jump to navigation

தமிழனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடா Monday November 24, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஒரு ஊரில் இரண்டு பண்ணையார்கள். இருவருக்கும் கிட்டத்தட்ட சம அளவிலான சொத்துகள். ஊர்ப் பொது நிகழ்ச்சிகளில் ஒருவர் இருந்தால் மற்றொருவரைக் காண முடியாது. பண்ணைகளில் வேலை செய்யும் மக்களுக்கிடையே இந்த பனிப்போர் கிசு கிசு மிகப் பிரபலம்.

இரண்டு பக்கமும் விசுவாசமான தொழிலாளர்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் விசுவாசத்தைக் காட்டாமல் நடுநிலைமை வகிக்கும் தொழிலாளர்கள் கூட, முதல் நாள் ஒருவரிடம் வேலைக்குச் சென்றுவிட்டு மறுநாள் அங்கு வேலை இல்லையென்றால் மற்றொருவரிடம் வேலைக்குச் செல்லத் தயங்குவார்கள். பண்ணையார் எதாவது சொல்வாரோ என்ற பயம்தான்; இல்லை இல்லை, இரண்டு பக்க விசுவாசிகளும் இல்லாதையும் பொல்லாதையும் தங்கள் எஜமானர்களிடம் சொல்லிவிடுவார்கள் என்ற பயம்தான். அதற்காக இரண்டு பக்கமும் பல்லை இளித்து சமாளிக்க வேண்டிய சங்கடமான நிலை.

தொழிலாளிகள் இப்படி இருக்க, முதலாளிகள் இருவரும், ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன நினைக்கிறார்? உண்மையிலேயே காழ்ப்புணர்ச்சி இருக்கிறதா? இது சாமானியர்களுக்கு எப்படித் தெரியும்? அவர்கள் இருவருக்குள்ளும் புதைந்து கிடக்கும் ரகசியமல்லவா அது!

என்னதான் கோஷ்டி இரண்டானாலும், கோஷ்டி மோதல் என்று வந்ததில்லை. யாரும் அடித்துக் கொண்டு செத்ததில்லை. எல்லோருடைய வாழ்க்கையும் சீராக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாள் இரண்டு பண்ணையார்களில் வயதில் சற்று மூத்தவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். அது விடிந்தும் விடியாத காலைப் பொழுதானதால் ஊரில் யாருக்கும் இன்னும் தெரியவில்லை. பளபளவென்று பொழுது விடியும் நேரத்தில் டீ குடிக்கச் சென்ற சில தொழிலாளிகள், மூத்த பண்ணையார் வீட்டிலிருந்து -அவரின் பரம எதிரி என்று அவர்கள் நினைத்த- இரண்டாவது பண்ணையார், சோகமே உருவாக வெளியே போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தனர்.

என்னடா இது அதிசயம் என்று தொழிலாளிகள் டீ குடிப்பதை மறந்துவிட்டு மூத்த பண்ணையாரின் வீட்டுப் பக்கம் போய்ப் பார்த்தனர். பண்ணையாரின் துணைவியார் சேலைத் தலைப்பை வாயில் திணித்துக் கொண்டு, ரோஜாப்பூ மாலை போட்ட ஒரு சடலத்தின் பக்கத்தில் அமர்ந்து விம்மி அழுது கொண்டிருந்தார்.

——–******———

செய்தி: மூத்த அமைச்சர் முரசொலி மாறன் மரணம்: தலைவர்கள் அஞ்சலி.

இந்தியாவின் பல மாநில முதலமைச்சர்களும் மந்திரிகளும், மத்திய அமைச்சர்களும், பிரதமரும் அஞ்சலி செலுத்தினர். ராணுவ மரியாதையுடன், குண்டுகள் முழங்க உடல் தகனம்.

நான் தேடிய செய்தி: மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் – அறிக்கை. கிடைத்தது: ‘தமிழக அரசு சார்பில் பொதுத்துறை செயலர் டி.பிச்சாண்டி’ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

கவனிக்க. நான் தேடியது ‘தமிழக முதல்வர் நேரில் அஞ்சலி’ அல்ல. அப்படித் தேடினால் என்னைப் போல் முட்டாள் உலகத்தில் யாருமில்லை. நான் தேடியது வெறும் ‘அறிக்கை’, வாய் வார்த்தை.

விடியலுக்கு முன்னே ரோஜா மாலை போட்டு சக பண்ணையாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் போனவரை நினைத்துப் பார்க்கிறேன். மனிதர்கள் பலவிதம், அதில் தமிழகத் தலைவர்கள் தனி விதம்.

Advertisements
%d bloggers like this: