jump to navigation

உலகப் பார்வையில் இந்தியா Sunday November 2, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஆண்டாண்டு காலமாக இந்தியா என்றாலே பாம்பாட்டிகளும் சடாமுடி சாமியார்களும் நிறைந்த இடம் மட்டுமே என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர் மேற்கத்தியர், குறிப்பாக அமெரிக்கர்கள். தொலைகாட்சியில் இந்தியாவைப்பற்றிக் காட்ட வேண்டுமா? இருக்கவே இருக்கிறார்கள் ஒட்டிய வயிறுடன் திரியும் பிச்சையெடுக்க வைக்கப்படும் சிறுவர்கள், அல்லது நெரிசல் மிகுந்த ஒரு தெரு. இதையெல்லாம் பார்த்தாலே எனக்கு எரிச்சல்தான் வரும். கணினித்துறையில் காலரைத் தூக்கிக்கொள்ளும்படி முன்னேற்றமடைந்த நாடாக்கும், இன்னும் இப்படியே காட்டிக் கொண்டிருக்கிறார்களே என்று.

சமீபத்தில் கொஞ்சம் நாகரீகமாகக் காட்டினார்கள். இந்தியாவைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொண்டதனால் அல்ல; அமெரிக்கர்களின் வேலைகள் இந்தியாவுக்குப் போகின்றன என்ற வயிற்றெரிச்சலே காரணம். அத்தி பூத்தாற் போல எப்போதாவது சில நல்ல செய்திகளையும் பார்க்க நேரும்.

அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும், அது அவர்கள் அறியாமை என்று விட்டு விடலாம். நாம் எப்படி இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். பிரதமர் வாஜ்பாயி சொன்னது போல எங்கெல்லாம் கணினி இருக்கிறதோ அங்கெல்லாம் இந்தியன் இருப்பான் என்று நாம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். மழையில்லாமல், தண்ணீரில்லாமல் அல்லல்படும் விவசாயிகள் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? சோத்துக்கு அரிசி இல்லையென்றால் அபரிமிதமான அந்நியச் செலாவணியைக் கொண்டு அடுத்தவரிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். தின்று கொழுத்துவிட்டு தலைநகரின் வீதிகளில் அப்பாவிப் பெண்களை நாளும் ஒருவர் என்று கணக்கு வைத்துக் கற்பழிக்கலாம்.

சாலைவிதிகள் என்று என்னதான் சட்டம் என்றாலும் அதையெல்லாம் மதிக்க வேண்டுமா என்ன? சட்டத்தை மதித்து நடந்தால் இந்தியாவில் ‘நான் இந்தியன்’ என்று சொல்லிக் கொள்ளமுடியுமா? குடித்து விட்டு தாறுமாறாக காரை ஓட்டி அப்பாவி உயிர்களைக் கொன்றுவிட்டு சில நாள்களில் வைர ‘டை’ ஒன்றைக் கட்டிக் கொண்டு ஜொலித்தால்தானே கவுரவம்?

அட மனிதர்களை விடுங்கள் ஆறறிவுதான் அவர்களுக்கு; புத்தியில்லாதவர்கள். ஒன்று முதல் ஐந்தறிவு வரை படைத்த மிருகங்கள் பல வகையில் மனிதர்களுக்கு பல பாடங்களைச் சொல்லித்தருகின்றன. கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து பெரிய காரபூந்தியை இழுத்துச் செல்லும் எறும்புகள், ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று சொல்லித் தரும். கடியோ கடியென்று கடித்து ரத்தத்தை உறிஞ்சி மனிதர்களுக்கு ‘சொரணை’ என்பதை வரவழைக்க ஆண்டாண்டு காலமாக முயன்று வருகின்றன கொசுக்கள். அப்படிப்பட்ட வாத்தியார்களே ஒழுங்கீனமாக நடந்து கொள்ளலாமா?

புனிதமானது என்ற அந்தஸ்து பெற்ற ஒரே காரணத்துக்காக பசுக்களுக்கு இருக்கும் ஆணவத்தைப் பாருங்கள், எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நடு ரோட்டில் நிற்கிறது. இதுதான் சாக்கு என்று எருமை மாடுகளும் சேர்ந்து கொள்கின்றன.

நன்றியுள்ளவன் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக திருவாளர் நாய்களின் திருவிளையாடல்கள் சொல்லி மாளாது. இவனால் எத்தனை பேர் தொப்புளைச் சுற்றி ஊசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இவன் மேல் உள்ள பாசத்தால்  மக்கள் சகிப்புத் தன்மையில் தனி இடம் பிடித்துள்ளார்கள். ஒரு மிருகத்திடமிருந்து ஒரு பாடம்தான் கற்றுக் கொள்ளவேண்டுமா என்று எதாவது வரைமுறை இருக்கிறதா என்ன? கண்ட இடத்தில் காலைத்துக்கி மூச்சா போகும் மற்றும் கக்கா போகும் பாடங்களையும் மிகச் சிரத்தையாகக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.

இப்படியாகப் பல திருவாளர் மிருகங்கள் தங்கள் உரிமையையும் அங்கீகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் பட்டியலில் இன்று முதலிடம் பிடிப்பவர் திருவாளர் குரங்கார். டெல்லியின் வீதிகளில் இவரின் லீலைகள் கண்டு மக்கள் புல்லரித்துப் போய் வாழைப் பழங்களைப் புகட்டி புஷ்டியாக்குகிறார்கள். இல்லையா பின்ன, மூதாதையர்கள் அல்லவா?

எனக்கு இது சாதாரண திருவிளையாடலாகத் தோன்றவில்லை. மக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே அனுமான் இந்த வேஷத்தில் வந்திருக்கிறார்.வயதான அப்பா அம்மாவுக்கே சோறு போடாமல் முதியோர் இல்லத்தில் விட்டுவிடும் மக்களுக்கு ஒரு பாடம். அவர்கள் யோசித்துப் பார்ப்பார்கள் அல்லவா? மூதாதையருக்கே ஒரு வாழைப் பழம் தானமளித்த நாம் ஏன் தாய் தந்தையரை விட்டுவிட்டோம் என்று. ஆகவே இந்திய அரசாங்கமே, இதை ஒரு தலைவலியாக நினைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements
%d bloggers like this: