jump to navigation

WTO Friday September 12, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

உலக வர்த்தக சங்கத்தின் WTO ஐந்தாவது மாநாடு மெக்சிகோ நாட்டின் கான்குன்(Cancun) நகரில் நடந்துகொண்டிருக்கிறது (செப். 10-14). அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விவசாய மானியங்களை குறைத்து விவசாய பொருட்களுக்கு ஒரு ஆரோக்கியமான சந்தையை உருவாக்க வளரும் நாடுகள் போராடி வருகின்றன.உலகமயமாக்கல் என்பது வளர்ந்த நாடுகளின் பொருட்களை வளரும் மற்றும் நலிந்த நாடுகளுக்கு விற்பது மட்டுமாகாது, மேலும் உலக வர்த்தகத்தின் விதிமுறைகளை வளர்ந்த நாடுகள் மட்டுமே விதிக்க முடியாது, அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கொண்டே வடிவமைக்க வேண்டும் என்பது வளரும் நாடுகளின் வாதம்.

வல்லவன் வைத்ததே சட்டம் என்று இது வரை செயல்பட்டுக்கொண்டிருந்த வளர்ந்த நாடுகள் இந்த வாதத்தை முழு மனதோடு ஏற்பதென்பது பாகற்காய் சாப்பிடுவது மாதிரிதான். அதனால் ஒரு நிலையான முடிவுக்கு வர இந்த மாநாடு வகை செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பசுமைப்புரட்சி பற்றி அவ்வளவாக எனக்குத் தெரியாது, ஆனால் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு ஊகம். உணவில் தன்னிறைவு பெறவேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு நாடும் அதற்கேற்ப திட்டங்கள் தீட்டியிருக்க வேண்டும். அதன்படி விவசாய மானியம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதித்திருக்கவேண்டும். தொழில் நுட்ப உதவியுடன் அசுரவேகத்தில் விவசாய முன்னேற்றங்கள் மேலை நாடுகளில் ஏற்பட்டன. தன் நாட்டுத் தேவையை மிஞ்சும் அளவு உற்பத்தி பெருகியது. மீதமுள்ளதை விற்க உலக சந்தை தேவைப்பட்டது.

வளரும் நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. சில நாடுகளின் முதுகெலும்பு ஒரேயொரு பயிரில் உள்ளது. உதாரணத்துக்கு பர்க்கினா ஃபேசோ(Burkina Faso) என்ற வட ஆப்பிரிக்க நாட்டின் பருத்தி. அதிக தொழில்நுட்ப வசதியின்றி செய்யும் விவசாயத்தால் செலவு அதிகம் ஆகிறது. இதை வேறு நாடுகளுக்கு விற்று உணவை வாங்கலாம் என்று உலகச் சந்தைக்கு கொண்டுவந்தால், மானியங்கள் உதவியுடன் விளைவிக்கப்பட்ட அமெரிக்க பஞ்சு குறைந்த விலையில் அங்கே கடைவிரித்திருக்கிறது.

நியாயமாக மானியங்கள் எதுவுமின்றி அல்லது மிகக்குறைந்த மானியத்தில் விளைவித்திருந்தால் அமெரிக்க பஞ்சை இவ்வளவு குறைவான விலைக்கு விற்கமுடியாது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நாடுகள் மானியம் வழங்குவது இயல்புதான் ஆனாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மானியம் 300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு மானியம் வேறு எங்கும் இல்லை, கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் டாலர் மானியம்.

இது போன்ற ஏற்றத்தாழ்வுள்ள கொள்கைகளைக் கொண்டு ஒரு ஆரோக்கியமான, எல்லா நாடுகளும் பயன்பெறும் வர்த்தகத்தை செய்ய முடியாது, கொள்கை மாற்றம் தேவை என்று வளரும் நாடுகள் தலையெடுத்துள்ளன. வளரும் நாடுகளின் ஜாம்பவானாக இருக்கும் சைனா இந்த கொள்கை மேம்பாட்டில் அதிக அக்கறை காட்டிக் கொள்ள விருப்பமில்லாதது போல் நடந்து கொண்டிருக்கிறது. காரணம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுடன் அதன் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்ற எண்ணம். அதனால் இந்தியாவும் பிரேசிலும் வளரும் நாடுகளின் பிரதிநிதிகளாக தங்களை உயர்த்திக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்துகின்றன.

உலக அரங்கில் இந்தியா ஒரு வலுவான இடத்துக்கு முன்னேற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisements
%d bloggers like this: