jump to navigation

காந்தி கண்ட சுதந்திரம் Wednesday October 15, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

இந்தியாவில் தலைநகரம் பெண்கள் வாழ பாதுகாப்பானதா? சமீபத்தில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்விஸ் தூதரக பெண்மணி ஒருவர் புது தில்லியில் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதே புது தில்லியில் கல்லூரி மாணவி ஒருவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் காவல் புரியும் இரு ராணுவ வீரர்களால் கற்பழிக்கப் பட்டுள்ளார். இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளியில்.

குடியரசுத் தலைவர் எவ்வளவு கண்ணியமிக்கவர் என்பது உலகமே அறிந்தது; குறைந்தபட்சம் இந்தியாவே அறிந்தது. அவரைக் காக்கும் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் கண்ணியமுடன் இருக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சமாக இருந்தாலும், ராணுவத்தில் சொல்லித்தரப்படும் ஒழுக்க நெறி காற்றில் பறந்து விட்டது.

ஒரு நாட்டின் மேல் படையெடுத்து வெற்றி கொண்ட வீரர்கள் அந்த நாட்டின் பெண்களை மானபங்கப் படுத்தியிருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. சொந்த நாட்டின் பெண்ணையே மானபங்கப் படுத்தியிருக்கும் இந்த ‘வீரர்கள்’ வரலாற்றை, குறிப்பாக போர் முறைகளை அதிகம் நேசித்திருக்க வேண்டும்.

இரண்டாவது சர்வதேச அளவில் இந்தியாவின் மானத்தை வாங்கியிருக்கும் சம்பவம்.

இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 300 கற்பழிப்பு வழக்குகள் புது தில்லியில் பதிவாகியிருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இன்று இந்த ஆண்டின் 288-வது நாள், ஆக ஒரு நாளைக்கு ஒரு கற்பழிப்புக்கு மேல் நடந்து கொண்டிருக்கிறது!

“என்று ஒரு பெண் நள்ளிரவில் தைரியமாக வெளியில் நடமாட முடிகிறதோ, அன்றுதான் இந்தியாவிற்கு சுதந்திரம்” என்று காந்தி சொல்லியிருக்கிறார் என்று படித்த ஞாபகம். அந்த சுதந்திரம் கிடைக்கும் என்று எள்ளளவும் நம்பிக்கை இல்லை.

Advertisements
%d bloggers like this: