jump to navigation

வீட்டிலிருந்தே பணம் ஈட்டுவதிலிருந்து தப்பிப்பது எப்படி? Tuesday December 23, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

‘உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு,’ ‘இதுக்கு முன்னாடி நாம சந்திச்சிருக்கோமா?’

என்னது இது, ஏதோ இளவட்ட பையன் ஒரு பொண்ண பாத்து சொல்ற வழக்கமான வசனம் மாதிரி இருக்கு? தப்பு. ரொம்பத்தப்பு. இப்போல்லாம் நேரா ‘ஐ லவ் யூ’ தான்.

சரி, அப்போ இது யார் யார்கிட்ட சொன்னது?

அமெரிக்காவுக்கு வேலைக்கு வந்த புதிதில் அலுவலகத்தில் யாரையுமேத் தெரியாது, ஓரிருவரைத் தவிர. வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனுபவம் புதிதில்லை என்றாலும் இடம், மக்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் எல்லாம் புதிதுதானே! அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும்போது எதிரே வருபவர்களை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் ஒரு சினேகமான புன்னகை, அல்லது ஒரு ‘ஹாய்’, தெரிந்தவராக இருந்தால் (சில சமயம் இல்லாவிட்டாலும் கூட) ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்ற கேள்வி எல்லாம் மிகச்சாதாரணம். இதையெல்லாம் கவனித்து நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். சொல்ல மறந்துட்டேனே! இதெல்லாம் உள்ளூர்க்காரர்கள் செய்வது.

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்தில்தான் இந்தியர்கள் இல்லை? இங்கேயும் இருக்கிறார்கள். இவர்கள் யாரேனும் கண்ணில் பட்டால் வழக்கம் போல ஹாய் ஆரம்பித்தேன். பதிலுக்கு ஒரு ஹாய், ஹலோ? ஊஹூம். சில பேர் செய்வது இன்னும் விசித்திரமாக இருக்கும். அர்ஜுனனுக்கு இலக்கு மட்டுமே தெரிந்தமாதிரி இவர்கள் பார்வை நடக்கும் பாதையில் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். நேர் எதிரே யாரேனும் வந்தால் இவர்கள் பாதை சற்றே விலகும், ஆனால் பார்வை மாறாது. இன்னும் சில பேர் செய்வது அதைவிட விசித்திரம். எதிரே வருவது ஒரு இந்தியர் அவரை இவருக்குத் தெரியாது என்றால் அவரைக் கடக்கும் வரை பார்வை மோட்டுவளையைப் பார்க்கும். இதையெல்லாம் மீறி தப்பித்தவறி நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் இருவர் முகத்திலும் ஒரு சலனமும் இருக்காது.

அடிக்கடிப் பார்க்க நேரும் அலுவலகத்திற்குள்ளேயே இப்படி என்றால் பொது இடங்களில் கேட்கவா வேண்டும்?

மருந்து சாப்பிட்டு வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் கொஞ்சநேரம் வெளியே சென்று வேடிக்கைப் பார்த்து விட்டு வரலாமே என்று கிளம்பினேன். குளிர் காலத்தில் எங்கே வெளியில் நின்று வேடிக்கைப் பார்ப்பது? கிறிஸ்துமஸ் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும் பல்லங்காடிதான் (mall) சிறந்த இடம். அதென்னவோ இந்தமாதிரி வேடிக்கைப் பார்க்கக் கிளம்பினால் கால்கள் தானாக எலக்ட்ரானிக்ஸ் கடைக்குள் நுழைந்துவிடும்.
அங்கே சலித்துப் போய் வெளியே வந்தால் பக்கத்திலிருக்கும் புத்தகக்கடை. இந்த நாட்டில் புத்தகக் கடையை சிலர், குறிப்பாக மாணவர்கள் ஒரு நூலகமாகவே பயன்படுத்துவர். படிக்க வசதியாக சோஃபா, குடிக்க காஃபிக் கடை என்று இருக்கும். ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்காரலாம் என்று துழாவிக் கொண்டிருக்கையில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்தக்குரல் கேட்ட கேள்விதான் மேலே உள்ளது.

திரும்பிப்பார்த்தால் வட இந்தியச் சாயலில் என் வயதொத்த ஒருவர். சத்தியமாக இதுவரை நான் அவரைப் பார்த்தது கிடையாது. என்னடா இது நேருக்கு நேர் பார்த்தாலே முறைத்துக் கொண்டு போகும் இந்தியர்கள் மத்தியில் தேடி வந்து, அதுவும் ஒரு பொது இடத்தில் அறிமுகமாக ஆசைப்படுகிறாரே, பாராட்ட வேண்டியதுதான் என்று சத்தியமாக நினைக்கவில்லை, காரணம் அந்தக் கேள்வி/வசனம் ரொம்பப் பரிச்சயமானது.

நாட்டில் இப்படி பல பேர் திரிகிறார்கள். முதலில் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். உங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வார்கள், அதாவது நீங்கள் தேமே என்று பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால். ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டால், ஐடி கன்சல்டிங், அல்லது சொந்த வியாபாரம் என்பார்கள். வீட்டிலிருந்தே கோடி கோடியாக சம்பாதிக்க ஒரு எளிய வழி இருக்கிறது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன், நீங்களும் செய்யலாம் என்பார்கள். ‘உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்’ விவரமாக சொல்கிறேன், வீட்டில் வந்து செயல் விளக்கப் படமும் காண்பிக்கிறேன் என்பார்கள். இந்த மாதிரி ஆசாமிகளிடம் தப்பித்தவறி கூட மாட்டிக் கொள்ளக் கூடாது. நானும் அப்படித்தான் செய்தேன். நான் தேடுகிற புத்தகம் கிடைக்கவில்லை, கடை ஊழியரைப் போய் கேட்டுவிட்டு வந்து உங்களைச் சந்திக்கிறேன் என்றுவிட்டு காணாமல் போய்விட்டேன்.

Advertisements
%d bloggers like this: