jump to navigation

பாய்ஸ் ஒரு பார்வை Saturday October 4, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

சாவகாசமாக இப்போதுதான் “பாய்ஸ்” படத்தைப் பார்த்து முடித்தேன். சாதாரணமாக நான் விமர்சனம் எழுத நினைப்பதில்லை. சமீப காலத்தில் தமிழ்ப் பட உலகில் ஒரு பிரளயத்தையே உருவாக்கிய படம் என்பதால் கொஞ்சம் எழுதத் தோன்றுகிறது.

“தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இந்த மாதிரி பசங்களைப் பார்க்கலாம்” என்ற ஷங்கரின் பிண்ணனி குரலுடன் அறிமுகமாகிறார்கள் ஐந்து “பசங்க”; கூடவே அவரவர் குடும்பப் பிண்ணனி மற்றும் ஒவ்வொருவரின் “தனித்தன்மை” மற்றும் திறமையும் காட்டப் படுகிறது.

காலம் காலமாக இருக்கும் குட்டிச்சுவற்றின் மேல் உட்கார்ந்து கொண்டு பெண்களைக் கவர எது சிறந்த வழி என்று மாநாடு போடும் புளித்துப் போன கோடம்பாக்கத்து சரக்கில் ஒருவன் சொல்லிய வார்த்தை கேட்டு ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். இந்தக் காலத்தில் திரையில் கெட்ட வார்த்தைகள் சரளமாக பேசப்படுவது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது, மிகவும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்ற போர்வையில்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து பார்த்து புளித்துப் போன ‘காதல்’ கதை கொஞ்சம் நேரம் ஓடுகிறது. அதாவது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர் காதலர்களைப் பிரித்து வைப்பது, காதலர்கள் அதை மீறி திருட்டுத்தனமாக சந்திப்பது, காதலிக்காக “வீர தீர” காரியம் செய்வது, அதற்கு “பலன்” ரவுடிகளின் உருவில் கிடைப்பது, பட்ட காயங்கள் லட்சியக் காதல் மலர ஒரு திருப்பு முனையாக அமைவது என்று அட்சரம் பிசகாமல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வீர தீர காரியங்களில் ஒன்று உங்களுக்குத்தான் தெரியுமே?

இடையில் “கருத்து” சொல்ல வருகிறார் விவேக். அதாகப்பட்டது ‘களவும் கற்று மற’ என்பது விடலைப் பருவத்துக்கே உரியம் குணம், அதை யார் அணை போட்டாலும் தடுக்க முடியாது. அதற்கு அவர் காட்டும் உதாரணங்கள் ‘F’ TV மற்றும் ஆபாச தொலைக்காட்சி காட்சிகள். இந்த சப்பைக் கட்டுக்கு ‘அனிமல் பிளானட்’ தொலைக்காட்சியை வைத்து அவர் சாமர்த்தியமாக அடித்திருக்கும் ஜோக்கை யாரும் கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.

தமிழ்ப் படம் என்றால் மூன்று மணி நேரம் இருக்க வேண்டும் என்று எழுதப் படாத விதிக்கு கட்டுப் பட்டு, பொட்டா சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு, சுதந்திரப் போராட்ட காலத்தில் கருத்துப் பிரச்சாரத்துக்கு இருந்த தடை ரேஞ்சுக்கு ஒரு தேவையில்லாத நாடகம் நடந்தேறுகிறது. பிறகு விக்கிரமன் படம் ஃபார்முலாவில் படிப்படியாக, அதிவேகமாக முன்னேறி வெற்றிக் கனியைப் பறிக்கிறார்கள் இந்த பசங்க.

என்னதான் விடலைப் பசங்க படமென்றாலும் சென்டிமென்ட் இல்லையென்றால் அது தமிழ்ப் படமாகுமா?

ஒரு சாதாரண விஷயத்தில் கூட சென்டிமென்டை கலக்கும் திறமை நம்மவர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆரம்பத்திலிருந்தே பசங்களின் வழிகாட்டியாக காட்டப்படுகிறார் விவேக். பசங்களுக்காக பல உதவிகளை செய்கிறார். பாப் ஆல்பம் தயாரிக்க சோனி நிறுவனத்தின் காண்ட்ராக்டில் கையெழுத்திடும் நேரத்தில் இவர்தான் எங்கள் பாய்ஸ் குழுவின் மேனேஜர் என்று சொல்லும் போது ஒரு சென்டிமென்ட் பார்வை ஏனோ?

பாய்ஸ் குழுவின் வெற்றியை அர்ப்பணிக்க, பசங்களில் ஒருவனை பலி கொடுப்பது தவிர்க்க சென்டிமென்ட் ஆகிவிடுவதும் ஏனோ?

சரி படத்தில் நன்றாக சொல்லும்படியாக எதுவுமே இல்லையா என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.

படிப்புக்கு பெற்றோரின் பணத்தை மட்டுமே எதிர்பார்க்காமல், பகுதி நேர வேலை எதாவது செய்து உனது தேவையை கொஞ்சமாவது பூர்த்தி செய்துகொள், நட்பின் அருமை, திறமையை வெளிக்காட்ட தயங்காதே இப்படி சில.

இவற்றைச் சொல்ல அதைச்சுற்றிப் பிண்ணப்பட்ட காட்சிகளும் வசனங்களும் பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கின்றன.

மெல்லிய, மனதிற்கு இதம் தரும் இசை மட்டும் பாடல்கள் மட்டுமே எனக்குப் பிடிக்கும், அதனால் இந்தப் படத்தின் இசைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.

“நாட்டில் நடப்பதைத்தான் சினிமாவில் காட்டுகிறோம்” என்று சொல்லிக் கோடம்பாக்கத்துக்காரர்கள் சொல்வது எல்லாருக்கும் தெரிந்ததே. இங்கொன்றும் அங்கொன்றுமாக நடப்பதை, “எங்கு பார்த்தாலும் இப்படித்தான் நடக்கிறது” என்று பொதுப்படுத்தி சொல்வதே அவர்களின் முதல் கடமையாக இருக்கிறது. எத்தனை காலமானலும் இது மாறப் போவதில்லை.

சினிமா என்பது தமிழர்களின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பதற்கு தமிழக அரசியல் வரலாறே சாட்சி. அந்த வகையில் இந்த படத்தைப் பார்த்து இதன் தாக்கத்தில், யார் எந்த கருத்தை எடுத்துக் கொண்டு முன்னேறினார்கள் அல்லது முடங்கிப் போனார்கள் என்று எதிர்காலம் பதில் சொல்லும்.

ஷங்கர் இந்தப் படத்தை எடுக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் என்று கேள்வி. கால தாமதத்துக்கு படம் ஆரம்பிக்கும்போதே (மேலே சொல்லப்பட்ட) ஒரு விளக்கம் சொல்கிறார், யாரும் கண்டுகிட்ட மாதிரி தெரியல. எங்க கிராமத்து மூலைக்கு போனாறான்னு தெரியல, அடுத்த வாரம் வீட்டுக்கு ஃபோன் பண்ணும்போது, கட்டைச் செவுத்துல உக்காந்துக்கிட்டிருக்கிற என் தம்பி மற்றும் நண்பர்கள் கிட்ட கேக்கணும்.

கண்டனம்

நானும் பார்க்கிறேன், கடந்த ஐந்தாறு வருடங்களாக வரும் பல படங்களில் அமெரிக்க மாப்பிள்ளை என்று கோக்குமாக்காக ஒருத்தனைக் காட்டுகிறார்கள். எல்லாப் படங்களிலும் கடைசியில் அவனுக்கு அல்வாதான் கிடைக்கிறது.

யோவ், என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்க? என்னை மாதிரி (பொறுப்புள்ள) பசங்களுக்கெல்லாம் கல்யாணமே நடக்கக் கூடாதுன்னு திட்டம் போட்டு பண்றீங்களா? இது நல்லா இல்லே சொல்லிப்புட்டேன்!

Advertisements
%d bloggers like this: