jump to navigation

Big Mac, Double Cheese, Super Size fries and “DIET” Coke please Thursday March 11, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

மதிய உணவு எப்போதும் வெளியில்தான் சாப்பிடுவது வழக்கம் (மொத நாள் ராத்திரி (சமைச்சி)தின்னதுல மிச்சமிருக்கிறத மறுநாளும் திங்க மனசில்லீங்க 🙂 ). இலை தழை, சைனாக்காரன் சோறு (ஃபிரைடு ரைஸ் இல்லை; வெறும் சோறு!), Subway, Quizons, எப்போதாவது பீட்சா (இதை விவேக் பாணியில் சொன்னால் ஓடிப்போய்விடுவீர்கள் 🙂 பார்க்க படம்:எ20உ18) என்று ஒரு ‘சிறிய’ வட்டத்திற்குள்தான் சுற்ற வேண்டியுள்ளது.

போன வாரம் Quiznos-ல் ஒரு சின்ன சப் (small sub, size:6“) ஆர்டர் செய்துவிட்டு நகரும்போது பின்னாலிருந்த ஒரு மாணவன் (12/13 வயது இருக்கலாம்), நான் ஆர்டர் செய்ததைவிட நான்கு மடங்கு பெரியதை ஆர்டர் செய்தான். அவனுடன் மூன்று நண்பர்களும் இருந்தார்கள். ஆனால், அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சரி, ஒன்று வாங்கி எல்லோரும் பிரித்து சாப்பிடப்போகிறார்கள் என்று நினைத்தேன்.

மாணவர்கள் இல்லையா? செலவு செய்ய கையில் அதிகம் பணம் இருக்காது, தனித்தனியாக வாங்குவதைக்காட்டிலும் இப்படிச் சேர்ந்து வாங்கினால் செலவு குறையும், பசங்க பயங்கரமாக யோசித்துச் செய்கிறார்கள் என்று அவர்களை மனசுக்குள் பாராட்டினேன்.

சப் ரெடியாகிவிட்டது. எடுத்துக் கொண்டு போய் சாப்பிட ஆரம்பித்தான். நானும், அவனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே. நான் மட்டுமில்லை அவன் நண்பர்களும் அவனை வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்; சாப்பிடவில்லல. சரி, அவன் பாகத்தை முடித்ததும் மற்றவர்கள் சாப்பிடுவார்கள் என்று நினைத்தேன் (சப், நான்கு துண்டுகளாக்கப்பட்டிருந்தது, வழக்கம் போல). ஒன்று முடிந்தது.

வாயை லேசாகத் துடைத்துவிட்டு, அடுத்த துண்டைக் கையிலெடுத்தான். இப்போது என் எண்ணம் வேறு மாதிரியாயிற்று. அதை இரண்டு பேர்தான் சாப்பிடப்போகிறார்கள். இப்போது அவன் கூட இருப்பவர்கள் யாரும் சாப்பிடப்போவதில்லை. இன்னொருவன் வந்தபிறகு (அவசர வேலைக்காக போயிருக்கலாமில்லையா?), மீதியை அவன் சாப்பிடுவானாயிருக்கும் என்று நினைத்தேன்.

இரண்டாவது துண்டும் முடிந்தது. ஒரு சுற்று சுற்றிப்பார்த்தேன். யாரும் இவர்களைத் தேடி வரவில்லை. பையன் வெற்றிகரமாக மூன்றாவது துண்டை கையிலெடுத்தான்.

இனிமேலும் வேறுமாதிரியாக நினைக்க முடியுமா என்னால்?

ஆஃபீஸில் சாப்பாட்டுப் பிரியர் ஒருவர் இருக்கிறார் (அமெரிக்கர்). எதன் மீதாவது ”சாப்பாடு“ என்று எழுதி ஒட்டிவிட்டால், அது எதுவாக இருந்தாலும் தின்றுவிடும் ரகம்.

ஒரு நாள் டீம் லஞ்ச்சில் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய 5 வயது மகன், வீட்டில் அவர் சாப்பிடும் அளவுக்கு சாப்பிடுகிறான் என்றார். ‘அவன் வளர, வளர தீணி போட்டு மாளாது போலிருக்கிறது. என் சம்பளத்தில் பாதியை மளிகை சாமான்(grocery) வாங்குதற்கு ஒதுக்க வேண்டும் போலிருக்கிறது’ என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

அளவுக்கதிகமாக திண்பதில் சிறுவர்களுக்கு பெரியவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை இங்கே. தின்றுவிட்டு சும்மா இருக்க மாட்டார்கள். ‘இந்தக் கடையில் தொடர்ந்து நான் தின்றதால் கொழுத்துவிட்டேன். எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும்’ என்று வழக்குத் தொடுப்பார்கள். இந்த மாதிரி ஆட்களை வைத்தே பிழைப்பை நடத்த வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள்.

இந்த மாதிரி வழக்குகளை எல்லாம் ”அமெரிக்காவில் மட்டும்“ (Only in America) என்ற தலைப்பிட்ட ‘சாகா வரம்’ பெற்ற பல மடல்களில் பார்த்திருக்கலாம்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து அமெரிக்கவின் ‘ஹவுஸ்’ அவையில் (இன்னொரு அவை செனட், பெரும்பாலானோர் அறிந்தது.), ”Personal Responsibility in Food Consumption Act” என்ற சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கூறிய ‘கொழுப்பெடுத்த’ வழக்குகளைத் தொடுக்க முடியாது.

என் கேள்வியெல்லாம், இதையெல்லாம் சட்டம் போட்டுதான் தடுக்க வேண்டுமா? எதைத் திண்ணலாம் எவ்வளவு திண்ணலாம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மூடர்களாகிவிட்டார்களா மக்கள்?

குறைந்த விலையில் நிரம்பக் கிடைக்கிறதே (வாழ்க Sams Club, Costco இத்யாதி கடைகள்) என்று வாங்கி வந்து அதெல்லாம் வீணாகப் போய்விடக்கூடாதே என்று தின்று தீர்ப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமான செயல்? (உணவை பெருமளவு வீணடிப்பது பற்றி வேறொரு நாள் சொல்ல வேண்டும்)

நல்ல நாடு, நல்ல மக்கள், (மக்களுக்கேற்ற) நல்ல அரசாங்கம் 🙂

கொசுறு: இந்தச் சட்டத்தைக் கண்டிப்பாக விவாதித்து நிறைவேற்ற வேண்டுமா என்று இரண்டு(குடியரசு, ஜனநாயக) கட்சிகளும் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொள்வதாக காலையில் ரேடியோவில் சொன்னார்கள்.

Advertisements

Comments

1. காசி - Friday March 12, 2004

ஒரு டபுள் ச்சீஸ் பர்கர், ஒரு ‘டயட்’ கோக் குடிக்கற ஆளுகளைச் சொல்லலியே 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: