jump to navigation

சிலம்பமும் குஸ்தியும் Friday March 12, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

மரத்தடியில் ஆசாத் அவர்கள் சென்னையில் பாரம்பரியக் குத்துச் சண்டைகள் பற்றி எழுதி நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டார். அதன் விளைவே இந்த ருத்ர தாண்டவம் 🙂எங்கள் ஊர்ப்பக்கம் பாரம்பரியச் சண்டைக் கலைகளில் பிரபலமானது என்று சொல்ல முடியாவிட்டாலும் பெயரளவிலாவது அறிந்தது என்றால் சிலம்பமும் குஸ்தியும்தான்.

இந்தக் கலைகளை அறிந்தவர்கள் வெகு சிலரே. இவற்றைக் கற்றுக்கொள்ள முறையான பயிற்சிப்பள்ளிகள் கிடையாது. இந்தக் கலைகளையறிந்த யாரேனும் ஒருவரிடம் ஆர்வமுள்ள சிலர் சேர்ந்து பயில்வார்கள். இதில் இளைஞர், பெரியவர் என்ற பாகுபாடு கிடையாது, எல்லோரும் கற்றுக்கொள்வர். பிரச்சினையே இந்த ‘ஆர்வம்’ என்ற வார்த்தையில் தான் அடங்கியிருக்கிறது.

அப்படியே ஆர்வம் மேலிட்டு சென்றாலும் வீட்டிலும் தெருவிலும் விழும் திட்டுகள் அதைக் குலைத்துவிடும். ‘பெரிய அடியாளா வர்ற மாதிரில்ல கம்பு சுத்துது, குஸ்தி போடுது புள்ள’ என்று ‘ஊக்குவிப்புகள்’ கிடைக்கும். எனவே இதையெல்லாம் ‘திருட்டுத்தனமாக’க் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

திருட்டுத்தனம் என்றாலே இருட்டு என்று கூடவே வந்துவிடுவதால், பெரும்பாலும் பௌர்ணமி, அதற்கு முன்னும் பின்னும் இரண்டொரு நாட்கள், இரவில், களத்து மேட்டில்தான் தான் இதைச் செய்ய முடியும். அல்லது இருட்டுவதற்கு முன்பு – இதற்கான சாத்தியம் குறைவு. காரணம், பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு உடனே கம்பு சுத்த திராணியிருக்காது, இருந்தாலும் மனசு வராது.

மாசத்துக்கு ஓரிடண்டு முறை தான் வகுப்புகள் என்றால், முதல் வகுப்பில் கற்றுக்கொண்டது அடுத்த வகுப்பில் ஞாபகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுபற்றிச் சொல்லத் தேவையில்லை. இடையில் வாத்தியாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலோ வேறு பிரச்சினைகள் வந்தாலோ ஒரு மாதம் என்பது இரண்டு மூன்று மாதங்கள் என ஆகும்.

இப்படித்தான் அழிந்து போகின்றன(போயின?) இந்தக் கலைகள்.

கராத்தே, ஜூடோ என்று ‘ஆ’ ‘ஊ’ என்று சத்தம் போட்டுக் கையைக் காலை உதைத்து, பல்டி அடிக்கும் கலைகள் பிரபலமாகக் காரணம், அவற்றைக் கற்றுக்கொடுக்க வணிக ரீதியான பள்ளிகள் இருக்கின்றன. கற்றுக்கொடுப்பவர் ஒன்றும் கருப்பு பெல்ட் ஆசாமியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. திருவிழாக்கடையில் ஒரு பழுப்பு(brown) பெல்ட் வாங்கி மாட்டிக் கொண்டால் போதும். கத்தியால் வெட்டுவது போல் வெறுங்கையால் ஒரு செங்கல்லை உடைத்தால் பிரமாதமான மாஸ்டர்.

நம்மிடையே இருக்கும், நமக்கேச் சொந்தமானவற்றைப் புறந்தள்ளும், ஏளனமாகப் பார்க்கும், என்ற நமது தமிழ் (இந்திய?) பாரம்பரியக் குணம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டன.

‘என் பையன் கராத்தே கற்றுக் கொள்கிறான்’ என்று ‘பெருமையுடன்’ சொல்லலாம். ஆனால், சிலம்பம் கற்றுக் கொண்டால், ‘அடியாளாக’ வரப்பார்க்கிறான் என்றுதான் சொல்ல முடியும். அதில் பெருமை இல்லை.

சிலம்பமோ குஸ்தியோ கற்றுக்கொடுப்பவருக்கு ‘சம்பளம்’ என்று ஒன்று யாரும் தருவதில்லை. அவரவர் கையில் கிடைத்ததைத் தருவார்கள் அவ்வளவே. அதற்காக அவர் கற்றுக்கொடுப்பதில் குறையேதும் இருக்காது. சொன்னதைச் சரியாகச் செய்யவில்லையென்றால் பயங்கரமாக திட்டு விழும் (ரோஷம் வரவேண்டும்).

நான் பார்த்த வரையில் அரங்கேற்றம் என்று ஒன்று கிடையாது (கற்றுக்கொள்வது வெளியில் தெரிந்தால்தான் பிரச்சினையாச்சே!). எல்லாப் பாடங்களையும் கற்றுக் கொடுத்தபின், வாத்தியாருடன் சண்டை போடுவதே அரங்கேற்றம்.

இதுவரை சொன்னதெல்லாம் சிலம்பம் பற்றியது. குஸ்தி பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.

நான் பார்த்த ஒரே சிலம்ப, குஸ்திச் சண்டைகள் எங்கள் ஊரில் இல்லை! என் சித்தி ஊரில் ஏதோ ஒரு கோயில் திருவிழாவில். அது மனக்கண்ணில் இப்போது மங்கலாகத் தெரிகிறது.

குஸ்தியில் எனக்குப்பிடித்ததே, தாவிக்குதித்துத் தொடையைத் தட்டிப் பாய்வது தான். தொடை தட்டல் இல்லையேல் குஸ்தி இல்லை 🙂

சினிமாக்களில் குஸ்திச் சண்டை பார்த்த ஞாபகம் இல்லை. சக்கரவர்த்தி திருமகள் படத்தில் கட்டிப்புரள்வார்கள் (அதாங்க, எம்ஜியார் கண்ணுல மண்ண அள்ளிப் போட்டுடுவாரே), அது குஸ்தி வகையா என்று தெரியவில்லை.

‘எங்க சின்ன ராசா’ படத்தில்(சரிதானா?) நம்பியார் குஸ்தி மாஸ்டர் பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், அதிலும் குஸ்திச் சண்டை பார்த்த ஞாபகம் இல்லை.

சினிமாக்களில் சிலம்பச் சண்டை பல படங்களில் இடம்பெற்றிருக்கிறது. பாக்யராஜுக்கு இது ரொம்பப் பிடிக்கும் போல, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சொருகி விடுவார் 🙂

‘தேவர் மகன்’ படம் சட்டென்று ஞாபகம் வருகிறது. பல விஜயகாந்த் படங்களில் பார்த்த ஞாபகம் (பூந்தோட்ட காவல்காரன்?). எண்பதுகளில் வந்த நிறைய படங்களில் சிலம்பச்சண்டை இருக்கும் என்று நினைக்கிறேன்.

சிலம்பம் தவிர மடு(மடூ?) என்று ஒன்று உண்டு. இதைப்பற்றிக் கேள்விப்பட்டதோடு சரி. மற்றபடி ஏதோவொரு பக்யராஜ் படத்தில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.

ஒரு திருட்டுத்தனமாக நாள் சிலம்பம் கற்றுக்கொள்வதைப் பார்க்கப் போனதில், கையில் கம்பெடுக்கக் கை துறு துறுவென்று இருந்தது, முடியவில்லை.

கம்பைக் கையிலெடுத்து சும்மா இஷ்டத்துக்கு வீசிவிட முடியாது. முதலில் உங்கள் உயரத்திற்கேற்ப கம்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கம்பு, நெற்றி உயரம் இருக்க வேண்டும் (நெற்றி வரையா அல்லது தாடை வரையா என்று மறந்துவிட்டது).

ஒரு கையால் சுற்ற ஒரு மாதிரிப் பிடிக்க வேண்டும். இரண்டு கைகளாலும் சுற்ற இன்னொரு மாதிரி பிடிக்க வேண்டும். எப்படிச்சுற்றினாலும், சுற்றும்போது கால் இடம் மாற வேண்டும். இல்லையென்றால் (பின்னங்)கணுக்கால் பதம் பார்க்கப்படும்!இதைப்பழகவே இரண்டு மூன்று வகுப்புகள் ஆகும்.

கணுக்காலில் பல அடிகள் வாங்கி, ஒற்றைக்கையால் ஒரு சுற்றும் இரண்டு கைகளல் ஒரு சுற்றும் மட்டுமே கற்றுக்கொண்டேன், அதுவும் மெதுவாகச் சுற்றி. அதற்கு மேல் போக தைரியம் இல்லை 🙂

திருட்டுத்தனம் செய்து இந்தக் கலைகளைக் கொள்ளாமல் ‘நல்ல’ பையனாகப் படித்து முன்னேறி(?) இப்போது பெருமூச்சு விடுகிறேன். என்ன செய்ய, இதுதான் வாழ்க்கை போங்க.

Advertisements

Comments

1. Tamil Aappu - Sunday March 14, 2004

Please visit the new Tamil Blog titled ‘Aappu vaikkap pooRoom’ at

http://aappu.blogdrive.com/

Kidly provide a link to this. Thanks.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: