jump to navigation

வாஸ்து Sunday September 14, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

இன்று காலை சீக்கிரம் எழுந்து விட்டேன். நண்பன் வீட்டில் இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபோது ஒரு வாஸ்து புத்தகம் கண்ணில் பட்டது. இந்த மாதிரி சமாச்சாரங்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இப்போது பொழுது போக்க வேறு வழியில்லை. மேலும் வாஸ்து ஒரு அறிவியல் என்று சிலர் சொல்வதால் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று புத்தகத்தை புரட்டினேன்.

வாஸ்து என்பது பஞ்ச பூதங்களின் அடிப்படையில் அமைந்ததாம். பஞ்ச பூதம் என்ன என்று தெரியாதவர்களுக்கும் மறந்தவர்களுக்கும்: நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வெளி (Space). வாழும் இடத்தை நான்கு கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு கால் பாகமும் (quadrant) ஒவ்வொரு சக்திக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள்

 வடமேற்கு – காற்று  வடகிழக்கு* – நீர்
 தென்மேற்கு – நிலம்  தென்கிழக்கு – நெருப்பு

வெளி, நடுநாயகமாக இருக்கிறது.

இது பூமியின் வடபாகத்தில் (Northern Hemisphere) இருப்போர்களுக்கு மட்டும் இந்த அமைப்பு. தென்பாகத்தில் (Southern Hemisphere) இருப்போர்களுக்கு இது சற்று மாறுபடும். காற்றும் நிலமும் இடங்களை மாற்றிக்கொள்ளும். அதே போல் நீரும் நெருப்பும் இடம் மாற்றிக்கொள்ளும்.

சரி இனி எந்த கால் பகுதியில் எதை வைக்கவேண்டும் இன்று பார்க்கலாம்.

வடமேற்கு: காற்று அதிகம் வருமிடமாதலால், இது அதிகம் புழங்குமிடமாக இருக்கவேண்டும். உதாரணமாக வரவேற்பறை.

வடகிழக்கு: வெற்றிடமாக இருந்தால் நல்லது. படிக்கும் அறை, தியானம் செய்யும் அறை இருக்கலாம். (தண்ணீர் சம்பந்தப்பட்டிருப்பதால், குளியலறை இருக்கலாம் என்பது என் கருத்து)

தென்மேற்கு: படுக்கையறை

தென்கிழக்கு: சமையலறை மற்றும் நெருப்பு சம்பந்தப்பட்டவை.

அது சரி வட பாகத்துக்கும் தென் பாகத்துக்கும் ஏன் ஒரே மாதிரி அமைப்பு இருக்க கூடாது? காரணம் சுவராஸ்யமானது. சாதாரணமாக இதை பெரும்பாலோர் கவனித்திருக்க மாட்டோ ம். சூரியன் கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் போது சற்று தெற்கு பக்கமாகவே இருப்பதை காணலாம். தென் பாகத்திலிருந்து பார்த்தால் இது சற்று வடக்கு பக்கமாக இருக்கும். பூமி தன் அச்சிலிருந்து 23 1/2 டிகிரி வலப்பக்கம் சாய்ந்திருப்பதே இதற்கு காரணம்.

இதைப் படித்துக்கொண்டே எங்கள் வீட்டின் அமைப்பை பொருத்திப் பார்த்தேன். அப்படியே ஒத்துப்போனது!

பல வகை வடிவில் இருக்கும் வீட்டினமைப்பை வாஸ்து படி எப்படி மாற்றியமைக்கலாம் என்று போகிறது அந்த புத்தகம்.

*வடகிழக்கு திசை பற்றிய ஒரு கொசுறு செய்தி: “ஈசான” மூலை என்றும் “சனி” மூலை என்றும் கிராமப்புறங்களில் இந்த திசையை சொல்வார்கள். அடிக்கல் நாட்டுவது, முதல் நாற்று நடுவது எதுவானாலும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கும். எதற்கு இந்த திசைக்கு அப்படி ஒரு சிறப்பு? அதாகப்பட்டது, வேதங்களின் படி இதுவே கடவுள் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்ல கதவு (gateway to the god) இந்த திசையில்தான் இருக்கிறதாம்

இதைப்படித்து விட்டு யாரேனும் தங்கள் வீட்டை தலைகீழாக புரட்டிப் போட்டு வூட்டுக்காரம்மாவிடமோ, வூட்டுக்காரய்யாவிடமோ வாங்கிக் கட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல 🙂

Advertisements
%d bloggers like this: