jump to navigation

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு Friday January 16, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

உலகில் எல்லாமே ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டே இருக்கின்றன. கண்ணன் திருடிய வெண்ணைக்கும் பீட்சாவில் கொட்டிக்கிடக்கும் பாலாடைக் கட்டிக்கும் (சீஸ்) சம்பந்தமிருக்கு. சாக்கடைக்கும் சந்தனத்துக்கும் சம்பந்தமிருக்கு. ஒத்த குணமுடைய பொருட்களுக்கிடையே சம்பந்தமிருக்கலாம். சம்பந்தமே இல்லாமத குணமுடைய பொருட்களுக்கிடையேவோ மனிதர்களுக்கிடையேவோ எப்படி சம்பந்தமிருக்க முடியும்.?

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டே……

சே! எனக்கு என்னாச்சு? பித்து பிடிச்சா மாதிரி ஒளறிகிட்டுருக்கேன்? நான் சொல்றது எனக்கே புரியல, கேக்கற உங்களுக்கு எதாவது புரிஞ்சிச்சா? புரிஞ்சுதுன்னா, நான் சொல்லி எனக்கேப் புரியாத ஒண்ணு உங்களுக்குப் புரிஞ்சிதுன்னா அது எப்படி உண்மையான புரிதலாகும்?

சரிதான், எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருச்சி. சம்பந்தா சம்பந்தமில்லாம எதோ பேசிகிட்டு இருக்கேன். நேத்து இப்டித்தான் பாருங்க இணைய நண்பர் ஒருத்தர் மின்மடல் அனுப்பிருந்தார். ஏதோ படிச்சோமா பதில் போட்டோமா இல்ல அப்புறமா பாத்துக்கலாம்னு ஓரமா தூக்கிப் போட்டோமான்னு இருக்கலாம்ல? அது எப்படி முடியும்? அவரோட மின் மடல் முகவரியக் கூடப் பாக்காம எப்படி இருக்க முடியும்? அதுவும் இப்போதான் மொத தடவையா எனக்கு கடுதாசி போடறார், பாக்காம இருக்க முடியுமா?

என்னோட மூளைக்கு நான் சிபிஐ-லயோ எஃப் பி ஐ-லயோ சேர்ந்திருக்கணும். எதையும் தோண்டித் துறுவுற மூளை. அவரோட மின்மடல் முகவரியிலேர்ந்து, அமெரிக்காவுல ஒரு பல்கலைக் கழகத்துல படிக்கவோ பாடம் நடத்தவோ செய்கிறார் என்று படித்த படித்த அறிவு சொல்ல மூளையின் ஒரு செல் (Cell) ஆமாஞ்சாமி போட்டது. பக்கத்து செல் சும்மா இருக்குமா? அது உடனே, அட, இது எங்கியோ கேள்விப் பட்ட மாதிரி இருக்கே! கொஞ்சம் பொறுன்னு சொல்லிட்டு, இந்தப் பல்கலைக் கழகத்துல படிச்ச ஒருத்தர கிட்டத்தட்ட மூனு வருஷத்துக்கு முன்னாடி நண்பனுடைய நண்பனாக ஒரே ஒரு தரம் பாத்திருக்கேன்னு சொல்லிச்சி, ஆனா அதுக்கு அவரோட முகம் ஞாபகம் இல்ல.

உருவங்கள ஞாபகம் வச்சிக்கிறதுல கில்லாடியான இன்னொரு செல்கிட்ட ‘ஒனக்குத் தெரிஞ்சா சொல்லேன்?’-ன்னது. இந்த செல் கொஞ்சம் கர்வம் புடிச்சது. தனக்கு எல்லாம் தெரியும்கிறத காட்டிக்க, அடுத்தவங்க அறிவ சோதிக்க கொஞ்சம் கொஞ்சமா எடுத்து வுடும். சில சமயங்கள்ல பெரிய மனசு பண்ணி சட்டுன்னு குடுத்துடும். உருவம் எப்போ பதியப்பட்டதுங்கிறதப் பொறுத்தது இது. பதிஞ்சு ரொம்ப நாள் ஆச்சுன்னா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கும்.

ஒரு வழியா கலங்கலா ஒரு மூஞ்சி தெரிஞ்சிச்சி. இது எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருந்த சின்சியர் சிகாமனி செல் ‘வெட்டிப் பசங்களா, உருப்படியா எதாவது பண்ணுங்க. இப்போ அந்த ஒரே ஒரு சந்திப்பு ஆசாமிய நெனச்சி உருப்படியா என்ன நடக்கப் போவுது?’-ன்னு ஒரு அதட்டல். எல்லாம் கப்சிப்.

இன்னைக்கு மத்தியானம் சாப்ட போனப்போ ஒரு மூஞ்சி -மூனு வருஷத்துக்கு முன்னாடி பாத்த மூஞ்சி- நேத்து கலங்கலா தெரிஞ்ச மூஞ்சி ஒருத்தரோட பேசிக்கிட்டிருந்துச்சி. நேத்து கப்சிப் ஆன செல்லுங்க எங்க வேலை வீண் போகலன்னு சின்சியர் செல்கிட்ட சொல்லிச்சிங்க.

சின்சியர் செல்லுக்கு ஒரே ஆச்சரியம்! எல்லாமே எப்டி ஒண்ணோட ஒண்ணு சம்பந்தப் பட்டிருக்குன்னு, ‘ஆ’ன்னு வாயப் பொளந்துகிட்டே இருந்திச்சா, பசியில சாப்பாடு உள்ளெ போய்கிட்டே இருந்திச்சி.

Advertisements
%d bloggers like this: