jump to navigation

அடிக்குது குளிரு Tuesday November 11, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

இங்கு குளிர்காலம் தொடங்கிவிட்டது. ‘புது வெள்ளை மழை’ இன்னும் கொஞ்ச நாளில் பொழிய ஆரம்பித்துவிடும். வீட்டை விட்டு வெளியே கிளம்பவேண்டுமென்றால், புதுப்பெண் அலங்காரம் செய்து கொள்வது போல நேரமெடுத்து தலை முதல் கால் வரை மறைத்துக் கொண்டுதான் செல்லவேண்டும். இந்த அலங்காரத்துக்குப் பயந்தே (அல்லது சோம்பலாக) வீட்டிற்குள்ளேயும் அலுவலகத்துக்குள்ளேயும் குளிர்காலம் கழிக்கப்படும். ‘எதையும் தாங்கும் கட்டை இது’ என்று வீராப்புப் பேசி, தக்க பாதுகாப்பு இல்லாமல் வெளியே போனால் அம்பேல். குளிர், ஊசி மாதிரி குத்தும். கொஞ்ச நேரத்தில் கை காலெல்லாம் விரைத்துப் போய்விடும்.

இது கிட்டத்தட்ட கும்பகர்ண வாழ்க்கைதான். அடாது பனி பெய்தாலும் விடாது விளையாடும் அமெரிக்கர்கள் குளிர்காலத்துக்கென்றே பிரத்தியோக விளையாட்டுகளை வைத்திருக்கிறார்கள். பனிச்சறுக்கு விளையாட்டுகளும் (ski  & ice skating) பந்துருட்டல் (bowling) விளையாட்டும் மிகப் பிரபலமானவை. பந்தை உருட்டி உருட்டி போரடித்து விட்டது. இருந்தாலும் பனிச்சறுக்கி முட்டியைப் பேத்துக் கொள்ள விரும்பவில்லை, அதனால் திரும்பவும் பந்தை உருட்ட வேண்டியதுதான் 😦

குடும்பத்தோடு, முக்கியமாக வாண்டுகளோடு விளையாடும் குழுவை வேடிக்கைப் பார்த்தல் ஒரு சுகமான அனுபவம். இரண்டு பக்கமும் இருக்கும் வாய்க்காலில் பந்து விழுந்து விடாமலிருக்க தடுப்பு வைத்திருப்பார்கள். கையில் தூக்க முடியாமல், கீழே வைத்து உருட்டிவிட்டு அது தட்டுத்தடுமாறி மெ………து…….வா……..கப் போய் குச்சிகளைச் சாய்த்ததும் குழந்தையின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே!

Advertisements
%d bloggers like this: