jump to navigation

குழந்தைகள் தினம் Friday November 14, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

Jawaharlal Nehru

இன்று குழந்தைகள் தினம். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள்தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். ‘ரோஜாவின் ராஜா’ என்று அறியப்பட்ட நேரு குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டவர். பல பள்ளிகளில் காணப்படும் படங்களில் சட்டைப்பையில் ஒரு ரோஜாவுடன் சிரித்த முகத்துடன் காணப்படுவார். நேரு மாமா என்ற செல்லப்பெயரும் அவருக்கு உண்டு. இது எப்படி வந்தது என்ற வரலாறு தெரியாது. மாமாவிடம்தான் குழந்தைகள் அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் என்பதால் இருக்கலாம்.

குழந்தைப்பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத பருவம். 90 வயது பெரியவரானாலும், தான் ஐந்து வயதில் செய்ததை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். எதையும் துருவிப் பார்க்கிற பருவம் குழுந்தைப் பருவம். பின் விளைவுகளைப் பற்றி அறியாத, கவலைப்படாத செயல்களைச் செய்யும் பருவம். எதைப்பார்த்தாலும் ஏன் எப்படி என்று கேள்வியெழுப்பும் பருவம். தியேட்டரில் படம் பார்த்தால், நடிகர்கள் எப்படி திரைக்குப் பின்னால் ஓயாமல் தினமும் மூன்று காட்சிகள் நடிக்கிறார்கள் என்று கேட்கும் பருவம். பஸ்ஸில் பயணம் செய்யும் போது சாலையோர மரங்கள் ஏன் எதிர்த்திசையில் வேகமாக ஓடுகின்றன என்று கேட்கும் பருவம். வானம் எங்கு முடிகிறது என்று கேட்கும் பருவம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

குழந்தைகளின் குறும்புகளை மிக இயல்பாக படங்களில் காட்டுவதில் இயக்குனர் மணிரத்னம் வல்லவர். அவருக்கும் குழந்தைகளைப் பிடிக்குமென்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட அவருடைய எல்லாப் படங்களிலும் எதாவது குழந்தைகளின் குறும்பு இருக்கும். குழந்தகள் கொட்டமடிக்கும் ‘அஞ்சலி’ படம் பார்த்திருப்பீர்களே? ‘நாயகன்’ படத்தில் இரண்டு வாண்டுகளும் செய்யும் கட்டப்பஞ்சாயத்தை மறக்க முடியுமா? ‘நீங்க நல்லவரா? கெட்டவரா?’ – இந்த வசனத்தை ஆயுளுக்கும் மறக்க முடியுமா?

‘பாம்பே’, ‘அலைபாயுதே’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்று இந்தப் பட்டியல் நீளும்.

இவையெல்லாம் மனதைக் கவர்ந்தாலும் என்னுடைய இளைய பருவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டியது ‘அழகி’ படம்தான். கோழி பிடித்தல், கடலை திருடுதல், நாடகம் நடித்தல், கூட்டாஞ்சோறு சமைத்தல் என்று ஒரே பாட்டில் (சிட்டு சிட்டு குருவிக்கந்த வானத்தில) அத்தனை விஷயங்களையும் சேர்த்திருப்பார் ஒளி ஓவியர், இயக்குனர் தங்கர் பச்சான்! அந்தப் படம் பார்க்கும்போதெல்லாம் சிறுவனாய் மாறிவிடுவேன் என்பது என்னையறியாமலேயே நடக்கும் ஒரு செயல்.

என்ன, நீங்களும் குழந்தையாய் மாறிவிட ரெடியா? 🙂

Advertisements
%d bloggers like this: