.(சுமையான பொருள்கள் வாங்காததினால்). T.V. பார்த்துக் கொண்டிருக்கும் போது ஞாபகம் வந்து, வீட்டில் ஏதோ சாக்கு சொல்லிவிட்டு (வயிசாயிடுச்சி ..என்னையும் ஒரு நாள் இப்படித்தான் மறந்துடுவ..) ஓடி…:D

4. பரி - Wednesday April 28, 2004

ரவியா :-))

5. வெங்கட் - Wednesday April 28, 2004

பரி, வழக்கமா பர்ஸை வலது பிருஷ்ட பாக்கெட்ல வைப்பேன். ஒன்னு ரெண்டு சமயம் அவசரமா அதை சட்டை அல்லது கோட் பாக்கெட்ல போட்டுட்ட அவ்வளவுதான். அதைத் திரும்ப எடுத்து அங்கென வைக்கிறத்துக்குள்ள பிருஷ்ட சதையையே யாரோ அரிஞ்சு எடுத்துக்கினு போனாமாரி ஒரு பதைபதைப்பு. செல சமயம் சப்வே ட்ரெயினில் இந்த இல்லாமைய நெனச்சுத் துள்ளி எழுந்து பின்னாடி தடவியிருக்கேன் 🙂

6. காசி - Wednesday April 28, 2004

ரவியா, இடையில ஒண்ணு சொன்னீங்களே அது சூப்பர்.

பரி, இது எல்லாருக்கும் இருக்கும்(தன்னைப் போல் பிறரை நினை:))

இதுக்காகவே அலுவலகத்தில் ஒரே இடத்தில்தான் கார் நிறுத்துவேன். மொத்தமும் காலியாக இருந்தாலும்.

வெங்கட் சொன்னது அப்படியே வாரம் ஒருமுறையாவது நடக்கும், துள்ளும் துள்ளில் உள்ளுக்குள் வேர்த்துவிடும்!

7. Dubukku - Thursday April 29, 2004

அப்பாடா…எல்லோருக்கும் இருக்கா இந்த பிரச்சனை…சந்தோஷம்!


Sorry comments are closed for this entry

%d bloggers like this: