jump to navigation

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் Wednesday December 17, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

மனிதனின் இறக்கைக்கு இன்றோடு நூறு வயது. மனிதனுக்கு இறக்கையா? ஆமாம், இது என்ன மாந்திரீக யதார்த்தக் (அதாங்க, மேஜிக்கல் ரியலிஸம்) கதை இல்லை; சிறகு முளைத்த வானத்து தேவதை பற்றியதும் இல்லை.

இயற்கையின் படைப்பில் ஏராளமானப் புதிர்கள். மற்ற ஜீவராசிகள் எல்லாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல நடந்தோ, தவழ்ந்தோ, தத்தியோ தாவியோ, ஊர்ந்தோ செல்கையில், பறவைகள் மட்டும் எப்படிப் பறக்கின்றன என்பது ஒரு காலத்தில் புதிர். தானும் ஏன் பறக்கூடாது என்ற ஆசை மனிதனுக்கு வந்தது. கைகளில் இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறக்க முயன்றான், முடியவில்லை; பறப்பதின் சூட்சமம் பிடிபடவில்லை, ஆனால் விடுவதாய் இல்லை. முயன்றான், முட்டினான், மோதினான், அறிவியலின் உதவியை நாடினான். சூட்சமம் பிடிபட ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினான். புதிய கண்டுபிடிப்புகளுக்கே உரித்தான தோல்விகள் பலவற்றைச் சந்தித்த பிறகு ஒரு நாள் அது நடந்தது.

தேதி: டிசம்பர் 17, 1903
இடம்: கிட்டி ஹாக் (Kitty Hawk), வடக்கு கரோலினா, அமெரிக்கா

ரைட் சகோதரர்கள் என்றறியப்பட்ட ஆர்வில் ரைட் (Orville Wright), வில்பர் ரைட் (Wilbur Wright) என்ற இரண்டு சகோதரர்கள் தாங்கள் முட்டி மோதிக் கண்டுபிடித்த, இயந்திரத்தைக் கொண்டு பறக்கும் கருவி ஒன்றை பறக்க ஆயத்தமாயினர். தம்பி ஆர்வில் இயக்க, அண்ணன் வில்பர் பக்கத்தில் ஓடிவர, 341 கிலோ (ஆர்வில் எடையையும் சேர்த்து) எடையுள்ள விமானம் தரையிலிருந்து மேலெழும்பி 120 அடி பறந்தது. வெறும் 12 வினாடிகளேயானாலும், மனிதன் பறக்கும் இலட்சியத்தை எட்டிவிட்டான்! அடுத்து வில்பர் அதே 12 வினாடிகளில் 175 அடிகள் பறந்தார்.

ரைட் சகோதரர்களின் அந்த மகத்தான கண்டுபிடிப்புக்குப் பின் நடந்ததெல்லாம் வரலாறு. இந்த வரலாற்றை, பலவகை விமானங்களைப் பற்றி எழுத முன்பொருமுறை உத்தேசித்து பின்பு ஒத்திப் போட்டதை தூசு தட்டி எடுக்கலாமா என்று யோசிக்கிறேன்.

முக்கிய நிகழ்வுகள்: http://news.bbc.co.uk/1/shared/spl/hi/world/03/100yrs_of_flight/html/default.stm
100 ஆண்டு கொண்டாட்டங்கள்: http://www.nasm.si.edu/events/100yearsofflight.cfm

Advertisements
%d bloggers like this: