jump to navigation

கௌரவப் பிச்சை Friday September 12, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

அமெரிக்காவில் பிச்சைகாரர்களே கிடையாது தெரியுமா?“

”அங்கே ஏழையே கிடையாது, அப்புறம் எப்படி பிச்சைக்காரர்கள்?“

நம்மூரில் அமெரிக்கா பற்றி பேசினால் சில சமயம் பேச்சினூடே வரும் ஒரு பகுதிதான் இது.

கடந்த இரண்டரை ஆண்டு அமெரிக்க வாழ்க்கையில் ஓரிரு சமயங்களில் சாலையோரங்களில் பிச்சைக்காரர்களை பார்த்ததுண்டு. ஒரு அட்டையில் ”ஹெல்ப் ப்ளீஸ்” என்று கையில் பிடித்துக்கொண்டோ, முன்னால் ஒரு குவளையை வைத்துக்கொண்டோ உட்கார்ந்த்ருப்பார்கள். ஆனால் இன்று ஒரு கவுரவ பிச்சைக்காரரைப் பார்த்தேன்.

வழக்கமாக மதிய உணவுக்கு நான் அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் மாலுக்குச் செல்வது வழக்கம். சில சமயங்களில் ட்ரெயின் பிடித்து இரண்டு ஸ்டாப் தள்ளி டவுன்டவுனில் இருக்கும் இந்திய உணவகத்துக்குச் செல்வதுமுண்டு.

இன்று மாலுக்குள் நுழைந்தவுடன் ஒரு ஆள் என்னிடம் வந்து, “சார், ஒரு உதவி பண்ண முடியுமா என்றார்.”

ஆள், ஒரு சராசரி அமெரிக்கர்தான். சற்று கசங்கிய வெள்ளை சட்டையும் காக்கி பேன்ட்டும் அனிந்திருந்தார்.

“என்ன விஷயம் சொல்லுங்கள்” என்றேன்.

இந்த மால் வழக்கமான அமெரிக்க மால் இல்லை. அந்த காலத்து ரயில்வே ஸ்டேஷன். ஒரு காலத்தில் அமெரிக்காவின் மேற்கு பக்கம் செல்வதற்கு ஒரு முக்கிய சந்திப்பாக இருந்தது. அமெரிக்கர்கள் வீட்டுக்கொரு கார் வாங்கி ட்ரெயின் பஸ்ஸுக்கெல்லாம் டாட்டா காட்டிவிட்டதால் இந்த ஸ்டேஷனை தேசிய வரலாற்றுச்சின்னமாக அறிவித்துவிட்டார்கள். பல மில்லியன் டாலர் செலவு செய்து ஆர்கிடெக்சரை மாற்றாமல் புதுப்பித்து உள்ளே பல கடை விரித்துவிட்டார்கள். புத்திசாலித்தனமாக ஒரு ஹோட்டலையும்(Hyatt) உள்ளே கட்டிவிட்டார்கள். வெளியிலிருந்து பார்த்தால் மால் மாதிரியே தெரியாது. மணிக்கூண்டுடன் இந்த இடம் ஒரு ரயில்வே ஸ்டேஷன் மாதிடரியே இருக்கும். இதை ஒரு சுற்றுலாத்தலமாக அறிவித்துவிட்டதால் கணிசமான கூட்டம் இருக்கும். ஹோட்டலில் அவ்வப்போது சில கான்ஃபரன்ஸ் நடக்கும். அந்த நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே இருக்கும். இன்று அப்படிப்பட்ட ஒரு நாள் என்று நினைக்கிறேன்.

கட்டட அமைப்பை மாற்றாமல் புதுப்பித்ததால் கழிவறையை கண்டுபிடிப்பது சற்று கடினம். மேற்படி ஆள் கழிவறையைத்தான் தேடுகிறார் போலும் என்று நினைத்து கையை அந்தப்பக்கம் காட்டலாம் என்று பாக்கெட்டிலிருந்து கையை எடுத்தேன். அதற்குள் அவர்,

“என்னுடைய காரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது, ஒரு கேலன்(gallon) பெட்ரோலுக்கு ஒரு டாலர் குறைகிறது, உங்களிடம் இருந்தால் தர முடியுமா என்றார்”

என்னிடம் கையில் காசில்லை, ATMஇல் பணம் எடுத்து சாப்பிட போகலாம் என்றுதான் அதை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அவரிடமும் அதைச் சொன்னேன். சொல்லும்போது அவர் முகத்தை கவனித்தேன். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. வழக்கம்போல சட்டென்று ஞாபகம் வரவில்லை.

கூடவே வாருங்கள் ATMஇல் எடுத்து சில்லரை மாற்றி தருகிறேன் என்றேன். அவர்

“பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தார்.

ATM போய் பணம் எடுத்துக்கொண்டே அவரை எங்கு வேறு பார்த்தேன் என்று யோசித்தேன். ஃபாஸ்ட் ஃபுட் ஒன்றில் உப்புச்சப்பில்லாத ஒரு சாண்ட்விச்சை வாங்கிக் கடித்துக்கொண்டே யோசித்தேன்.

பல நிகழ்வுகளை இணைத்து முடிச்சுபோட்டு பிரச்சினை தீர்க்கும் மனித மூளையின் திறமை அபாரமானது. யெஸ்! சென்ற மாதம் இந்திய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ரயிலுக்காக காத்திருந்த போது இதே ஆசாமி இதே கெட்டப்புடன் ஒரு டாலர் கேட்டார்! அப்போது காரணம் வேறு.

“சார், என்னோட கார் திருட்டு போயிட்டுது, போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்திருக்கேன். வீட்டுக்குப் போக டிக்கெட் எடுக்கனும், ஒரு டாலர் தரமுடியுமா?”

அப்போது கையில் காசிருந்ததால் கொடுத்துவிட்டேன்.

ஒரு மாசத்துக்குள் ஒரே ஆள் ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரே ஆளிடம் உதவி கேட்பதென்பது தற்செயலான காரியமாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட நூதனமான பிச்சைக்காரரை இந்தியாவில் கூட நான் சந்தித்ததில்லை! (அதற்காக அப்படி யாரும் இல்லை என்று அர்த்தமில்லை)

Advertisements
%d bloggers like this: