jump to navigation

புயலுக்கும் பெயர் உண்டு Monday September 15, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

அமெரிக்காவில் இருப்பவர்கள் வானிலை அறிக்கை பார்க்காமல் எந்த வெளிவேலையையும்(outdoor activities) செய்ய கொஞ்சம் யோசிப்பார்கள். முக்கியமாக பனிக்காலங்களில், எத்தனை இன்ச்சுக்கு பனி விழும், காரை எடுக்கலாமா இல்லை பஸ்ஸில் போகலாமா போன்ற முடிவுகள் உள்ளூர் டீவி சேனலைப் பார்த்தே எடுக்கப்படும்.

இந்த அறிக்கைகளில் சில சமயங்களில் hurricane “claudette”, hurricane “ana” என்று சூறாவளி காற்று பற்றி சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயராக இருக்கும். சூறாவளிக்கெல்லாம் யார் பெயர் சூட்டு விழா நடத்தியது என்று நினைத்துக்கொள்வேன். பெரும்பாலுல் இவை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளையே சூறையாடும். கடற்கரையை விட்டு ரொம்பதூரம் தள்ளியிருப்பதால் இதைப்பற்றி அவ்வளவாக கண்டுகொண்டதில்லை. சமீபத்தில் தென்கொரியாவைத் தாக்கிய புயலின் உக்கிரம் மிகக்கொடூரமாக இருந்தது. அந்த புயலின் பெயர் ரூசா(rusa) என்றார்கள்.

சரி இந்த பெயரை யார்தான் வைக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம் என்று அண்ணன் கூகிளை நாடினேன். அவர் சொன்ன அபரிமிதமான தகவல்களின் சுருக்கம் இதுதான் உலக வானிலை ஆய்வாளர்கள் சங்கம் (World Meteorological Organization) தான் இந்தப் பெயர்களை தேர்வு செய்கிறது. ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு  பட்டியல் தயார் செய்து பெரிய புயலுக்கு ஒவ்வொரு பெயராய் இடுகிறார்கள்.

பெயரிடும் வரலாறு கொஞ்சம் சுவராஸ்யமானது. ஒரு காலத்தில் பெண்களின் பெயர்களை மட்டுமே வைத்தார்களாம் (“ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே…” என்று அப்போதே யாரோ பாடியிருக்கிறார்கள் 🙂 ) பிறகுதான் மாற்றினார்களாம்.

புயல் காற்றை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கிறார்கள்.

Hurricanes – Atlantic and Eastern Pacific

Typhoons – Western North Pacific and Philippines

Cyclones – Indian and south Pacific

Hurricane, Cyclone, Typhoon etc

ஒரு புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டால், அந்த பெயர் ராசியில்லை என்று கடாசி விடுகிறார்களாம்.

இதெல்லாம் சரி, நாகப்பட்டினத்தில் கரையை கடப்பதாக பாவ்லா காட்டிவிட்டு, ஆந்திராவையும் ஒரிஸ்ஸாவையும் பதம் பார்க்கும் புயலுக்கு பெயர் கிடையாதா? நம்மவர்கள் புயலுக்கு பெயர் வைப்பதில்லையாம். நல்லதா போச்சு! தெலுங்கு பேர் வை, ஒரியா பேர் வை என்று (அரசியல்) சண்டைக்கு வழி இல்லாமல் பண்ணிவிட்டார்கள்.

குறிப்பு: இந்த வாரம் இசபெல் (Isabel) என்ற பெண்புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்க இருக்கிறதாம்.

Advertisements
%d bloggers like this: