jump to navigation

நூல் அறிமுகம் – மொழி நடைக் கையேடு Wednesday April 14, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இப்படி ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு(பாதி தான்) தமிழில் இப்படி ஒரு புத்தகம் இருக்கிறதா என்று தேடி(ஊரெல்லாம் ஓடி இல்லை, உக்காந்த எடத்துலயேதான்), கனடா பசுபதி (ராகாகி) மூலம் தெரிந்து கொண்டு, வாங்கி (வழக்கம்போல) பாதி படித்திருக்கும் நூல் அறிமுகம் ஒன்று.

புத்தகப் பெயர்: தமிழ் நடைக் கையேடு (முதல் பதிப்பு, 2001)

ஆக்கம்:

1. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்

2. மொழி, சென்னை

3. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

பதிப்பாளர்: Mozhi: A Trust for Resource Development in Language and

Culture, 10, 24th East St, Thiruvanmiyur, Chennai – 41 (தமிழில் இல்லை)

விலை:ரூ.125

புத்தகத்தின் முன்னுரையை மட்டும் இங்கே தர உத்தேசம்.

முன்னுரைஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே.

மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால் எழுதுவது சீராகவும் கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும். எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தமிழ் நடைக் கையேடு தொகுத்துத் தருகிறது.

நூலின் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் ‘நடை’ என்ற சொல் ஒரு புதிய பொருளைப் பெருகிறது. ‘நடை’ என்பதற்கு ‘எழுத்தில் ஒருவர் தனக்கென்று ஏற்படுத்திக் கொண்ட பாணி’ என்பது எல்லோரும் அறிந்த பொருள்; ‘ஒழுங்கான அமைப்பில்

எழுதுவதற்கான நெறிமுறை’ என்பது மேலே கூறிய விளக்கத்தால் கிடைக்கும் புதிய பொருள். ‘ஒருவருடைய நடைப் பாங்கு’ என்னும் தனிநபர் சார்ந்த பொருளுடன் ‘எழுதுவதில் மேற்கொள்ளும் ஒழுங்கு’ என்னும் அமைப்பு சார்ந்த

பொதுவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது, ‘நடை’.

உரைநடையின் நெறிமுறைகள்

————————–

இந்தக் கையேட்டில் ஆறு தலைப்புகள் பின்வரும் வரிசையில் உள்ளன:

1. நிறுத்தக்குறிகள்

2. சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்

3. சந்தி

4. சொல் தேர்வும் பொருள் தெளிவும்

5. எழுத்துப்பெயர்ப்பு

6. அடிக்குறிப்பும் துணைநூற்பட்டியலும்

நிறுத்தக்குறிகள், சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல், சந்தி ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; கருத்துத் தெளிவிற்குத் துணைபுரிபவை. ஆனால்,

மரபு இலக்கணங்களில் இடம்பெற்றிருப்பது சந்தி மட்டுமே. ஏனென்றால், தமிழில் சொல் உருவாக்கமும் சொற்களுடன் விகுதிகள் இணைவதும் சந்தி விதிகளை (பெரும்பாலும் அகச்சந்தியை) சார்ந்திருக்கின்றன.

நான்காவதாக இடம்பெற்றிருக்கும் சொல் ‘தேர்வும் பொருள் தெளிவும்’ என்பது நிறுத்தக்குறிகளாலும் சொற்களின் இடப்பொருத்தத்தாலும் இலக்கண நுட்பங்களாலும் திருத்தம் பெறும். ஐந்தாவதாக இடம்பெற்றிருக்கும் ‘எழுத்துப்பெயர்ப்பு’, பிற மொழி, பண்பாடு முதலியவற்றோடு ஏற்பட்டுள்ள தொடர்பால் தேவையாகிறது. மேலும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இதன் தேவை மிகுதி. ஒரு நூலோ ஆராய்ச்சிக்கட்டுரையோ எழுதுபவர்களுக்கு அவர்கள் கையாளும் தாரங்களை முறைப்படுத்தித் தர ஆறாவதாக இடம்பெற்றிருக்கும் ‘அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்’ உதவுகிறது. கடைசியாகக் கூறிய இரண்டும் மொழியில் மொழியி

ல் சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே உரியவை.

சில தொடர்புகள்

—————

நிறுத்தக்குறிகள், சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல், சந்தி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஓரிரு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கலாம்.

பின்வரும் எடுத்துக்காட்டு கால்புள்ளியும் ஒற்று மிகுதலும் ஒன்று வரும் இடத்தில் மற்றொன்று வராமல் இருப்பதைக் காட்டுகிறது.

வைதீக மரபுக்கு மாற்றாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் …

வைதீக மரபுக்கு மாற்றாகப் பத்தொன்பதான் நூற்றாண்டின் …

நிறுத்தக்குறிகளில் ஒன்றான கால்புள்ளியைப் பயன்படுத்தும்போது ஒற்று இல்லாமலும் சந்தியின் காரணமாக ஒற்று தரும்போது கால்புள்ளி இடாமலும் இன்றைய வழக்கு என்பதைக்

காண முடிகிறது.

பின்வரும் எடுத்துக்காட்டு சொற்களை இடம்விட்டு எழுதும்போது உடம்படுமெய்யை விட்டுவிடும் நிலையையும் உடம்படுமெய்யைப் பயன்படுத்தும்போது சொற்களின் இடையே இடம்விடாத நிலையையும் காட்டுகிறது

இறுதி ஆண்டு

இறுதியாண்டு

சொற்களை இடம்விட்டு (யகர உடம்படுமெய் தராமல்) எழுதுவது இன்று இயல்பாக இருக்கிறது.

(தொடரும்)

Advertisements

Comments

1. PK Sivakumar - Wednesday April 14, 2004

Please continue. Thanks.

2. செல்வராஜ் - Wednesday April 14, 2004

உருப்படியான விஷயம் சொல்றீங்க. தொடருங்க. பயனுள்ளதா இருக்கும்.

3. -/இரமணிதரன், க. - Thursday April 15, 2004

ஆ why விட்டுட்டீங்க 🙂

4. J. Rajni Ramki - Thursday April 15, 2004

எங்கெங்கே ச், ப், க் போடணுங்கிறது பத்தி சொல்லியிருக்காங்களா? இருந்தா சொல்லுங்க, உடனே வாங்கிடறேன்!

5. PK Sivakumar - Thursday April 15, 2004

Hi Rajini Ramki, there is a book written by Prof. J.SriChandran titled “Nalla Thamizhil pizhai inri ezuthuvathu epadi” or so that discusses otru issues very nicely. You may please look into it if you want. I have the book and can email the info abt publishers if u want. I wrote abt it in Maraththadi too once. Please send me an email if u need. Thanks

6. பரி - Thursday April 15, 2004

ரமணி,

கொட்டா(ஆ)வி விட்டேங்றீங்களா இல்லேங்றீங்களா? 🙂

ராம்கி,

சந்தியில போறது..சே.. சந்தி பற்றி ஒரு தலைப்பு இருக்கு (3-வது தலைப்பு பாருங்க). அது சரி, அது இல்லேன்னா வாங்க மாட்டீங்களா? 🙂

சிவா,

அந்தப் புத்தகத்தப் பத்தி ‘பேசாப்பொருள்’-ல பேசுங்களேன்?

7. raviaa - Friday April 16, 2004

//Nalla Thamizhil pizhai inri ezuthuvathu epadi”// வாங்கினேன் very good


Sorry comments are closed for this entry

%d bloggers like this: