jump to navigation

விளையாட்டு வினை ஆன கதை Tuesday December 2, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

விளையாட்டு வினை ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

மரத்தடி இணையக் குழுவில் மதி என்ற அம்மணி ஈழ இலக்கியம் பற்றி பலரும் தெரிந்து கொள்ள ஒரு நூலின் பக்கங்களை அறிமுகப் படுத்தப் போவதாகச் சொல்ல, நானும் வழக்கம் போல விளையாட்டாய் ஒரு கமெண்ட் அடிக்க, இலவச இணைப்பாய் ஒரு கேள்வியும் கேட்க, அந்தக் கேள்வியை புறந்தள்ளிவிட்டு, கமெண்டை மட்டும் மூலமாக வைத்து ஒரு காட்டாறு இணையம் வழி பயனித்துக் கொண்டிருக்கிறது. நதி ஓட்டத்தில் இன்னும் முழுவதுமாக நீந்தவில்லை. சும்மா எட்டிப் பார்த்ததோடு சரி. பாழாய்ப் போன நேரம் என்று ஒன்று இருக்கிறதே!

சரி அந்த கமெண்ட் என்ன அந்த கேள்வி என்ன என்று கேட்கிறீர்களா?

இதோ அந்த முழு மடல். http://groups.yahoo.com/group/Maraththadi/message/6674


மதி: ஈழத்தமிழ் இலக்கியம்பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்கவேண்டிய இந்தநூலை, மரத்தடி நண்பர்களான நீங்களும் என்னுடன் படிக்க விரும்புவீர்கள் என்றறிவேன். ஆகையால், தினமும் ஒரு பக்கமாக இங்கே பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

நான்: நிச்சயமாக. கூடவே அருஞ்சொற்பொருளும் தந்தால் நல்லாயிருக்கும் 🙂

அது சரி, இந்த சக்தி FM-இல் “மடத்தியாளத்தின் முதல் பாடல்” என்கிறார்களே, இதில் மடத்தியாளம் என்றால் என்ன? (இந்த வார்த்தை புரியவே பல நாள் ஆயிற்று)

சக்தி FM என்பது இலங்கையில் ஒலிபரப்பாகும், இணையம் வழியும் கேட்கக்கூடிய ஒரு வானொலி. சரி இதை எதற்கு நான் கேட்க வேண்டும்? நல்ல கேள்வி. காலச்சக்கரத்தில் அப்படியே பின்னோக்கி எண்பதுகளுக்கு வாருங்கள். காலை ஏழு மணி. வானொலியில் ஒரு இசை அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு:

“இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பு. மத்திய அலை 886 கிலோ ஹெர்ட்ஸ் அலை வரிசையில் எமது காலை ஒலிபரப்பு ஆரம்பம்”

“மே ஜாஜ்யாந்த்ரே குவானித்ரே சேவே…..” (சிங்களம் தெரிந்தவர்கள் மன்னிக்க) இப்படி ஆரம்பித்துப் போகும் இதைத் தொடரும் சிங்கள அறிவிப்பு. இதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அறிவிப்பு வரும்.

காலை பள்ளிக்கூடம் செல்லும் வரை வானொலி வேறு எந்த நிலையத்திற்கும் மாற்றப்பட மாட்டாது. மாலை பள்ளி முடிந்து வரும்போது ஏற்கனவே ஒலிபரப்பு ஆரம்பித்திருக்கும் (மாலை மூன்று மணி). ஏழு மணிக்கு ஒலிபரப்பு முடிவடைந்ததும் வானொலி கேட்கும் ஆர்வம் குறைந்து போவதில் ஆச்சர்யம் இல்லை.

ஞாயிற்றுக் கிழமை ஆனால் டாப் 10 பாடல்கள் கேட்டாக வேண்டும். அப்துல் ஹமீது அவர்களின் கணீர் குரலில் பாட்டுக்குப் பாட்டு கேட்காமல் தூக்கம் வராது. ஞாயிற்றுக் கிழமை சாயங்கால வேளையில் இரண்டு பேர் ‘கதைப்பார்கள்.’ ஒருவருக்கு விசித்திரமான குரல்; வேண்டுமென்றே பேசுவார் (ஆந்தையார் கழுகார் மாதிரி ஒரு பாத்திரம் பேசுவதுபோல்). எதாவது ஒரு தலைப்பில், பெரும்பாலும் நாட்டு நடப்பைப் பற்றிக் கதைப்பார்கள். ஒரு சமயம் கேட்டது:

கேள்வி: படித்து முடித்து விட்டு என்ன செய்வதாக உத்தேசம்?

பதில்: படித்து முடித்ததும் எருமை மாடு மேய்ப்பதெண்டு இருக்கன்

என் சொந்த மண்ணின் (வட்டார வழக்குத்) தமிழுடன் பல வகைகளில் மாறுபட்டதால், கேட்பதற்கு இனிமையாக வேறு இருப்பதால் அதில் ஒரு ஈடுபாடு தானாக வந்தது. இப்படியாக அறிமுகமான இலங்கைத் தமிழ் பின்னாளில் கல்லூரி சென்ற பின், அங்கு வானொலி கேட்க நேரமில்லாததால் தொடர்பு விட்டுப் போனது.

கல்லூரி ஒரு பலசரக்குக் கடை மாதிரி. பல ஊர்களிலிருந்து வந்தவர்கள் பல வட்டார வழக்குகளில் பேசினர். மதுரை பாஷை, திருநெல்வேலி பாஷை, தூத்துக்குடி பாஷை, மெட்ராஸ் பாஷை என்று பலவாறான வட்டார வழக்குகள் அறிமுகமானயின; இவைகளோடு கல்லூரி இருந்த கொங்கு நாட்டு பாஷையும். நண்பர்கள் பேசும்

சில வட்டார வழக்கு வார்த்தைகள் புரியாமல் போனால், தலையில் தட்டி என்ன என்று கேட்கலாம். அப்படிக் கேட்டுத் தெளிந்த வார்த்தைகள் பல. சில வார்த்தைகளை நகைச்சுவைக்காக நண்பர்கள் பேசுவது மாதிரி பேசி கிண்டல் செய்ததும் உண்டு (வேண்டுமென்றேதான் எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்து வருகிறேன்).

பின்னாளில் புலம்பெயர்ந்து, இணையம் வழி இலங்கைத் தமிழ் கேட்க நேர்ந்தபோது குதூகலமாக இருந்தது. ஏதோ இழந்த ஒன்றைத் திரும்பப் பெற்றது போன்ற உணர்வு. ஆனால் இந்தப் பாழாய்ப் போன சக்தி FM-ல் புதிதாய் வந்தப் படங்களிலிருந்து மசாலாப் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து ஒலிபரப்புவதால் அதைக்கேட்கும் ஆர்வம் குறைந்தது.

தூங்கிக்கிடந்த படிக்கும் ஆர்வம் லேசாக தூக்கம் கலைய, பாதி மூடிய கண்களுடன், இணையத்தில் குழுக்களையும், சஞ்சிகைகளையும் பிறகு வலைப்பதிவுகளையும் வலம் வந்தேன். ஒரு நாள் தட்டுப்பட்டது மதியம்மணி எழுதிய இந்தக் கட்டுரை.http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/1696

அதுவரை இலங்கைத் தமிழைக் கேட்டு மட்டுமே பழக்கப்பட்டிருந்த எனக்கு படிப்பதில் சற்றுத் தடுமாற்றமாக இருந்ததால் எனக்குள் ஒரு ஆசை. இந்தக் கட்டுரையை அப்படியே இலங்கைத்தமிழில் நானே வாய்விட்டுப் படிக்க வேண்டும் என்பதுதான் அது. ஒருநாள் சாவகாசமாக படித்துப் பார்த்தேன், நல்ல வேளை யாரும் பக்கத்தில் இல்லை!

சரிதான் இனி எங்கெல்லாம் இது மாதிரி கண்ணில் படுகிறதோ அதையெல்லாம் வாய்விட்டுப் படிப்பதென்று முடிவு செய்தேன். சந்திரவதனா அவர்களின் வலைப்பதிவு கண்ணில் பட்டது, அங்கேயும் வாசிப்பைத் தொடர்ந்தேன். எல்லா வட்டார வழக்கு போலவும் சில வார்த்தைகள் புரியவில்லை, ஆனால் அது வாசிப்பின் ஓட்டத்தை பாதிக்கவில்லை. அவர் எழுதியதில் கவனித்தது ‘ஜெர்மனி’யை ‘யேர்மனி’ என்று குறிப்பிட்டது. ஒரு முறை மதி கூட இப்படி எழுதியிருக்கக் கண்டேன்.

வலைப்பூவில் ஆசிரியர் வேலை பார்த்த நவன் ஒரு நாள் ஏதோ புதிர் போடுவது போல ‘எங்கே, யார் யார் எந்த ஊர்ப்பக்கம் என்று எழுத்தை வைத்துக் கண்டுபிடிங்கள் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு, முல்லை அவர்களின் வலைப்பதிவின் எழுத்தைக் கண்டு அவர் இலங்கை காரரா? என்று ஒரு கேள்வியும் கேட்டு வைக்க, நான் சும்மா இருக்காமல், ‘யேர்மனி’ என்று இலங்கைத் தமிழர்கள்தான் எழுகிறார்கள் என்று விளையாட்டுக்குச் சொல்லப் போக, இதையும் மேலே உள்ள மடலையும் மற்றும் உஷா அவர்கள் வலைப்பூவில் ஆசிரியர் வேலை பார்த்தபோது எழுதிய ஒற்றை வரியையும் வைத்து இரமணீதரன் ஒரு பெரிய விவாதத்தைத் தொடங்கிவிட்டார்.

‘மற்ற வட்டார வழக்கு வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடாத/கேட்காத வாசகர்கள், இலங்கைத்தமிழுக்கு மட்டும் கேட்பதேன்’ என்பதுதான் அந்த வாதத்தின் அடிப்படை (அவர் குறிப்பிட்ட மற்ற விஷயங்களைப் பற்றிப் பேச எனக்கு அனுபவம் போதாது).

விளையாட்டாக இரண்டு இடங்களில் கமெண்ட் அடிக்கப் போக அது இப்படி வினையாக முடிந்ததில் சற்று வருத்தம்தான். அது சரி அந்த ‘மடத்தியாளம்’ என்றால் என்ன என்று சொல்லாமல் விட்டுவிட்டேனே! என் காதுல இடி விழ! அது மடத்தியாளம் இல்லை, ‘மணித்தியாலம்’! அதாவது மணி. ‘இந்த மணித்தியாலத்தின் முதல் பாடலை வழங்குபவர்கள்’ என்றால் ‘The song of the hour is brought you by’ என்று அர்த்தம். முதலில் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்துகொள்ள சிரமப்பட்ட மதியம்மணியே சில மடல்களுக்குப்பிறகுச் சொன்னத் தகவல் இது. பிறகு அவர் நேரத்தைப் பற்றி எழுதும் போது ‘மணிக்கூடு’ என்றால் ‘கடிகாரம்’ என்று தெரிந்து கொண்டது வேறு கதை. எங்கள் ஊரில் மணிக்கூண்டு (கவனிக்க, இடையில் ‘ண்’ உள்ளது) என்றால் உயரமான கட்டிடத்தில் இருக்கும் பெரிய அளவு கடிகாரம். இதை வைத்து கடிகாரத்தைத் தான் சொல்கிறார் என்று என்னால் யூகிக்க முடியாதா என்ன? ஒரு சின்ன வித்தியாசம்: அவர் சொன்னது கைக் கடிகாரம் 🙂

ஐயாமாரே, அக்காமாரே, அண்ணன்மாரே, தாத்தாமாரே, தம்பிமாரே, தங்கச்சிமாரே, தமிழக வட்டார வழக்கு வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவைப்பட்டால், பல மூலைகளில் இருக்கும் -நகமும் சதையுமாய் பழகிய- நண்பர்களுக்கு ஒரு ஃபோன் போட்டால் போதும். இலங்கைத் தமிழில் ஏதேனும் புரியவில்லை என்றால் -இணையத்தில் மட்டுமே- அறிமுகமான ஒரு சில நண்பர்களை மட்டுமே கேட்க முடியும். அதைத்தான் செய்தேன்.

என் வேலை இத்தோடு முடிந்து போயிற்று.

இந்த விவாதம் என்ற ஆறு பல கிளைகளாகப் பிரிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இரு கரைகளுக்குள் ஓடி, நிதானமாக விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சினால் நல்ல மகசூல் கிடைக்கும். அதை விட்டு கட்டுக் கடங்காமல் காட்டாறு போல் ஓடி கரைகளை உடைத்தால் வெள்ளம் பெருக்கெடுத்து, சேதம் ஏற்படும். இதில் எந்தப்பாதையை தெரிந்தெடுக்கப் போகிறீர்கள் என்பது முற்றிலும் உங்கள் கையில்.

ஆமாம், நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தைகளில், வாக்கியங்களின் தொணியில். இந்த மின் ஊடகத்தில் பேசும் (எழுதும்) முகங்கள் தெரியாது, அதனால் முகபாவங்களைப் பார்க்க இயலாது, அல்லது தொலைபேசியில் பேசுவது போல குரலின் ஏற்ற இறக்கங்களைக் காட்ட இயலாது. ஒரே வார்த்தையில் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ஊடகம் இது. ‘யாகாவாராயினும் நாகாக்க’ மட்டும் போதாது, மனதையும், கை விரல்களையும் காக்க வேண்டும். அதே சமயத்தில் நகைச்சுவை உணர்வையும் நசுக்கி விடக் கூடாது. அன்பை வளர்ப்போம், பூசல் தவிர்ப்போம்.

Advertisements
%d bloggers like this: